பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?

ஒரு பாலியல் தொழிலாளி பங்கேற்ற விவாத அரங்கின் தொகுப்பில் இருந்து இவை தரப்பட்டுள்ளன. மிக நீண்ட, சிந்திக்க வேண்டிய விவாதம் என்பதால், இரண்டு பதிவுகளாக இட உத்தேசித்துள்ளேன் நண்பர்களே. ஜமீலாவின் பேச்சில் மலையாளவாடை இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.


பாலியல் பற்றிய விவாதம் தேவையா, இல்லையா என்பதே விவாதத்துக்கு உரிய ஒன்றாகி விட்டது. தயங்கித் தயங்கி முணுமுணுக்கப்பட்ட ஒரு விஷயம் இன்று அரங்க விவாதத்துக்கு வந்து விட்டது. நாளை வீதிக்கும் வரும்; வர வேண்டும். இதற்கெல்லாம் காரணகர்த்தா எய்ட்ஸ். எச்.ஐ.வி., விழிப்புணர்வு, உயிர் பயம் என்ற பின்னரே, உலகுக்கு பாலியல் தொழில் குறித்த விவாதத்தின் மீது அக்கறை வந்தது.
இருளோடு தொடர்புடையதல்ல பாலியல் என்ற அடிப்படையில் சமீபத்தில் அனல் பறக்கும் விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது, திருப்பூர் "பதியம்' அமைப்பு.
விவாதத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் நளினி ஜமீலா; கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி. அவர் எழுதிய சுயசரிதை புத்தகம், பெண்ணியம் பேசுபவர்களையும், முற்போக்குவாதிகளையும் திரும்பி பார்க்க வைத்தது. இத்துறையின் மீதான பலரின் கவனத்தையும் திகைக்கச் செய்து ஈர்த்தது.
குளச்சல் மு.யூசுப் "நளினிஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை' என தமிழாக்கம் செய்துள்ளார். புத்தகத்தின் மீதான கருத்துப்பதிவாக துவங்கி, பாலியல் தொடர்பாக அனல் பறக்கும் விவாதமாக மாறியது அந்நிகழ்ச்சி.
பெரிய அளவில் பெண்கள் பங்கேற்காத போதும், இளம்பெண்கள் சிலர் பங்கேற்றனர். சங்கோஜமின்றி அவர்கள் பங்கு பெற்ற வி(வா)தம் இளைய தலைமுறையின் விசால அறிவை வெளிக்காட்டியது. முதலில் ஜமீலா பேசினார். பின்னர் தொடங்கியது விறுவிறு விவாதம்.

ஜமீலா பேசியதிலிருந்து...
கேரளாவில் 33 ஆண்டுகள் பாலியல் தொழிலாளியாக இருந்தேன். எச்.ஐ.வி., விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில், மற்ற துறையினர் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்ள, அரசுக்கு எங்களின் உதவி தேவைப்பட்டது.
"நான் ஒரு பாலியல் தொழிலாளி' என்று சொல்லிக் கொள்வதில் சங்கடம் இருந்தது. ஆனால், விருப்பப்பட்டு யாரும் இத்தொழிலுக்கு வந்து விடுவது இல்லை. விபத்தாக, காலச்சூழ்நிலையின் விளைவாக இதில் தள்ளப்படுகிறோம்.
ஆனால், சமூகம் எங்களைக் குற்றவாளியாக மட்டுமே பார்த்தது; பார்க்கிறது. விருப்பமில்லாத ஒருவரை எங்களுடன் உறவு கொள்ள அழைத்து விட முடியாது. இதுகுறித்த வழக்கில், ஆண்களை விட்டு விட்டு, பெண்களை மட்டும் அரசுத்துறை தண்டிக்கிறது.
போலீசார் எங்களை அடித்து, பணத்தைப் பறித்துக் கொண்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, பிறகே கோர்ட் மூலம் தண்டனை பெற்றுத் தருகின்றனர். ஒரு தவறுக்கு, அதுவும் எங்கள் மீது திணிக்கப்பட்ட தவறுக்கு, நான்கு முறை தண்டனை பெறுகிறோம். என் வாழ்க்கையை எழுதும் போது, இப்புத்தகம் எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தரும் என்றோ, சுதந்திரத்தைத் தரும் என்றோ எனக்குத் தெரியாது.
ஆணாதிக்கம் பேசும்போது, பெண்களுக்கும் சேர்த்து வேலை செய்தல், பாதுகாப்பு என்று பல விஷயங்கள் உள்ளடங்கி உள்ளன. ஆனால், பெண்களுக்கு சுதந்திரம் என்று வரும்போது மட்டும், வீட்டுக்குள் அடங்கிக்கிட; சமையலறையே உன் கதி என்று சொல்லி விடுவர். ஆனால், எங்களைப் போன்ற பாலியல் தொழிலாளர்கள், ஆண்களின் அடக்குமுறை இல்லாததால், நிறைய சுதந்திரத்துடன் உள்ளோம். அதற்காக, எல்லா பெண்களும் பாலியல் தொழிலாளியாக மாறி, அதற்குப்பின் சுதந்திரமாக இருப்பது என்று அர்த்தமில்லை.
இந்த விவாத அரங்கிற்கே, பெண்களை யாரும் அழைத்து வரவில்லை. சினிமாவுக்கு உங்கள் பெண்களை அழைத்துச் செல்லாமல்தான் இருக்கிறீர்களா. "இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நீ கேட்கக்கூடாது. நாளை பாலியலைப் பற்றி பேசினால், என்னால் பதில் சொல்ல முடியாது' என்ற பயம் இருக்கிறது.

ஆண்களுக்கு பாலியல் பற்றித் தெரியவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், பொது இடத்தில் அதைப் பேசலாமா கூடாதா என்ற தயக்கம் இருக்கிறது.
பாலியல் உறவு என்பது இருட்டறையில் மட்டும் நடக்கக்கூடியது; இரண்டு பேருக்கு தெரிந்து மூன்றாவது நபருக்கு தெரியக்கூடாத விஷயம், என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி பொண்டாட்டிக்கு புருசனோடு பேசுவதற்குக்கூ கூட அவகாசம் இல்லை. "ஆணுக்கு தெரிந்ததற்கும் மேல் அவங்களுக்குத் தெரிந்தால், அது எங்கிருந்து தெரிந்தது என்ற சந்தேகம் வரும். பொண்டாட்டிக்கு எப்படித் தெரியும். யார் சொல்லித் தந்தது' என்ற கேள்வி எழும்.
என்வாடிக்கையாளர்களிடம் விளையாட்டுத்தனமாக கேட்டதுண்டு. நீங்கள் இப்படி வருவது உங்கள் பொண்டாட்டிக்குத் தெரியுமா என்று.

"அப்பப்பா அப்படி நெனைக்கக்கூட முடியாதுன்னு' சொல்வாங்க. ஏன் உங்கள் மனைவிக்கு அந்தமாதிரி உணர்வே இல்லையா என்று கேட்டால், அவளுக்கு தெரிந்தால், ஆயிரம் கேள்வி கேட்பாள், அதற்கு என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, என்பர்.
ஆனால், அதே ஆண்கள் பாலியல் தொழிலாளியுடன் உறவு கொள்ள வரும்போது,
"உனக்கு ஏன் இந்த செக்ஸ் பற்றி தெரியவில்லை; அந்த செக்ஸ் பற்றி தெரியவில்லை, ஏன் இந்த மாதிரி உறவு கொள்ளக்கூடாது, அது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை' என்று, நிறைய கேள்வி கேட்பார்கள்.
ஆனால், இதையே நாங்கள் திருப்பிக் கேட்டால் பதில் கிடைப்பதில்லை. எங்களுக்கே பதில் கிடைக்காத போது, குடும்பப் பெண்களுக்கு எப்படிப் பதில் கிடைக்கும்.
மத்த எந்த விஷயத்துக்கு உரிமை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட, பாலியல் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்காக, பாலியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் உறவு என்றால் என்ன, எந்த சமயத்தில் உறவு கொள்ளக்கூடாது, யாருடன் உறவு கொள்ளக்கூடாது; நம்மீது பாலியல் தாக்குதல் நடந்தால் எப்படி சமாளிப்பது, என்பன போன்ற அறிவு பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு வேண்டும்.
அந்தக்காலம் போல இல்லை இப்போது. பெண்கள் இரவில் தனியாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. பாலியல் வன்முறைகளை தவிர்க்க, அந்த தொழிலில் இளம்பெண்கள் தள்ளப்படுவதை தவிர்க்க, பாலியல் குறித்து விவாதிக்க வேண்டும்.


பாலியல் பற்றி பேசுபவர்களும்; அதுபற்றி தெரிந்தவர்களும், பாலியல் தொழிலாளி, அவர்களின் வாடிக்கையாளர்கள் என்று கருதக்கூடாது. பாலியல் பற்றி விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, எங்களிடம் வெறுமனே பேசிச் செல்வதற்காக வருபவர்களும் உண்டு.
பாலியல் தொடர்பாக பொதுக்கூட்டத்தில் விவாதிக்க ஆசைதான்; வேறு வழியில்லாத போது சிறு அரங்கங்களில் விவாதிக்கலாம். "ச்சீ போ' என்று பாலியலைப் பற்றி சொன்ன காலம் முடிந்து போய்விட்டது. இணையத்துக்குள் சென்றால், தேவையானவை கிடைத்து விடுகிறது. புத்தங்களும் உள்ளன.
பாலுறவு, சுயஉணர்வுகள், உடல்நலம் பற்றியும் பகுத்துணர வேண்டியுள்ளது.

இந்தப்புத்தகம் எழுதியதற்கு வேறொரு கோணமும் உள்ளது. அடுத்ததலைமுறைக்கு, இந்தமாதிரியான ஒரு பிரச்னை உள்ளது என்று தெரியவைக்க வேண்டும்.
இதைப்படிக்கும் இளையதலைமுறையினர் அதிகாரிகளாகும் போது, "பாலியல் தொழிலாளிகளைப்பற்றியும், அவர்களின் குழந்தைகள், அவர்களுக்கான பிரச்னைகள் என்ன, எப்படித்தீர்வு காண்பது' என, சிந்திப்பார்கள்.
2010 ல்கூட இதுபற்றி விவாதிக்கக்கூடாது என கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி என்றால் நமக்கு விழிப்புணர்வு வரவில்லை என்றுதான் அர்த்தம்.
கேரள பல்கலையில், என் புத்தகம் உயர்கல்வி பாடத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு சில எழுத்தாளர்கள் "ஷேக்ஸ்பியர் அவுட்; நளினி ஜமீலா இன்' என விமர்சித்தனர். ஷேக்ஸ்பியர் எழுதியது என்ன; நளினி ஜமீலாவின் வரலாறு என்ன, என்றுகூட வித்தியாசம் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தன் உணர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளவும், பாலியல் அறிவியல் பாடம் அவசியம் என, ஜமீலா முடித்தார்.

1 comments:

why not..? who can deny a lady from having multiple sexual relationship... let her no body is going to question.. as long as every thing is public.. and one more thing.. see if its going to be only for mony i mean cos of poverty.. then avvaiyar sonna mari... "kodiyadhuinum kodiyadhu ilamail varumai.. " athuku so called paliyal thozil oru sambathikara vazi nu , no girl should come to a conclusion... making that as an leagal way to earn may give raise to these thoughts.. if its purely for sexual plesure.... ok sure eeither a man or woman can have those things might be sexual vent out centeres which could be created by government... EARNIG or NECESSICITY of money or to be excat poverty should not lead to sexual centers like that that is highly condemed. athyum miri naan apdithaan sambathipen na dharalama they can go and earn in sexual centeres. as i said always exceptions are bound to be there...

But my personal opinion is... oruthiku oruvan illayenral oruvanuku oruthi enru puranathil irunthathaga sollappadum ramanagavo illai savithiri yavo irupathil irukum santhosham multiple relationship il kidaikum santhoshathai vida periyadhu... aana ethana per othupangalo therila pa...

 

Post a Comment