பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

மௌனத்தின் கோப்பை





ஒலிகள் கெட்டிப்பட்டு
கிடந்த சந்தை,
வெண்ணிற சிறகு விரித்த
தேவதையின் வருகையில்
நிர்ச்சலனமானது.

நீட்சி பெற்ற விரல்களால்
கோப்பை ஒன்றை வைத்தது
அத்தேவதை,
"வழியும் அளவுக்கு நிரப்புவோர்
முன்வரலாம்'
வார்த்தைகளை உதிர்த்து விட்டு
காத்திருந்தது.

இரவின் அந்தகாரத்தை எடுத்து வந்து
ஊற்றினான் தனிமை விரும்பி;
உள்ளே நுழைவதற்குள்
உலர்ந்து போயிற்று.

மயானத்தின் நிசப்தங்களை
திரட்டி வந்து கொட்டினான்
வெட்டியான்;
கால்வாசிக்குள்
காணாமல் போயிற்று.

வார்த்தைகளால் வரையறுக்க
இயலாததை
எப்படி விளக்க,
அகராதி தேடியது ஒரு புத்தகப்புழு.

"வழியும் அளவுக்கு மௌனத்தை
நிரப்ப முடியாது'
முணுமுணுத்தான் தர்க்கவாதி.

இவையும், இன்னபிறவும்
பயனற்று போக,
கூட்டத்தில் உ(ம)றைந்திருந்தது
மௌனம்.

யாரும் எதிர்பாராத
கணத்தில்,
நிர்வாணம் உடுத்திய
சிறுமியின் கொலுசொலியில்
நிரம்பி வழிந்தது
மௌனத்தின் கோப்பை.

0 comments:

Post a Comment