பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

நினைவு(வ)றுத்தல்



மின்னொடு வானம் தண்துளி தூவ,
கிள்ளைப் பார்ப்பின் மூக்கினை ஒத்த
செம்பரிதி அமிழும் காஞ்சனப் பொழுதில்,
வெரூப் பாலையின் பெரும்பசி வயிற்றோன்
கொள்ளும் கவளத்துட் சிறுபரல் போல்
இடறுமுன் நினைவை;
கொல்லேற்றின் ரணம் படர் கழுத்தை
அழுத்திச் சிவந்த நுகத்தடியதனை
இரையென விழுங்கி,
குறுமரம் சுற்றும் வனத்து அரவமாய்
செரித்திட நினைக்கையில்,
கிழியுதென் யாக்கை

இரையாண்மை - புணர்ச்சி விதி



இரை+ஆண்மை
இரையாண்மை

நின்றதின் மேல் வருமொழி புணர்ந்தது

"ஐ' வழி(லி)யால்,
"ய'வ்வெனத் திரிந்தது உயிர்; கிடந்தது உடல்.

உடல் மேல் உடல் வந்து யவ்வியதில்,
'ஆ'காரமும், ஆகாரமும் அடிபட்டுப் போனது.

இறை ஆண்மை கெட்டதால்,
இரை பெண்மை கெட்டது.

இரையே இங்கு வரவேற்றதால்,
வந்து புணர்ந்ததெல்லாம்,
வன்புணர்ந்தது.

வழுக்கல் என்பதால்
வழு, வழுவமைதி ஆனது

புணர்ச்சியின் இறுதியில்,
திரிந்தது ஆண்மை;
இறைஞ்சிய போதும்
எஞ்சியது இரை.

சொல், பொருள்
எப்படி நோக்கினும்
இது விகாரப்புணர்ச்சி