
கண்கள் மட்டும் தெரியும்
முகக் கவசமணிந்து,
கருநிறப் புரவியில் ஆரோகணித்து
வருவாய் என கற்பிதம் செய்திருந்தேன்.
நீயே முகத்துக்கு மட்டும்
கவசம் பூண்டிருந்தாய்.
கைக்குப்பதிலாக கொடுநாவில்
வைத்திருந்தாய்
வார்த்தைச் சாட்டைகளை.
எனக்காக உலகை விலை பேசுவாய்
என்றிருந்தேன்; நீயும் பேசினாய்
உனக்கான விலையை.
தொலைபேசி அழைப்புகளோடு
ஒப்பிடுகையில்,
என் கண்களின் அழைப்பை
கவனிக்க நேரமில்லை உனக்கு.
நின்று, நிதானித்து,
உள்ளுக்குள் பிரவகித்து,
உட்புகுந்து, வெளிவந்து,
எழுந்து, மூழ்க
வேண்டும் எனக்கு;
நீயோ
அவசர கதியில்
மென்று துப்பிவிடும்
வேகத்தில் இயங்குவாய்.
உனக்குள் ஏதோ ஒன்று
விழித்துக் கொள்ளும்போது
எனக்குள் ஒன்று
உடைந்து கொள்கிறது.
அந்த நேரங்களில்
தாழற்ற கழிப்பறையில்
இருப்பதாக
உணர்கிறேன் நான்.
7 comments:
குட் ஒன்...
super. feelings make the sense correct.
very nice one specially the end. Good luck
//உனக்குள் ஏதோ ஒன்று
விழித்துக் கொள்ளும்போது
எனக்குள் ஒன்று
உடைந்து கொள்கிறது.
அந்த நேரங்களில்
தாழற்ற கழிப்பறையில்
இருப்பதாக
உணர்கிறேன் நான்.//
ஆஹா... ! நல்லதொரு உணர்வுக் (ஊமை) கவிதை.
Gud One.. :)
நல்ல கவிதை தொடருங்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் நன்றி நண்பர்களே
Post a Comment