பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

'கண்டக' குதிரைகள்இரவின் நிசப்தம் கலைந்து விடாமல்

களையப்பட்டன அணிகலன்கள்;

ஆடைகளும் பாரமோ,

உரியப்பட்டன துகில்கள்.


கழல், குண்டலம், கணையாழி

இத்யாதி இத்யாதிகள்;

எவையெல்லாம் பாரமாகுமோ

அவையெல்லாம் அகற்றப்பட்டன,

இதந்தரு மனையும், மனையும் நீங்கினான்.

வெண்ணிப்பறந்தலையில் பிறர் வெட்க,

போர்புரிந்த கரிகாலனின்

திருப்தி இருந்தது முகத்தில்;

புதிதாய் பிறந்தது போல், எதுவும் இல்லாமல்.உயிரற்ற சுமைகள், உணர்ச்சிகள் அகன்ற பின்

சுமப்பதற்காகவே இருந்த புரவி

பின்தொடர்ந்தது நிழலாய்; நள்ளிரவிலும்.

தண்ணொளி பட்டு மின்னிய

ஆற்றின் கரையில்

இறுதியாய் புரவியையும் நீங்கினான்;

புரவி இறக்கி வைத்தது உடல் சுமையை;

அவன் கால்களை நாவால் ஈரப்படுத்திய பின்;

தன் உயிர்ச் சுமையையும்.

சித்தார்த்தன் புத்தன் ஆவதிலும்

இருக்கிறது சிக்கல்

இறக்க வேண்டி இருக்கிறது

'கண்டக' குதிரைகள்.
குறிப்பு:சித்தார்த்தன் குதிரையின் பெயர் கண்டகம்