பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

கேப்டன் போடும் டாஸ்

பச்சையான சந்தர்ப்பவாதம். வேறென்ன சொல்ல. வழக்கமான அரசியல்வாதிகளைப் போலத்தான் தானும்;திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் வெறும் பாவ்லா என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த்.தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தன்னை
முன்னிறுத்திக் கொண்டார் கேப்டன்(!?). இளைஞர்களை கவரும் விதத்திலான எளிமையான பேச்சு; இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத போதும்,
திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என தன்னைக் காட்டிக் கொண்ட விதம் என்பன போன்றவற்றாலும்; இதுவரை வாக்களிக்கச்
சென்றிடாத சில சதவீத வாக்குகள் பதிவான போது, அது தே.மு.தி.க.,வுக்கு என மாற்றிக் கொண்டதும் அரசியலில் விஜயகாந்தின்
வளர்ச்சிக்கு காரணங்கள்.உண்மையில் இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதான். லோக்சபா தேர்தல் என்பதால், தமிழகத்தில்
புறம்தள்ளி விட முடியாத ஒரு கட்சி போல் தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அவர் மக்கள் தன் மீது வைத்த
நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னும்(நான்கு ஆண்டுகள்) அதே முறையிலான அரசியல் பேச்சுகள் மக்களை சலிப்படையச்
செய்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, குட்டிக் கோடம்பாக்கத்தில்(பொள்ளாச்சி) "மரியாதை' பட
ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். சட்டசபை கூட்டத்தொடருக்கு செல்லவில்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு "இப்போது
தொழிலுக்காக வந்துள்ளேன். அதைத்தான் பார்க்கப் போகிறேன்' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.தொழில் முக்கியம் என்பவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?கோவை விமான நிலையத்தில் வழிமறித்த செய்தியாளர்கள் , இலங்கைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் எதுவும்
சொல்லாமல், "தொழிலை கவனிக்கவே வந்தேன் வேறேதுவும் கேட்க வேண்டாம்' என மழுப்பினார்.எல்லோரையும் போல அவருக்கும் திடீரென விழிப்பு வந்தது. ஈழத்தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என அழைப்பு விடுத்தார்(யாருக்கு?).தமிழினத்தலைவர் என அழைத்துக் கொள்ளும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனத்துவங்கி, அப்பா
என மரியாதையாய்(!) அழைத்து வந்த கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.இறுதி வரை தனியாகத்தான் போட்டியிடுவேன்; மக்களை மட்டுமே நம்புகிறேன் என்று கூறி வந்தவர்; டெல்லியில்
காங்.,மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை நீங்கள் படிக்கும் போது அனேகமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கலாம். பா.ம.க., மட்டுமே இப்போது விஜயகாந்த்
கூட்டணியில் சேர்வதற்கான "செக்'.பா.ம.க.,வுக்கு எதிரணியில் சேர்வதுதான் கேப்டனின் திட்டம். இரட்டை இலக்கத்தில் சீட் கோரி வரும் விஜயகாந்த் தனியாக
போட்டியிடுவேன் என்ற வார்த்தை தர்மத்தை மீறி விட்டார். மற்ற கட்சியினரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்தவர், அரசியல்
சதுரங்கத்தில் தானும் மக்களை வெட்டுக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சாதாரண அரசியல்வாதி என்பதை
நிரூபித்து விட்டார்.ஒரு திரைப்படத்தில், "நான் வருவேன், வரமாட்டேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வந்தா உறுதியா வருவேன்' என பிரபல
நடிகரை தாக்கி "பஞ்ச்' டயலாக் பேசியவர், இப்போது, கூட்டணி இல்லை; நான் தெளிவா இருக்கேன்; கூட்டணி பத்தி மூன்று
நாட்களில் சொல்வேன்' என விளக்கெண்ணை வாதம் பேசி வருகிறார்.கேப்டன் எடுக்கும் முடிவை பொருத்தே அவர் கட்சியின் எதிர்காலம்(!) அமையும் கூட்டணியா இல்லையா என்பதை டாஸ் போட்டு பார்ப்பாரா கேப்டன்?

இனி சர்க்கஸ் பார்ப்பதில்லை'

லேசான மனதுடன் தான் சென்றேன் அந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு... குழந்தைகள் முதல், பெரியவர் வரை அனைவரையும்
குதுõகலப்படுத்தும் அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்னை மட்டும் கனத்த மனதுடன் வெளியே அனுப்பியது. இறுகிப்பிடிக்கும்
உடை; வளமையான உடல்வாகு; வெண்ணிற தோல்; ரஷ்ய, நேபாள பெண்களுக்கே உரிய முகவெட்டு இவற்றைப்பார்த்தால்
என்ன தோன்றும்; என்ன தோன்ற வேண்டும்? வழக்கமான இளமைக்குறும்புகள் குறுகுறுக்கவில்லை.அந்த பெண்களின் முகத்தில் வேறு எந்த பாவங்களும் வெளிப்படவில்லை. சாகசம் செய்யும் போது, தன்னை மறந்து பொதுமக்கள்
கைதட்டியவை சில நிகழ்ச்சிகளே. பெரும்பாலான நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசித்தார்களே தவிர, கைதட்டவில்லை.
அப்போதெல்லாம் சக கலைஞர்களே கைதட்டி உற்சாகப்படுத்தினர். வாயில் மண்öண்ணையை வைத்துக் கொண்டு, அக்னி ஜூவாலைகளை கக்கும் போது, சாகசத்தை ரசிக்க முடிந்தவர்கள் கடைசி
வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் மட்டுமே. முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் ரசித்திருக்கக்கூடும்; என்னைத் தவிர.
சாகசமாக பார்க்க முடியவில்லை அதை. வயிற்றுப் பிழைப்புக்காக செய்து பார்க்கும் மரண விளையாட்டாகவே தோன்றியது.ஒரு நாளைக்கு மூன்று முறை, அரைகுறை உடையுடன் அந்தரத்தில் மிதந்தும், ஒற்றைக்காலில் உயரக்கம்பியில் சாகசம்
செய்வதும் அவர்கள் சாகசத்தை விரும்பி ஏற்றதால் செய்யவில்லை என்பது அவர்களின் முகபாவத்தில் தெரிந்தது.அவர்களின் வெளி உலக பிரக்ஞை எப்படி இருக்கும்? நான்கு சுவர்களுக்குள் மன்னிக்கவும் சுற்றிலும் கட்டப்பட்ட
துணிச்சுவர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள், வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின்
ரசனை எப்படி இருக்கும். நாம் பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு செல்வது போல், அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு செல்வார்கள்?
சினிமாவுக்கா. அதில் வரும் சாகச நிகழ்ச்சிகளை பார்க்கும் போது என்ன தோன்றும்? அந்த சாகசத்தை பார்க்கும் போது கைதட்டத்
தோன்றுமா அவர்களுக்கு? அல்லது இதை விட நம்மால் நன்றாக செய்திருக்க முடியும் என்று தோன்றியிருக்குமோ? இத்தனை
எண்ணங்களும் தோன்றின ஒரே சமயத்தில்...ஆவலும், ஆதங்கமும் உந்த அவர்களுடன் கலந்துரையாடினேன்..(மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன்) பைக்கில் சாகசம் செய்பவர் ஒரு நேபாளி இளைஞன். அடுத்த மாதம் திருமணமாம். பயமாக இல்லையா என்றேன். "எதற்கு பயம்,
துவக்கத்தில் சற்று இருந்தது. இது எனக்குப்பிடித்த வேலைதான். பைக் ஓட்டுவதற்கு மட்டும் யாராவது சம்பளம் தருவார்களா.
அதனால்தான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிறேன். "விழுந்திருக்கிறீர்களா என்றேன்'. ஒரே முறை ஆனால் உயிர் போகவில்லை என்றார்
சிரித்தபடி. அவரின் வருங்கால மனைவி கொஞ்சம் பயந்த சுபாவமாம்!ஐந்து, ஆறு தொப்பிகளை பறக்க விட்டு பிடித்தல், தட்டுகளை பறக்கவிடுதல் போன்ற சாகசங்களை பேன்சி ஐட்டம் என்கிறார்கள்.
நடுத்தர வயதை தாண்டிக்கொண்டிருக்கும் கேரளவாசியிடம் பேசியபோது, "நானும் "பார்' விளையாடியவன்தான். ஒரு முறை
பயிற்சியின் போது தவறியதில் மூன்று மாதம் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அதன்பின் பேன்சி ஐட்டங்களில் கவனம்
செலுத்துகிறேன். என்னைப் போல் பலரும் இப்படித்தான், இளமையில் சாகசம் செய்து விட்டு, சற்று வயதானால், பேன்சி
ஐட்டங்களில் தஞ்சமடைகிறோம்,' என்றார். அவரது மகள்கள் இருவரும் கேரள பள்ளியில் படிக்கின்றனராம். எப்போவாவது வீடு
செல்வார்களாம்.இது இந்தியாவின் பாரம்பரிய கலை. மத்திய அரசு அழிந்து வரும் கலையாக அறிவித்து, பாதுகாப்போம் எனக் கூறியபோதும் அரசு
இயந்திரங்கள் வழக்கமாக "கிறீச்'ஒலியுடன் மெதுவாகத்தான் சுழல்கின்றன. கேரளாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியம்
வழங்கப்படுகிறதாம். ஒரு குட்டி கிராமமே உள்ளிருக்கிறது கூடாரத்துக்குள். கலைஞர்கள் இருநுõறு பேர் என்றால் உதவியாளர்களும் சரிசமமாக
இருக்கின்றனர். நானுõறு பேருடன், குதிரைகள், யானை, நாய்கள் என விலங்குகளின் பட்டாளமும் இருக்கிறது. ஒரு நாளுக்கு
30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது அந்த கூடாரத்துக்குள்.பருவகால மாறுபாடு, மழை, அறுவடைக்காலம் இவையெல்லாம் பார்த்துத்தான் அடுத்த ஊருக்கு கிளம்பிச் செல்ல
வேண்டியிருக்குமாம். இல்லாவிட்டால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.யானைப்பாகனிடம் சென்றேன். மதுரைத்தமிழன். உற்சாக பான வாடை அடித்தது. "இது இல்லாமல் இருக்க முடியலே. ஆனா
அதிகம் அடிக்க மாட்டேன். கொஞ்சம் வேணும் பழகிப் போச்சு' என்றவரிடம், "எவ்வளவு பெரிய உயிர். பிச்சை எடுக்க
விடுகிறீர்களே? பாவம் இல்லையா' நீண்ட நாள் ஆதங்கத்தை கேட்டே விட்டேன். சில வினாடிகள் மௌனம் சாதித்தவர் நீண்ட பெருமூச்சுடன் சொன்னார் "எங்களுக்கு மட்டும் ஆசையா ? அவனவன் கஷ்டம்
அவனவனுக்கு' என்றவர் வேறெதும் பேச விருப்பமில்லாதவர் போல் யானையின் துதிக்கையை நீண்ட நேரம் தடவியவர், அதன்
உணவுக்காக வைத்திருந்த தென்னங்குருத்துகளின் மேல் குத்துக்காலிட்டு அமர்ந்து எங்கோ வெறித்தார்(என்ன
தோணியிருக்கும்).உருவத்தில் மட்டும் வளர்ச்சி குன்றிய, ஜோக்கராக மகிழ்விக்கும் மனிதர்கள் அப்போதும் சிரித்தபடி ஒரு வயசாளியிடம்
வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். ஒரு 13 வயது சிறுமியிடம் பயிற்சியின் போது நேர்ந்த தவறுக்காக திட்டிக்கொண்டிருந்தார் ஒரு
இருபது பிளஸ் வயதுகளில் இருந்த பெண் மணி. கூடாரத்தின் ஒரு மூலையில் நின்று அனைவரையும் ஒரு முறை பார்த்தேன்
அங்கே வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர் வைரஸ் பற்றியோ, ஒபாமாவின் பதவியேற்பு பற்றியோ,
சச்சினின் நியூசி., மண்ணில் முதல் சதம் பற்றியோ அங்கு பேசப்படவில்லை. அங்கு இயங்கிக் கொண்டிருந்தது வேறு உலகம்.வெளி உலகத்தில் இருந்து வந்தவர்களை கைதட்ட வைக்க அடுத்த காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.அந்த நிறுவனத்தின் வெளிவட்டார வேலைகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகி ஒருவர் எப்படி இருக்கிறது
எங்கள் உலகம் என்றபடி குளிர்பானம் ஒன்றை தந்தார். வாங்கி அருந்தத் தோன்றவில்லை எனக்கு. மறுத்து வெளியேறினேன்
என்னுடன் வந்த புகைப்படகலைஞர் ஒருவருடன்.வெளியே சர்..,ரென கடந்து போயிற்று ஒரு நவீன மாடல் கார். நெரிசல் மிகுந்த சாலையைக் கடக்கும் சாகசத்துக்கு
தயாரானேன் நான். சங்கல்பம் செய்தேன் நான் "இனி சர்க்கஸ் பார்ப்பதில்லை'