பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

இடந்தலைப்படுதல்


முட்டுச்சந்து,
முடைநாற்றத்துடன்
கோணியே சுவராய் ஒரு மறைவிடம்,
புளியமரம் புறங்கடை ஒதுக்கு,
மேற்கூரையின் விரிசல்களுக்கிடையே
பல்லிகளூரும் பாழறை...
ஏதோ ஓரிடம்
உராய்ந்து விட்டுப் போகிறது கழுதை
சுவருக்கென்ன சுகம்?

அது சிவமாக இருக்கலாம்...நில்!
கீச்சுக்குரலில் அதட்டியது சிவம்..

வார்த்தை மீறியது குற்றமே
இனி இது நிகழாது,
தட்சயாகம் சம்ஹரித்த பின்
சக்தி கெஞ்சினாள்.

முடியாது,
முரண்டு பிடித்தது சிவம்.

முயற்சி மெய்வருத்தியும்
கூலி இல்லை; வெகுண்டாள் சக்தி
தனித்தியங்குவேன்
முரசு கொட்டினாள்.

நானின்றி நீயா; ஒருக்காலும் நடவாது
கெக்கலித்தது சிவம்.
சக்தியில்லையேல் சகலமும் இல்லை
நீ சரசமாடக்கூட சக்தி தேவை,
எக்களித்தாள் சக்தி.

அடி முடி காணவியலா ஜோதி நான்,
ஆங்காரமிட்டது சிவம்.

முயன்ற இருவருமே ஆண்கள்
முடியாது என நான் புகலவில்லை,
அலட்சியப்படுத்தினாள் சக்தி.

நான் நெருப்பு;
சகலத்திலும் தானாகும்
வல்லமை நெருப்புக்கு உண்டு
ருத்ரன் தாண்டவம் பூண்டால்
கிழியும் ககனம்
சகலமும் தகனம்,
சப்தித்தது சிவம்.

ஹா...அக்னியின் வெம்மை நான்
நீங்கினால் குளிரும்
நேத்திரன் பெருமை,
குறும்பு கொப்பளித்தது சக்தியிடம்.

சினம் கொண்டது சிவம்
தத் தித் தரிகிட தளாங்கு தரிகிட
தித் தித் தரிகிட தீம் தீம் தரிகிட
நாட்டியம் கைக்கொண்டு
நாரசாரமாய்க் கூவியது.

சிவத்தின் தாண்டவக் கோலம்
கண்டஞ்சின பூதங்கள்;
மருண்டனர் மகரிஷிகள்
அக்கணம் கூடின
அனைத்துக் கணங்களும்
நிகழ்வின் சாட்சியாய்.
பிரேதச் சாம்பலும்,
பிள்ளையின் ஓடும் தெறிக்க
சிவ நடனத்தில்
காந்தல்.

லாவண்யத்துடன்
லாவகம் காட்டினாள் சக்தி
கால் பாவினாள்,,நடந்தது நதி;
வீசினாள் கை,,அலைந்தது அனந்தல்;
விழுந்தது குழல்,,எழுந்தது கொண்டல்;
நிமிர்ந்தது நெஞ்சு,,உவந்தது வெற்பு;
அடவு காட்டினாள்,,அசைந்தது அருவி;

நூபுர இசையில்..வெட்கியது யாழ்
உலவினாள்,
நின்றாள்,
மூழ்கினாள்,
பிரவகித்தாள்,

மொத்தத்தில்
சக்தி நெய்தது நாட்டியத் தறி
சடுதியில் கோணியது சிவத்தின் குறி

ஊழித்தீயாய் உக்கிரம் சிவத்துக்கு
இடக்கால் கொண்டு
வலக்காது தொட்டு,
குண்டலம் கழட்டியது சிவம்
நான் பொன்னார் மேனி,
நீ காலுயர்த்த தெரியுமுன் யோனி
குரூரமாய்ச் சிரித்தது அந்தச் சவம்.

ஆயினுமென்,
சன்னத்தமானாள் சக்தி.
அகிலம், அண்டம்
அனைத்துமே அழியும்
பொறுத்தருள்க,
குமரனின் நிலையும்,
குவலயத்தின் நிலையும்
என்னாவது?
இறைஞ்சின கணங்கள்.

ரிஷிகளை நீங்கினர் பத்தினிகள்
கொற்றவை என்னும் கோலம் கொள்,
வேண்டினர் அவளை,
சாந்தம் கலைத்தது
சண்டமாருதம்;
கோர வாயில் குருதி ஒழுக,
விரிந்த சடை வெறியுடன் வீச,
ஆறிரு கரங்களில் ஆயுதம் தரித்து,
என்பு மாலை இடை வரை புரள
செவிப்பறை தன்னைத்
தமருகம் கிழிக்க
நிகழ்ந்தது ஆங்கோர்
சக்திதாண்டவம்.

கொற்றவைக் கூத்தின்
குரூரம் கண்டு பதறியது சிவம்.
ஒரு முறை நான் "பிழை'த்ததால்
நீ பிழைத்தாய்
இம்முறை தாட்சாயினி
அல்ல; கொற்றவை நான்,
கர்ஜித்தாள்..

இடக்காலுயர்த்தி
வலக்குண்டலமும்,
வலக்காலுயர்த்தி
இடக்குண்டலமும்
கழற்றி வீசினாள்.

அந்தகாரம் சூழ்ந்தது
எங்கும் நிசப்தம்
எங்கோ கேட்டது ஈனக்குரல்
அது ஈசனின் குரல்
புலித்தோல் களைந்து,
சூலம் தொலைத்து,
பிறையினை பிடுங்கி
பித்தம் கொண்டது சிவம்

மூன்றாவது கண்ணும்
சூனியம் வெறிக்க
கண்டது தின்று,
சொற்களை மென்று
உன்மத்தம் கொண்டு
திரிகிறது

எதிர்ப்படும் பைத்தியம்
உதிர்க்கும் வார்த்தை
"சக்தியை நீங்கிய சிவம்
உயிரை நீங்கிய சவம்''
என்பதாக இருந்தால்,
உற்றுப்பாருங்கள்
அது சிவமாக இருக்கலாம்.

நினைவு(வ)றுத்தல்மின்னொடு வானம் தண்துளி தூவ,
கிள்ளைப் பார்ப்பின் மூக்கினை ஒத்த
செம்பரிதி அமிழும் காஞ்சனப் பொழுதில்,
வெரூப் பாலையின் பெரும்பசி வயிற்றோன்
கொள்ளும் கவளத்துட் சிறுபரல் போல்
இடறுமுன் நினைவை;
கொல்லேற்றின் ரணம் படர் கழுத்தை
அழுத்திச் சிவந்த நுகத்தடியதனை
இரையென விழுங்கி,
குறுமரம் சுற்றும் வனத்து அரவமாய்
செரித்திட நினைக்கையில்,
கிழியுதென் யாக்கை

இரையாண்மை - புணர்ச்சி விதிஇரை+ஆண்மை
இரையாண்மை

நின்றதின் மேல் வருமொழி புணர்ந்தது

"ஐ' வழி(லி)யால்,
"ய'வ்வெனத் திரிந்தது உயிர்; கிடந்தது உடல்.

உடல் மேல் உடல் வந்து யவ்வியதில்,
'ஆ'காரமும், ஆகாரமும் அடிபட்டுப் போனது.

இறை ஆண்மை கெட்டதால்,
இரை பெண்மை கெட்டது.

இரையே இங்கு வரவேற்றதால்,
வந்து புணர்ந்ததெல்லாம்,
வன்புணர்ந்தது.

வழுக்கல் என்பதால்
வழு, வழுவமைதி ஆனது

புணர்ச்சியின் இறுதியில்,
திரிந்தது ஆண்மை;
இறைஞ்சிய போதும்
எஞ்சியது இரை.

சொல், பொருள்
எப்படி நோக்கினும்
இது விகாரப்புணர்ச்சி

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பாற்கடல் சக்திவேல்.

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
சக்திவேல் எனது பெயர்; பாற்கடல் வலைப்பூவின் பெயர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
பசுமை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி, குறிஞ்சித்திட்டு என்ற பெயர் தேடிப்பிடித்து வைத்திருந்தேன். பிறகு தம்பி சிந்தன், எப்படி வலைப்பூ துவக்குவது என்று சொல்லிக் கொடுத்தான். படிக்க நிறைய வாய்ப்பு; எழுதவும் நிறைய வாய்ப்பு. ஆனால், நான் 100 சதவீத சோம்பேறி என்பதால், இரண்டுமே முழுமையாக நடக்கவில்லை.

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமா அப்டின்னா என்னங்க? நான் பிரபலமாயிட்டேன்னு யார் சொன்னாங்க?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எதுவுமே சொந்த விஷயம் இல்லீங்க. திருடுனதுதான். பின்ன என்ன கேள்விங்க இது. யாருக்குமே சொந்த பாதிப்பு இல்லாம எழுத முடியாது. சில சமூக(!) கருத்துள்ளது எழுதினாலும், எங்கயாவது நாம உள்ள ஒளிஞ்சுருப்போம் இல்ல. அதனால.... சகலமும் கலந்திருக்கும்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதுவரைக்கும் ஏழு லட்சத்துக்கு நாப்பத்து நாலாயிரத்து முன்னூற்று இருபத்தி ஒரு ரூபாய் சம்பாதிச்சுருக்கேன். நிஜமா நம்புங்க. பதிவு எழுதறதே சம்பாதிக்கிறதுக்குத்தான். (நண்பர்களை சம்பாதிக்கலாம்.; அதற்கு விலை மதிக்க முடியுமா...அடடா)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஐடியா முழுசா இல்லாததால, அடுத்தடுத்து மூணு துவக்கினேன். மூணுமே தமிழ்லதான்;பின்ன துரை இங்கிலீசெல்லாம் எழுதும்னு நினைச்சீங்களா?.
குறிஞ்சித்திட்டு, வழிப்போக்கன், பாற்கடல். தற்போது பாற்கடலில் மட்டும் நீந்திக் கொண்டிருக்கிறேன்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் நிறைய எழுதினாலும் பொறாமை வரும். கோபம் வந்திருக்கிறது; சில விவாதங்களைக் கேள்விப்பட்டு. ஊர சொன்னாலும் பேர சொல்லக்கூடாது. பிறகு, அவரும் அவர் சார்ந்தவர்களும் என்மேல் கோபப்படுவார்கள். (எங்களின் "தல' வெயிலான் அநியாயத்துக்கும் அப்டேட்ல இருக்கார். அவருக்கும் நேரம் பத்தக்கூடாதுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கறேன்)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..
அடடா தினமும் லட்சக்கணக்கான பேர் பாராட்டுறதால, முதல்ல பாராட்டுனவங்க பேரு தெரியல. பதிவுகளை இடுவதற்கு முன், சிந்தனும், திருவும் பாராட்டினார்கள். பதிவுக்குப் பின், வந்த முதல் பாராட்டு பற்றி நினைவில் இல்லை.
நல்லவேளை திட்டுனவங்க லிஸ்ட் கேக்கல. சங்கதி அப்புறம் இல்ல தெரிஞ்சு இருக்கும்.
10)கடைசியாகவிருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஹலோ கடைசியாகனா என்ன அர்த்தம்.? மங்கலம் பாடலாம்னு பாக்குறீங்களா?
எதையாவது சமூகத்துக்கு செய்யணும் நினைச்சு, எதுவுமே செய்ய முடியாத இளைஞன். ஆசிரியர், பத்திரிகையாளன்னு இரண்டு மிக விருப்ப துறைகள் இருந்தும், ஆசிரியராக ஒரு ஆண்டு பணியாற்றி விட்டு, எதையாவது செய்யலாமே என்று பத்திரிகை துறைக்கு வந்தவன். சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவுக்கு சாதிக்காவிட்டாலும், சிலருக்காவது என், பணிகள் நன்மை பயந்தது உண்டு. அதற்காகவே இன்னும் பத்திரிகை துறையில் இருந்து விலகாமல் இருக்கிறேன். சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் தொடர் பதிவில் சந்திக்க நேரிடும் போது, நிச்சயம் அதீத திருப்தியுடன் உங்களைச் சந்திப்பேன்.

என்னை தொடர்பதிவுக்கு அழைத்த, "திருச்சொல்' திருநாவுக்கரசு நண்பருக்கு நன்றிகள் பல.
அடுத்ததாக நான் அழைக்க நினைக்கும் பதிவர், சிந்தன்(என் குருநாதனும் கூட. சின்னப் பையன் என்பதால், குருநாதருக்குப் பதில் குருநாதன்)

ஒரு சகாவிடமிருந்து...

ஒரு சகாவிடமிருந்து...

....,
அன்புள்ள என்றா, அல்லது நண்பனே என்றா, எப்படி துவங்குவது என தெரியவில்லை. அதனால், உனக்கு பிடித்திரா விட்டாலும், உனது பெயரை முன்னிறுத்தி எழுதுகிறேன். தகவல் தொழில்நுட்பம் நேரில் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தாலும், கடிதங்களின் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. இதை நீ கடிதமாகவே பாவிப்பாய் என எண்ணுகிறேன்.
பள்ளியில் சேர்ப்பதற்கு முதலில் இருந்து, துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உடுமலை கல்லூரி, விடுதி, பட்டமேற்படிப்புக்காக தங்கியிருந்த அறை, கோவை கல்லூரி, புத்தக நண்பர்கள், ஏதேச்சையாக சந்தித்த மனிதர்கள் என எனக்கான வட்டத்தில் நிறைய சகாக்கள் இருக்கின்றனர்.
எத்தனை பேர் இருப்பினும், எனக்கான பக்கங்களில் உன்பெயரை எழுதாமல் தவிர்த்து விட முடியாது. குறிப்பிட்ட சில பேர் என் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பார்கள். கல்லூரியில் ஆத்தி வகித்த இடத்தை, இங்கு நீ எடுத்துக் கொண்டாய் என எண்ணுகிறேன். ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது என்றாலும், இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. மற்றவர்களுக்கு கூட உதவி செய்திருக்கிறேன்; ஆத்திக்கு எதுவும் செய்ததில்லை. ஆத்தி அதை எதிர்பார்த்ததும் இல்லை.
என்னுடன் அவன் மூர்க்கத்தனமாக நட்பு பாராட்டினான். மூன்றாம் ஆண்டில், அவன் வாங்கி வந்த தின்பண்டத்தை நான் மற்றவர்களுக்கு கொடுத்து, அவனுக்கு கடைசியில் கொடுத்த போது, அவன் பார்த்த பார்வையும் லேசாக விடுத்த முணுமுணுப்பும் இன்னும் நெஞ்சில் வலிக்கிறது. அதற்குப்பின் மூன்றாண்டுக்குப் பின் அந்த இடத்தில் நீ இருக்கிறாய் என எண்ணுகிறேன்.
எங்கள் ஊரில் நான் கோபப்படாத பையன். ஆனால், எனக்கு மிக நெருங்கியவர்களுக்கு என் கோபம் பிரசித்தம். நீ என்னிடம் இருந்த அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை.
நீ ஒன்றை கவனித்திருப்பாயென நம்புகிறேன். சமீபத்திய உன் பிறந்தநாளின் போது, நான் உனக்கு வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி சொல்வது எனவும் தெரியவில்லை. சில நேரங்களில் சம்பிரதாயங்களை நான் வெறுக்கிறேன்.
சிலவற்றில் எனது பிடிவாதத்தை நீ வெறுத்திருக்கக் கூடும். ஆனால், என் வளர்ப்பு நிலை அப்படி. "தோழமையோடும் ஏழமை பேசேல்' எனக்கூறி வளர்க்கப்பட்டேன். எனக்குள் இருக்கும் சுயம், யாரிடம் தாழ்ந்து நிற்க அனுமதிப்பதில்லை. அது ஒருவகையான பைத்தியகாரத்தனமாக கூட இருக்கலாம். நான் இறங்கிப் போயிருக்கிறேன் என்றால், அப்போது என்னை அதிகபட்சமாக சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.
ஓ... இந்த கடிதம் பாதை மாறி விட்டது.
நீ என்னிடம் இருந்த, இருக்கும் அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை. அப்படி இருக்க முயற்சியும் செய்ததில்லை. என் கோபங்களுக்கு நீ ஆளாகும் போது, பின்னர் யோசிக்கையில் அது அதிகப்படியானதோ என எண்ணத் தோன்றுகிறது. என் பத்திரிகை உலக வாசம் நிறைய அற்புத தருணங்களை, வேடிக்கையான சம்பவங்களை, மறக்க முடியாத நிகழ்வுகளை, நெருக்கமான உறவுகளை தந்திருக்கிறது.
மிக நெருங்கிய, நெருங்கிய, ஆத்மார்த்த, ஆலோசனை கேட்கின்ற, மடிசாய்ந்து அழுகிற, பிரதிபாசம் எதிர்பார்க்கிற, விவாதம் நடத்த தகுதியுடைய, ஏதேனும் கற்றுக்கொள்ள, சிரிக்க மட்டும், உபயோகப்படுத்திக் கொள்ள இன்னும் இத்யாதி, இத்யாதியினர் என்னுடனான உறவு வட்டத்தில் இருக்கின்றனர்; இருப்பர்.
இதில் ஏதாவது ஒன்றாகத்தான் நீயிருப்பாய், என அடையாளமிட்டுக் காட்ட இதைச் சொல்லவில்லை. இவற்றில் நீ எந்த ரகம் எனவும் அடையாளப்படுத்த கூறவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். நீண்ட ஆண்டுகளுக்கு பிரிந்திருக்க வேண்டியிருந்தால், என்றாவது ஒரு நாள் உன் நினைவு வரும் போது சிறு புன்னகையும், கனத்த மௌனமும் நிச்சயம் என்னுள் எழும்.
இன்னொன்றையும் நினைவில் கொள், ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்காக உன்னிடம் மன்னிப்பு கோரவும் மாட்டேன். ஏனென்றால், நான்...... நான்தான்.

திருப்தியுடன்...
நான்.
(நவ.,2009)

காசுமரம்


உள்ளங்கை பிசுபிசுப்பில் உறுத்தியது
வட்டமாய் இருந்த வஸ்து
இதை வைத்து என்ன
வாங்கலாம்?
கோமதியிடம் இருக்கற மாதிரி
மின்னாம்பூச்சி,
சரசுகிட்ட மயில்குஞ்சு,
யோகுகிட்ட பனங்கருப்பட்டி,
தேன்மிட்டாய்,
சுத்தரமிட்டாய்,
எலந்த வடை,
சடை வில்லை,
ஊசிக்கப்பலின் வாலாய்
நீ...ண்டது பட்டியல்.
எல்லாமே வாங்கலாம்
காசு மரம் முளைச்சதுக்கப்புறம்...
விழுங்கப்பட்டது காசு.

குழந்தை என்னுமோர் "குறும்பு'யல்

நம்மை விட புத்திசாலிகளிடம் பேசும்போது 'எச்சரிக்கை'யாகவும், முட்டாள்களிடம் பேசும்போது 'அதிக எச்சரிக்கை'யாகவும் பேசுவது நல்லது, நண்பர் திரு தனது பதிவில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். படிக்கும் போது ஏனோதானோ என்று படித்து விட்டேன். அவரிடம் கேட்க வேண்டும் குழந்தைகளிடம் பேசும் போது எப்படிப் பேச வேண்டும் என்பது. தயவு செய்து முட்டாள் போல பேசிவிடுங்கள் அதுதான் நல்லது என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள் சுவி, சுவேதா; பக்கத்து வீட்டு குட்டி தேவதை ( பக்கத்து வீட்டுக்கு மட்டும். பின்னே என்னை மூக்கறுத்தால், குட்டிச்சாத்தான் என்றுதானே சொல்லத்தோணும்).
விஷயம் இதுதான். நான்கைந்து சோட்டாளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சுவி. பள்ளியில் ஆசிரியர்கள் இவளுக்கு நடத்திய பாடத்தை, வீட்டு வாசல் படிகளுக்கும், நாற்காலிகளுக்கும் நடத்திக் கொண்டிருந்தாள். சலிப்புத் தட்டி விட்டதால், "மாமா நீதா நெறைய படிச்சியாமா எங்கம்மா சொல்லிச்சு (அப்படியா சொல்லி வச்சுருக்காங்க.. ம்ஹூம் இது ஆவறதில்ல). எதாவது கதை சொல்லு. தங்க(ம்) கதை இருந்தா சொல்லு". (பொண்ணுக காரியத்துல கண்ணா இருக்காங்க).
நான் கதை சொல்ல பிரயத்னப்படாமல், சமாளிக்க முயன்றேன். ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சங்கத் தமிழரின் பெருமையை பீற்றலாம் என நினைத்து, "அந்தக் காலத்துல நம்ம கிட்ட நெறைய நெறைய
தங்கம் இருந்துச்சாம். நம்ம ஆத்தா இருக்குல்ல அவங்கள மாதிரி இருக்கறவங்க, காதுல பெரிசா தொங்கட்டான் மாதிரி குண்டு குண்டா தங்கம் போட்டிருப்பாங்களாம். கோழி, காக்காய் எல்லாம் நெல்லு தானியத்த கொத்த வந்துச்சுனா, காதுல இருக்கற தங்கத்த கழட்டி வீசிதான் விரட்டுவாங்களாம்".
நிசமாவா... நம்பாமல் பார்த்தாள். (அந்த முகச்சுளிப்புக்கே ஆயிரம் பொன் தரலாம்). அவ்ளோ நெறையாவா... பொய் சொல்லலைல்ல. ஒரு வழியாக நம்பி, கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள்( மறுபடியும் ஆயிரம் பொன்).
திடீரென வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அக்கா, "நகத்தக் கடிக்காம இருக்க மாட்டியா. பொழுதோட நகம்வெட்டறது, கூட்டறதுன்னு ஆகாத வேலையத்தான் செய்வ. சொன்ன கேட்கறதே இல்ல" போகிற போக்கில் சுவியை வசைபாடி விட்டு போக.
காதருகே, எப்பப்பார்த்தாலும் இப்டிதான். ஏ மாம்சு, நைட்ல நகம் வெட்டக்கூடாதா, டைம் கிடக்றப்பதா வெட்ட முடியும். உங்கக்கா கிட்ட சொல்லு' என்றாள் சுவி.
அதுக்கப்பறம்தான் சனி ஏழாம் இடத்தில் நீச்சம் பெற்றான்.
"அம்மாக்கு ஒன்னும் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப மாதிரி பளிச்சுனு எரிய வெளக்கு இல்ல. மின்சாரம் இல்ல. அதனால, கொஞ்சம் வீடு இருட்டா இருக்கும். நகத்தை சரியா வெட்ட முடியாது. சிந்திக்கிடக்கறத முழுசா கூட்ட முடியாது. கூட்டி அள்றதுல சின்னச் சின்ன பொருட்கள் குப்பையோட வெளில கொட்டிருவோம் இல்ல. அதனாலதான் அப்படி சொல்லியிருப்பாங்க".
என் மேதாவித் தனத்தைக் காட்டவும், எனக்குத் தெரிஞ்ச பகுத்தறிவை அவளுக்கும் ஊட்டலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னதற்கு அவளிடம் உடனடி மறுமொழி வந்தது. ஆனால், வேறுவிதமாக.
சினிமாவில் காட்டுவார்களே "ஆப் ரவுண்டு டிராலி ஷாட்' அதே மாதிரி இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னை அரைவட்டம் போட்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 30 நொடிகள் இடை வெளி விட்டு பேசினாள். அதே மாதிரி நீங்களும் படித்துப் பாருங்கள்." நைட்டு..... கூட்டினா.... சின்னப் பொருள்... குப்பையில போயிரும்....."
முகத்துக்கு நேரே கை நீட்டியபடி, "மூஞ்சிய பாரு. அதா தங்கத்தையே வீசி கோழி முடுக்கறாங்களாம். கூட்டுனா சின்ன பொருள் வெளியே போயிரும்னு, விட்டுட்டாங்களாம். தங்கத்த விட, சின்னப் பொருள பெரிசா நினைப்பாங்களாக்கு. தெரிஞ்சா ஒழுக்கமா சொல்லணும். இல்லேன்னா..... டேஷ் மாதிரி ஒளறக்கூடாது.(அவளின் வகுப்புத் தோழி ஒருத்தியின் பெயர்தான் அந்த டேஷ்சில் வர வேண்டிய பெயர். கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை. பெயர் நினைவில் இல்லாததால் டேஷ் போட்டிருக்கேன்)
"டே அழகு வாடா விளையாடப்போலாம். இதுக்கு எங்க அம்மாவே பரவால்ல," சற்றும் மதிக்காமல் அவள்பாட்டுக்கு போய்விட்டாள். நான் கீழே கிடந்த என் மூக்கை அக்காவுக்கு தெரியாமல் எடுத்து மாட்டிக் கொண்டு, அவசரமாக வெளியே போய் விட்டேன்.
அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். இனி குழந்தைகளிடம் முட்டாள் மாதிரி பேசிவிடுவது எல்லாருக்கும் நல்லது என்று.

கம்யூனிஸ்டுகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு - சமூகத்தின் புரிதல்

பதிவர் செம்மலர் அவர்களின் "கோவிந்தசாமியின் விலகலும், போலி கம்யூனிஸ்டுகளின் வேடமும்' என்ற இடுகைக்கு பதில் இடுகையாகவே இடப்படுகிறது. அவருக்கு பின்னூட்டம் இடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். சற்றே நீளும் எனத் தோன்றியதாலும், இதர "தோழர்'களை விவாதத்துக்கு அழைக்கவும் முடிவு செய்தே, இப்பதிவு இடப்படுகிறது. நான் ஒன்றும் கம்யூ.,க்களின் தீவிர எதிர்ப்பாளனோ, ஆதரவாளனோ அல்ல.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், "கம்யூனிஸ்டுகள் நாம் நினைப்பது போல் இல்லை; அங்கும் ஊழல் மலிந்திருக்கிறது. எனவேதான் கோவிந்தசாமி என்ற தனி மனிதனும் விலகி, மற்ற கட்சியினரைப் போலவே நாங்களும் என நிரூபித்திருக்கிறார்' என்பதே, செம்மலர் அவர்களின் கருத்துப்பிழியல் என நினைக்கிறேன்.
அதை நேரடியாகவே அவர் சொல்லி இருக்கலாம். திருப்பூர் வாசி என்பதால், திருப்பூரின் இதர முகங்களையும் தொட்டுத்துலக்கி, தொழிலாளர் பிரச்னை என சுற்றி வளைத்து, கம்யூ.,க்களின் வேடத்தை உரிக்க நினைத்திருக்கிறார்.
அவர் சொல்வதில் சிறிது உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இங்குள்ள முதலாளிகள் கட்டாயமாக எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை வாங்குகிறார்கள் என்பது வெளி உலகுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சூழலில் எட்டு மணி நேர வேலை என்பது வெறும் பேச்சு மட்டுமே. அனேகமாக தோழர் செம்மலரும் (எந்தப் பணி செய்பவராக இருப்பினும்) எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாகவே உழைப்பவராக இருப்பார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
//திருப்பூரில் எந்த தொழிலாளியும் கொத்தடிமை கிடையாது சொல்லப்ப்போனால்

எட்டுமணி நேரம் மட்டும் அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை மட்டும்

என சொன்னால் வேலைக்கு சேராத தொழிலாளிகளைத்தான் இங்கு பார்கிறோம்

ஏன் இந்த நிலை என்றால் ஒரு நாள் இரண்டுநாள் ஓடி பார்த்தால்தான் இங்கு

இருக்கும் விலைவாசிக்கு வண்டி ஓட்ட முடியும் அதற்கு தகுந்தாற்போல

வீட்டு வாடகை மற்றும் விலைவாசி ஏறிவிட்டது .
///
பின் நிதர்சனத்தை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வெளிப்படையாக சொன்னதற்காக அவருக்கு இந்த தண்டனை அவசியமா? கம்யூ.,க்கள் என்றாலே, 100 சதவீத வார்ப்புகளாக, நெகிழ்வுத் தன்மை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று நாமாகவே அர்த்தப்படுத்திக் கொள்வது எவ்விதத்தில் நியாயம்?
///
லாஜிக் படி கோவிந்த சாமி செய்தது சரிதான் ஒரு வகையில் ஆனால்

கட்சி இதற்காக இவரை எச்சரிக்கவில்லை மாறாக அவர் வாங்கிய தொகையில்

கட்சியின் மாநில கமிட்டிக்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால் தூக்கியது.///
இந்தக் குற்றச்சாட்டை எந்த அடிப்படை ஆதாரத்தை வைத்து சாட்டினீர்கள் செம்மலர். பொத்தாம்பொதுவாக இக்குற்றச்சாட்டை நீங்கள் எப்படி வைக்க முடியும்? நீங்கள் சொல்வது போல் கம்யூ., கட்சியிலும் ஊழல் இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், எரியும் கொள்ளியில் நல்ல கொள்ளி இவைதான். அப்படியே இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டை(!), கம்யூ., கட்சி என்றால் மக்கள் மனதில் இருக்கும் படிமத்தை உடைக்கும் விதத்தில் காசு வாங்கியவருடன் சமரசம் பேசச் சொல்கிறீர்களா என்ன?
/// போலி கம்யுனிஸ்டுகள் பேசுவதெல்லாம் சும்மா உருகி உருகி ஓடும் திருப்பூர்

வீதியில் திமுக காரன் அதிமுக காரன் எல்லாம் என்ன சொன்னாலும் தொழிலாளர்

மத்தியில் எடுபடாது அதே நேரத்தில் இந்த போலி தொழிற்சங்க வாதிகளும்

முதலாளிகளும் ஏமாற்றும் அப்பாவி ஜீவன்கள் தொழிலாளர்கள் தாம்.///
ஹா, திருப்பூர் என்ன கம்யூ.,க்களின் எஃகு கோட்டை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க., காரன் சொன்னாலும் எடுபடும். கம்யூ.,க்கள் சொன்னால் எடுபடாமலும் போகும். இன்னும் இங்குள்ளவர்களின் மனப்போக்கை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூ.,வில் வட்டார செயலாளராக இருந்து கொண்டு, தீவிர களப்பணி ஆற்றிக் கொண்டே, இரட்டை இலைக்கு எம்.பி., தேர்தலில் வாக்களித்தவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் தோழரே.

எதற்காக இந்த பதிவை எழுதினேன் என்பதில் இன்னும் எனக்கு புரிதல் இல்லை. ஆனால், உங்களின் இறுதி சில வரிகள் நிச்சயம் ஆட்சேபணைக்கு உரியவை. அதற்கு பதிலளிக்கவே இந்த இடுகை. ஆனால், அசந்தர்ப்பமாக மேலே உள்ள கருத்துகளையும் சொல்லியாக வேண்டி இருந்தது.

///
மொத்தமா ஒரு சாதி ஆதிக்கத்தில் இருந்து திருப்பூர் விடுவிக்கப்படும் வரை

தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது தொடரும்///
திருப்பூரில் சாதிய ஆதிக்கம் என்ற சேற்றை காரண காரியம் இல்லாமல் வீசியெறியாதீர்கள். எந்த நிறுவனத்தில் இன்ன சாதிக்காரன்தான் பணிபுரிய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அல்லது குறிப்பிட்ட சாதிக்காக அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். திருப்பூர் வந்தேறிகளின் ஊர் என்பதை மறந்து விட்டு இது போன்ற சாதிய குற்றச்சாட்டை முன்வைக்காதீர்கள். எல்லாப் பகுதிகளிலும் ஏதேனும் ஒரு சாதியினர் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அந்த ஊரில் நீண்ட காலமாக வசிப்பவனிடம் செல்வம் அதிகம் இருக்கலாம்.
வடமாநில சேட்டுகளின் நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இன்னும் சொல்வதானால், சிங்களவனுக்கு கீழே பணிபுரியும் பிறவிகளும் இங்கேதான் இருக்கிறார்கள்.
அதையும் நினைத்துப் பார்த்து விட்டு சாதிய ஆதிக்கம் திருப்பூரில் என்று குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சாதியின் மேல் தனிப்பட்ட கோபம் இருப்பின் அதை விட்டு விடலாம்.
சுந்தர ராமசாமி 1966லேயே சொல்லி இருக்கிறார் "கலைஞனின் சமூகப் பொறுப்புகளும், பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட காலம் இது' என்று.
எழுதும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்ற போர்வையில் பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அபத்தம். உங்களின் சாதியக் குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள் தோழரே.

கொங்குப் பழமைகளை சேகரிக்கலாம் வாரீங்களா...

"ஏஞ்சாமி கைசாளைக்குள்ற பாத்தியா' அப்பத்தா கேட்டதும்தான் சட்டென நினைவுக்கு வந்தது; கைசாளை என்ற வார்த்தையையே நான் மறந்து விட்டிருந்தேன்.
கொங்கு நாட்டுப்புறத்தின் மிக சரளமான வட்டார வழக்குகள் பல வழக்கொழிந்து போய் விட்டன. தமிழே வழக்கொழியும் நிலையில், வட்டார வழக்கு எம்மாத்திரம். உண்மையில் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் வேர்களை ஆராய்வது என்பது அலாதியானது. ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் ஏதாவது அர்த்தம் இருக்கும்.
"ங்'கண்ணா போட்டு, இழுத்து இழுத்துப் பேசினால் அது கோயமுத்துõர் பாஷை என்ற அளவில்தான் கொங்கு வட்டார வழக்கு அறியப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்று.
அதற்காக இன்னும் வட்டார வழக்கிலேயே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். வட்டார வழக்குகளை கூடவே கூட்டிக் கொள்ளவும் முடியவில்லை; வேண்டாம் என உதறிவிடவும் முடியவில்லை.
சில பிரத்யேக சொற்களை கிராமத்தில் கேட்டுப்பாருங்கள். தமிழோடு எவ்வளவு ஒருங்கிணைந்த வார்த்தைகள் அவை என்பது புரியும்.
"சலதாரி' என்ற வார்த்தை பற்றித் தெரியுமா? வீட்டு சமையலறையில் பாத்திரங்களைக் கழுவ கட்டி வைக்கப்பட்டிருக்கும் இன்றைய "வாஷ்பேசின்'தான் சலதாரி. கிராமப்புறங்களில் குளியலறைக்குள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் வெளியே தெறிக்காத வகையில், சிறிய தொட்டிமாதிரி கட்டி இருப்பார்களே; நாம் நின்று குளிக்கும் இடம். அதற்குப் பெயரும் சலதாரிதான்.
சலம் என்றால் நீர். அது செல்லும் தாரைவழி என்பதே அதற்கு அர்த்தம். வழியும் கங்கையை தலையில் கொண்டிருப்பதால், சிவனுக்கும் சலதாரி என்றொரு பெயர் உண்டு. இது வெறும் உதாரணம் தான்.
திடீரென அப்பத்தா கேட்டதால், அந்த வார்த்தை நினைவுக்கு வந்தது. சராசரி தமிழன் 3,000 வார்த்தைகளையே பயன்படுத்துகிறனாம். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகள் தமிழில் இருக்க, நாம் பயன்படுத்துவது சொற்பமே.
குறைந்தபட்சம் ஒரே மாதிரியான அர்த்தம் தரும் வேறு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மற்றவர்களால் கவனிக்கப்படுவோம் என்ற உளவியல் உண்மையை பரப்பினால் தவிர, தமிழ் வார்த்தைகளை கூடுதலாக உபயோகிக்கும் நிலையை ஏற்படுத்த முடியாது.
அழிந்து வரும் கொங்கு வட்டாரச் சொற்களையும், புழங்கு பொருட்களையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். சக நண்பர்களிடம் உதவி கோரும் எண்ணமும் உள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினரும் இசைவு தெரிவித்துள்ளனர்.

ஓ மறந்துட்டனுங்க... கைசாளைன்னா சமையல் அறைனு அர்த்தமுங்க... அப்புறம் இன்னொன்னு. இதுமாதிரி வட்டார வழக்குச் சொல் ஞாபகத்துக்கு வந்துதுன்னா, எழுதி வச்சுங்குங்க. நா அப்புறமா உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிற. நீங்களும் இந்த சோலில சேந்தா நல்லதுதானுங்க. ஒரு நாளுக்கு 10 பழமை சேத்துனம்னா 100 நாள்ல ஆயிரம் பழமை சேகரிச்சுப்புடலாம். இதே நாலஞ்சு பேருன்னா ஆறு மாசத்துல ஆளுக்கு ரெண்டாயிரம் சேர்த்து, பத்தாயிரம் பழமை கெடைக்கும். முடிஞ்சா சேருங்களே

அழிவின் விளிம்பில் ஒரு நதி

கரையிழந்த காஞ்சி... கறைபடிந்த நொய்யல்...

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியா
கி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி என ஐந்து மாவட்டங்களை கடந்து காவிரியில் கலக்கிறது காஞ்சிமாநதி. தான் சென்றவிடமெல்லாம் செழிப்பாக்கிய காஞ்சி நதி, காவிரியுடன் சங்கமிக்கும்இடத்தால் "நொய்யல்' எனப் பெயர் கொண்டது. நொய் என்ற சொல்லுக்குநுண்மை, மென்மை என்பது பொருள். தன் நுண்ணிய மணற் பரப்பினால் இப்பெயர்பெற்றது என்ற கருத்தும் உண்டு. காலப்போக்கில் காஞ்சி நதி என்ற பெயர்வழக்கொழிந்து போனது போலவே, நொய்யலும் தன் வளமிழந்து போனது.
மனித இனம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கற்றுத்தந்த நாகரீகங்கள் மூன்று. பாரம்பரியம் மிக்க எகிப்து, சிந்துசமவெளி நாகரிகங்களுக்
கு இணையாக தமிழ் நாகரீகத்துக்கும் இடம்உண்டு.
நொய்யல் நதிக்கரையின் கொடுமணல் நாகரீகம் கி.மு 300ம் ஆண்டுக்கும் கி.பி. 300ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது எனத் தொல்பொருள் சான்றுகள்தெளிவுபடுத்துகின்றன.
சிற்பக்கலைக்குப் பெயர் பெற்ற பேரூர்பட்டீஸ்வரர் ஆலயத்தை தன் கரையில்கொண்டுள்ளதும்; லட்சக்கணக்கானமக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்தநொய்யல், இன்று கடந்து செல்பவர்கள்முகம் சுளிக்கும் அளவுக்குக் கழிவுகளைச்சுமந்து செல்கிறது.
விவசாயிகளைச் செழிப்படையச் செய்த அதே நொய்யல், அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நொய்யலின் வழித்தடமும், கொடுமண
ல் நாகரீகமும்:
மேற்குத்தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகி, கிழக்குநோக்கிப் பாய்கிறது. இதன்கரையில் பேரூர், திருப்பூர் என்ற முக்கிய நகரங்கள்உள்ளன. தன் வழியில் 32 குளங்கள், 23 தடுப்பணைகளை நிரப்பி, காவிரியில்இணையும் நொய்யல்படுகை 180 கி.மீ., நீளமும், 25 கி.மீ., அகலமும் கொண்டது. திருப்பூரில் இருந்து 16 கி.மீ., துõரத்தில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. நொய்யலில் இருந்து குளங்களுக்குச் செல்லும் வடிகால்களைச் சாளுக்கியசோழர்கள் சீர்படுத்தியுள்ளனர்.
காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தில் இருந்த நொய்யல் குடியிருப்புசேரநாட்டுக்கும் கரூருக்கும் இடையில் முக்கிய இணைப்பாக இருந்ததாகச் சங்ககுறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு சங்ககால மக்கள் 35 ஏக்கர் பரப்பளவில்வசித்து வந்ததற்கான அடையாளங்களைத் தொல்லியல் துறைகண்டறிந்துள்ளது.
ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., துõரத்தில் அமைந்த கொடுமணல் கொங்குப்பகுதிநாகரீகத்துக்கான சான்று. நுõற்றுக்கணக்கான முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், மட்பாண்டங்கள், புதைபொருட்கள் கொடுமணல் நாகரீகம் தொன்மையானதுஎன்பதை இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.
நொய்யல் படுகையால் 3,500 சதுர கி.மீ., பரப்பு பயனடைகிறது; 1800 .கி.மீ., பரப்புபாசனவசதி பெறுகிறது(!). கரையோரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்கள்அடர்த்தி சதுர கி.மீ.,க்கு 120 பேர்; நகரப்பகுதியில் 1,000 பேர்.
நொய்யல் ஒரு போதும் கரை மீறியதாகசரித்திரம் இல்லை. காரணம் ஒவ்வொருகி.மீ., துõரத்திலும் சில அடிதுõரம்ஆழமாகிக் கொண்டே செல்லும்தன்மையால், சரிவான சிற்றாறாகஉருக்கொண்டு அதிவேகமாக காவிரியில் கலக்கிறது. இதனால், ஆறு நிறையதண்ணீர் செல்வதற்கு வழியில்லை. பெரிய அளவிலான தேக்கங்களும் இல்லை.
மற்ற சிற்றாறுகளைப் போல குளிக்கவும், குடிக்கவும் பயன்பட்டு வந்த இந்த நதி, சென்ற தலைமுறையில் சிற்றாறு என்ற நிலையில் இருந்து கழிவுக் கால்வாயாகசுருங்கிக் கொண்டது.

மாசடைந்த நொய்யல்:
இன்றைய தலைமுறையினர் காணும் நொய்யல், நதி என்ற தகுதியை இழந்ததும் ஆண்டுக்குப் பிறகுதான். தொழில் வளர்ச்சி என்ற பெயரில், திருப்பூர் நகரம்அரசின் எந்த உதவியும், கட்டுப்பாடுகளும் இன்றி வளர்ந்த காலகட்டம் அது. வெளிநாடுகளுக்குப் பனியனை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்ததால், தொழில்முனைவோர்கள் பலரும், போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்தனர்.
தொழில் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்டிருந்த கனவான்களுக்கும், அதன் மூலம் கிடைக்கும் அன்னிய செலாவணியை நல்வாய்ப்பாக கருதியஅரசும், அதன் மோசமான மறுபக்கத்தைக் கவனிக்கத் தவறிவிட்டன. ஏற்கனவே, கோவை மாநகரின் கழிவுகள் நொய்யலில் கலந்து, அதை மாசுபடுத்திக்கொண்டிருந்தன.
வெள்ளை நிற ஆடைகளை விட வண்ணமேற்றிய ஆடைகளுக்கு வரவேற்புஎன்பதை அறிந்த திருப்பூர் தொழிலதிபர்கள், சாய சலவை ஆலைகளைஅதிகளவில் அமைத்தனர். சுற்றுச்சூழல் காரணங்களுக்காக வெளிநாடுகளில்கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சாயமேற்றும் முறை, திருப்பூரில்தடையின்றி நடந்தது.
அதன் கழிவுகளைச் சுத்திகரித்து வெளியில் விட வேண்டிய அவசியம் குறித்துதொழில்முனைவோர்கள் அறிந்திருக்கவில்லை. உண்மையை சொல்வதானால், அதுகுறித்த அறிவு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அவர்களுக்கு உற்பத்தி மட்டுமே செய்யத் தெரியும்; அதன் கழிவுகளை சுத்திகரிக்க, அந்தத்துறையில் விற்பன்னர்கள் அல்ல அவர்கள்.
சாயக்கழிவை சுத்திகரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம்அசட்டுத்தனமாக இருந்து விட்டது. விழிப்புணர்வும், தொழில்நுட்ப வசதிகளும்பெருகி விட்ட இக்காலத்திலேயே இன்னும் தீர்வு காணப்படவில்லை; 25 ஆண்டுகளுக்கு முன் அரசு நிர்வாகம் எப்படி அக்கறை காட்டியிருக்கும்.
ஆனால், அதற்கான பலனை அரசு அனுபவித்ததே இல்லையோ, பொதுமக்களும், விவசாயிகளும் நன்கு உணர்ந்தனர். ஒரு நதி, பெரிய கழிவு நீர் கால்வாயாகிநிலத்தடி நீர் மாசடைந்தது.
போதாக்குறைக்கு பிளாஸ்டிக் கழிவுகளும் நதியின் வேகத்தைத் தடை செய்து, தேங்கிய சாக்கடை ஆக்கி விட்டன. விவசாயிகளுக்காகக் கட்டப்பட்டஒரத்துப்பாளையம் அணையில் சாயக்கழிவுகள் தேங்கி நின்றன. கால்நடைகள்இனவிருத்தி செய்யாமல் மலடாகிப்போகின. அணையை சுற்றிலும் இருந்தவிவசாய நிலங்களில் களை கூட முளைக்கவில்லை. தென்னை மரத்தின்இளநீரிலும் ரசாயனத்தின் காரத்தன்மை கலந்தது. குடிநீர் இன்றி, மக்களும், கால்நடைகளும் பரிதவித்தனர். தோல்நோய் மருத்துவமனையும், செயற்கைகருத்தரிப்பு மையங்களும் அதிகளவில் ஈரோடு சுற்றுப்பகுதியில் அமைந்தன.
பிரச்னையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த விவசாய சங்கங்கள் எதிர்ப்புகுரல்கொடுக்க துவங்கின. சாய ஆலைகளின் கழிவுகளைச் சுத்திகரித்து விடவேண்டும் என்ற கோஷம், விவசாயிகளால் கத்தித் தீர்க்கப்பட்டது. சமூகஅக்கறையுள்ள அமைப்புகள் நொய்யலை மீட்டெடுக்க வேண்டும் என்றகோஷத்தை வலியுறுத்தின. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின், கோர்ட்தலையீட்டின் காரணமாக நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் வெளியேற்றத்துக்குதடை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
கோர்ட் உத்தரவின் காரணமாக, அனைத்து சாய ஆலை உரிமையாளர்களும் 800 கோடி ரூபாய் மதிப்பில் 20 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள்அமைத்துள்ளனர். சிலர் சொந்தமாகவும் அமைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த வினாடி வரை சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் நொய்யலில்கலக்கிறது.
தொழில் துவங்குவது குறித்த அரசின்சிறு கட்டுப்பாடுகளே இப்பிரச்னையைமுளையிலேயே தடுத்திருக்கும். மாசுக்கட்டுப்பாட்டு துறை, தன் வேலையில்ஒரு சதவீதத்தை கூட செய்யவில்லை. இல்லாவிட்டால் ஒரு நதியே அழிந்துபோயிருக்காது.
திருப்பூர் நகரத்தின் மேற்கு எல்லையில் நொய்யல் நதி, முழுமையானசாக்கடையாக மாறத்துவங்குகிறது. பெரியாண்டிபாளையத்தில் இருந்து சாய, சாக்கடைக்கழிவுகள் அதிகளவில் நொய்யலில் கலக்கின்றன. கழிவுகள்மட்டுமன்றி, ஆக்கிரமிப்புகளும் நொய்யலை உருக்குலையச் செய்துள்ளன.
ஒரு நதி நம் கண்முன்னால் உயிர்ப்பை இழந்து கொண்டிருப்பது குறித்து எந்தஅரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை.

ஆக்கிரமிப்புகள்:
பரந்து விரிந்த நொய்யல், ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் சிறு கால்வாய்அளவுக்கு சுருங்கிப் போயுள்ளது. திராவிட கழகங்களின் முக்கியவரலாற்றுச்சம்பவமாக கருதப்படும் .வே.ரா., அண்ணாதுரை சந்திப்பு நடந்தபொதுக்கூட்டம் நொய்யலின் நதிக்கரையில் நடந்தது. கட்சிக்கூட்டங்கள், பொதுவிழாக்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குஅருகே, மணற்பரப்பில் நடக்கும். அந்த அளவுக்கு அங்கு இடவசதி இருந்தது. இன்று அப்பகுதி வழியாக நடந்து கூடச் செல்ல முடியாது. நொய்யல் கரைதனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நொய்யலின் இரு கரைப்பகுதியும் வழிநெடுக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வெளிமாவட்டங்களில் இருந்து குடியேறியவர்களுக்கு நொய்யல் நதிக்கரைபுகலிடம் அளித்தது. அப்போதைய நகராட்சி நிர்வாகம், குடியிருப்புகளுக்காகநொய்யல் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவில்லை. இன்று, ஆக்கிரமிப்புகளைஅகற்றினால், அரசியல்கட்சிகள் லட்சக்கணக்கான ஓட்டுகளை இழக்க நேரிடும்.
ஒரு ஓட்டுக்கு எதிராகக் கூடத் தங்கள் சுட்டுவிரலையும் அசைக்க விரும்பாதஅரசியல் கட்சிகள், ஆறு ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. ஒரு ஆறு, சிறு கால்வாயாக மாறிப்போனதற்கு இதுவே காரணம்.
நொய்யலை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை; புறக்கணித்து விட்டது. மணல் வளம் இருந்திருந்தால், கொள்ளையடிக்கவாவதுஅரசியல்வாதிகள் முண்டியடித்திருப்பர். பல வழிகளிலும் தண்ணீர் வரத்துகுறைந்ததால், நீரோட்டமின்றி மணல் வளமும் குறைந்து விட்டது.

நொய்யலை சீரமைக்க:
கொங்கின் நாகரீகத்துக்கு வேராக இருந்த நதி, வெறும் 25 ஆண்டுகளில்இல்லாமல் போய்விட்டது. இனியாவது அரசாங்கம் விழித்துக்கொள்ளாவிட்டால், நொய்யல் என்ற பெயரைச் செவிவழியாக மட்டுமே கேட்கமுடியும்.
நொய்யலை நேரடியாகச் சீரமைத்து விட முடியாது. சங்கிலித் தொடர் போல், பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, சில நடைமுறைகளைக்கையாண்டால் மட்டுமே சாத்தியம்.
*திருப்பூர் மாநகரில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும். சாக்கடைக்கழிவுகள் நொய்யலில் கலக்கும் போது, பிளாஸ்டிக் கழிவுகள்நீரோட்டத்தை தடை செய்கின்றன.
*சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும், ஆற்றில் கலப்பதை தடை செய்யவேண்டும். ஒரு சொட்டுக் கழிவு நீர் கூட ஆற்றில் கலக்காமல் குழாய் மூலம்அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
*நொய்யலின் பாதையில் உள்ள எந்த உள்ளாட்சி பகுதியில் இருந்தும் சாக்கடைக்கழிவுகள் நொய்யலில் கலக்க தடை விதிக்க வேண்டும்.
*நொய்யலைத் தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளைப் பாரபட்சமின்றி அகற்றவேண்டும். நொய்யலால் நீராதாரம் பெறும் குளங்களையும் தூர்வார நடவடிக்கைஎடுக்க வேண்டும். இத்திட்டங்களுக்காகச் சில ஆயிரம் கோடிகள் தேவைப்படும். ஆயினும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை தன் மெத்தனப்போக்கால்சிதைத்து விட்ட அரசு, பணத்தைச் செலவழித்தே ஆக வேண்டும்.
*கோர்ட்டில் உள்ள நொய்யல் தொடர்பான வழக்குகளை அனைத்து தரப்பும்வாபஸ் பெற்று, நேரடியான தனிக்குழு மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அல்லது விரைவு நீதிமன்றம் மூலம் மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணவேண்டும்.
போக்குவரத்து வசதி:
கோவையில் இருந்து கரூர் வரை, நொய்யலின் இரு கரையையும் அகலப்படுத்தி, ரோடு அமைக்கலாம் என்ற திட்டம் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டுஇருந்தது. ஆற்றின் கரை சுத்தப்படுத்தப்படும். ரோடு வசதியும் உருவாகும். ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியும். போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வுகிடைக்கும். சென்னையை சுற்றி மட்டுமே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைசெலவழிக்கும் அரசு இத்திட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொங்குமண்டலத்துக்குள் மெட்ரோ போன்ற ரயில் திட்டம் உருவாக்கம் வேண்டும் என்றகோரிக்கை உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ஆனால், நொய்யல் கரையில் ரோடு வசதியை உருவாக்க மத்திய அரசை எதிர்நோக்கவேண்டிய அவசியம் இருக்காது. போக்குவரத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். முழுமையான ரோடாக இல்லாவிட்டாலும், முக்கிய இணைப்புகள் வரை ரோடுஅமைக்கலாம். அந்த ரோட்டை தாண்டியே கழிவுகளை ஆற்றில் கலக்க முடியும்என்பதால், கழிவுகள் கலப்பதும் தடுக்கப்படும்.
புறநகர் வழிச்சாலை; தொழில்வளர்ச்சி என பல பரிமாணங்களிலும் இத்திட்டம்பலனளிக்கும்.

நொய்யல் என்ற நதியையே இல்லாமல் செய்து விட்ட இந்த தலைமுறை, இனப்படுகொலைக்குச் சமமான பாதகத்கைச் செய்துள்ளது. வாருங்கள்யாரேனும் பூனைக்கு மணி கட்டுங்கள். நொய்யலைச் சீரமைக்காவிட்டால், வருங்காலம் நம்மைத் தூற்றும்.
12 1985

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...

அன்பார்ந்த பெரி யோர்களே, தாய்மார்களே நண்டுகளே, சிண்டுகளே, குஞ்சுகளே, குளுவான்களே... உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லப் போறணுங்க...
தண்டோரா போடறப்போ இங்கேதான் உங்க கவனம் இருக்கணும். அதாவது நாளைல இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போறாங்க.
முதல்கட்டமாக 45 நாளைக்கு வீட்டுப்பட்டியல் கணக்கெடுக்கறாங்க. அப்புறமா... வர்ற 2011 பிப்ரவரி மாதத்துல முழுமையான கணக்கெடுப்பு.
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒன்ன இந்திய அரசாங்கம் தயாரிக்குது. அதுல, எல்லா இந்தியர்களோட எல்லா விவரங்களும் சேர்க்கப்போறாங்களாம். கைரேகைல இருந்து கண் அடையாளம் வரைக்கும் தேசிய அடையாள அட்டையா பதிஞ்சு கொடுக்கப் போறாங்களாம்.
எனவே, அடுத்து வர்ற 45 நாளைக்கு உங்க ஏரியா பக்கம் வர்ற கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணுமுங்க. தப்பித்தவறி உங்க வீட்டுக்கு கணக்கெடுப்பாளர்கள் வரலைன்னா நீங்களே முன்வந்து யாரு கணக்கெடுப்பாளர்னு பாத்து, உங்களப் பத்தின தகவல்களை கொடுத்துருங்க சாமீ... 150 வீடுகளுக்கு ஒரு கணக்கெடுப்பாளர்னு உங்ககிட்ட 35 கேள்விக கேப்பாங்க.
அந்த கேள்விகளுக்கு மறைக்காம பதில் சொல்லுங்க. இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா? உங்களப்பத்தின தகவல்கள் எல்லாமே ரகசியமா வைத்துக் கொள்ளப்படும். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கூட வேற யாருக்கும் சொல்ல மாட்டாங்க; சொல்லவும் கூடாது. அதுனால, தயவு செஞ்சு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க சாமியோ...வ்

வா... வந்து தொலையுங்கள்ஏ... கூத்தாடிகளே!
வக்கற்றவன் ஒருவன்
வயிறெறிந்து சொல்கிறேன்
கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.

ஈனப்பிறவிகளால் எம்மினம்
சீரழிக்கப்பட்டபோது,
சகோதரன் என்றுதானே
கை நீட்டினோம்.
எதிரி கூட எம்மிடம்
இரக்கம் காட்டியிருக்கக் கூடும்
ஆனால், நீங்கள் துரோகிகள்


இங்கு
பாலுக்கழுத குழந்தையின்
வாயில் கந்தகத்துகள்கள்
எரிந்தன.
தாயின் கருவறை வாயில்கள்
கயவரின் கால்களால்
மிதியுண்டன.

அங்கோ...
பசப்பு வார்த்தைகளால்
பாலாபிஷேகம் செய்யும்
பாசத்தலைவனுக்கு
பாராட்டு விழா நடத்தினீர்.
தொடை தெரிய ஆடினீர்,
துண்டு போர்த்து பாடினீர்.


எல்லாம் முடிந்தது...
ரத்தச் சகதிக்குள்
புதைக்கப்பட்டது
ஓரினம்
எல்லாம்... முடிந்தது.

அன்று அழைத்தோம்
கதறல்களால் காடுகள்
கூட கருகிப் போயின.
நீங்கள் வரவில்லை
இன்று மறுத்தோம்
வருவதாய்த் தகவல்

வா... வந்து தொலையுங்கள்
எம் ரத்தச் சிதறல்களால்
அரிதாரம் பூசுங்கள்
சிசுக்களின் மண்டையோட்டில்
தேநீர் அருந்துங்கள்
நொறுங்கிய எம்
எலும்புகள் மீது
மேடை போடுங்கள்
உம் மதர்த்த முலைகள்
திமிரத்... திமிர...
ஆடுங்கள்
கொலை செய்த கைகள்
களைத்துப் போயிருக்கும்
சிரம பரிகாரம் செய்வியுங்கள்.
எம் பெண்களை
வன்புணர்ந்து வன்புணர்ந்து
அவர்களின் குறிகள்
வீங்கிப் போயிருக்கும்
வெஞ்சாமரம் வீசுங்கள்
அவர்கள் விட்டெறியும்
காசுகளால்
உங்களுக்கு உள்ளாடை
தைத்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு இந்த வக்கற்றவனின்
வரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

எம் பிணங்களின்
வாய்க்கரிசியில்
உமக்கான உணவு
சமைக்கப்படட்டும்
குடிநீர்க் குவளையில்
ரத்தம் ததும்பட்டும்
தூமைத் துணிகளில்
ஆடைகள் நெய்யப்படட்டும்
நும் மனைவிகளின்
வயிற்றில் கருந்தேள்
கருக்கொள்ளட்டும்
பூஜையறையில்
சாம்பிராணிக்குப் பதில்
சதைத்துணுக்குகள்
வேகட்டும்
உம் படுக்கை அறையில்,
கயவர்களால் சிதறடிக்கப்பட்ட
முதிராத என் தங்கையின்
கதறல் கேட்கட்டும்

வா... வந்து தொலையுங்கள்

பற்றி எரியும் சுயம்...


உனக்கும் எனக்குமான போரில்,
எனது வியூகத்தை தகர்க்க
உனக்கு சாத்தியமற்றுப் போனது.
உன்னை முன்னேற விடாமல்
தடுத்து விட்டது சுயத்தால்
பாதுகாக்கப்பட்ட என் சாம்ராஜ்யம்.
அகழி அடுத்த கற்சுவர்
உன் பிரவேச எண்ணத்தை
தேக்கியது.
என் சக பரிவாரங்களுடன்
போரிடவே உனக்கு
நேரம் போதவில்லை.
என்னை நேர் சந்திக்கும் பிரயத்னம்
பலனற்ற நிலையில்,
அனைத்து ஆயுதங்களையும்
கையிழந்தாய்.
சரணடைந்தேனும்
உட்புகுதல் என்ற கோரிக்கையும்
மறுதலிக்கப்பட்டது,
வெற்றிக் களிப்பில் நான்;
உன்னிடம் இருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்
"எல்லோரையும் போலத்தானே நீயும்'
அகழி தூர்ந்தது;
படை குலைந்தது;
கவசங்கள் நொறுங்கி,
நான் நிராயுதபாணியானேன்.
உன் அடுத்த தாக்குதல், போரை
முடிவுக்கு கொண்டு வந்து விடக்கூடும்.
ஆயுதப்பிரயோகத்தை நீ விரும்பவில்லை
இயலாமையும், ஏமாற்றமுமாய்
துயர மௌனத்துடன்
திரும்பினாய்.
அந்த வினாடியில் இருந்து
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
என் சாம்ராஜ்யம்.

நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...
ஹக்...
கழுத்துக்கும் தோளுக்கும் இடையில்
எலும்புச் சந்துக்குள் அரை அடியைக்
கடந்தது ஈட்டி.
அதன் பின்னோக்கிய கூர்த்த
சிணுக்குகள் வலியின்
உச்சத்தைப் பரிசளித்தன.

ராட்ஷச மரங்கள் பச்சைப்
புள்ளிகளாய்,
ஏரியும் குளமும் நீரின்
துளியாய் தெரிய,
மலை உச்சி.
கால் கட்டை விரலுக்கு முன்னால்
சரேலென பாய்ந்த
பள்ளம் ;
உயரத்தின் பயத்தை
உள்ளங்கால்கள் உணர்த்திய போது,
கால்களுக்குக் கீழ்
பூமி நழுவியது.
த்தட்...

நீருக்குள் இருந்து காற்றுவெளியைத்
தேடிய கைகள் சலித்துப் போயின.
நுரையீரலின் கடைசிக் காற்றுக்
குமிழ் வெளியேறியது.
மூக்கை நம்பிப் பயனில்லை
சுவாசத்துக்காக துடித்த வாய் திறந்தபோது,
காற்றின் இடத்தை நீர்
நிரப்பியது.
ப்ளக்..

இப்படியான ஒரு சூழ்நிலையில்,
நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...

பிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்


சமீபத்தில் சக நண்பர்களுடன் தொழில் நிமித்த சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது, கொங்குமண்டலத்தில் புதிதாக முளைத்துள்ள நாகரிகம் என்ற பெயரிலான நடைமுறை ஒன்றின் மீது விவாதம் எழுந்தது. மூத்த பத்திரிகையாளரும் வழிகாட்டியுமான செல்வா அண்ணன் விவாதத்தைக் கிளப்பினார்.

கோவை பகுதியில் சமீபகாலமாக திருமணத்தை கோவிலில் நடத்தி விட்டு, ஓட்டலில் சாப்பாடு போடுவது பற்றி விவாதித்த போதுதான், நிதர்சனம் செவிட்டில் அறைந்தது.
திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நிகழ்வது(பெரும்பாலும் அப்படித்தான்). உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய நிகழ்வு அது. உறவினர்கள் சூழ, கேலியும், கிண்டலுமாக வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்கு துணையுடன் செல்லும் உற்சவம்.

திருமணம் என்றால் பட்டு, நகை, மேளதாளம் இவற்றுடன் சாப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்துக்காக உறவினரைக் கூட்டி, பந்திபரிமாறா விட்டால், திருமணம் நடந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், சமீபகால நாகரீகம் இந்த முறைக்கே வேட்டு வைத்துவிட்டது. கோவிலில் சிறிய அளவில் திருமணத்தை முடித்து விடுகின்றனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இன்னும் பெண் வீட்டார் உள்ள கிராமத்தில்தான் திருமணம் நடக்கிறது.

ஆனால், கொங்கு மண்டலத்தில் பெரிய, பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. வசதியைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக, வெரைட்டி வெரைட்டியாக சாப்பாடு போட்டு அசத்தும் திருமணங்களும் அரங்கேறும். ஆனால், வறுமையில் இருந்து திடீரென ஒரு ஐ.டி., கம்பெனியின் தயவால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சில கனவான்களின் செயல்பாடு, மரபுகளை உடைத்து விடும் போலிருக்கிறது.

சிம்பிளாக கல்யாணத்தை முடிக்கிறேன் பேர்வழி என்று, கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு, வந்த விருந்தினர்களுக்கு(விருந்தினர்கள் என்றே சொல்லக்கூடாது. உபசரித்தால்தான் விருந்தினர்கள்) கையில் டோக்கனை திணித்து விடுகின்றனர். அவர்களும் திருமண வீட்டார் கோவித்துக் கொள்ளக் கூடாதே என்ற காரணத்தினாலும், வைத்த மொய்க்கு இதையாவது தின்போம் என்ற அபிலாஷையாலும், ஓட்டல் வாசலில் காத்திருக்கின்றனர்.

ஒரு பிச்சைக்காரனைப் போல், அடுத்தவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரை, அவன் டேஷூக்குப் பின்னால் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது விருந்தையே அவமானப் படுத்துவது போல் இல்லையா? பிரம்மாண்டமாக திருமணம் நடத்தச் சொல்லவில்லை. உன்னால் பத்துப் பேருக்கு மட்டும் சாப்பாடு போட முடியும் என்றால், அதை நீயும், உன் உறவினர்களும் பரிமாறுங்கள்.

திருமணத்துக்காக சாப்பாடு கூட போடமுடியவில்லை என்றால், அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறாய். அதிலும், கிராமத்து உறவினனுக்கும், நகரத்தில் ஏழை நண்பனுக்கும் அழைப்பு விடுப்பதில்லை. சமூகத்தின் இந்த பிறழ்வுகளைத் திருத்த வேண்டிய அவசியம் சக மனிதன் என்ற முறையில் நமக்கும் இருக்கிறது. இந்த அதிபுத்திசாலித்தன கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கான தவறான வழிகாட்டுதல்.
உங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். ஓட்டலில் சாப்பாடு போடுவதை விட, யாருக்கும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது உத்தமம். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையை "மிஸ் கைடு' செய்யாமல் இருக்கும் புண்ணியமாவது உங்களைச் சேரட்டும்.
செல்வா அண்ணனின் இந்த கூற்றை உடனிருந்த யாரும் மறுக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் பதிவு செய்யுங்கள்.

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்ற கடந்த 28 மார்ச்சில் இடப்பட்ட இடுகையின் தொடர்ச்சி...

சிறிய அறிமுகம்...
கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி நளினிஜமீலா பங்கேற்ற ஒரு விவாதத்தில் இருந்து. முன்னதாக அவர் சிறிய கருத்துரை ஒன்றை வழங்கியிருந்தார். அவரின் பேச்சைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது. முதலில் கேள்வி கேட்க பலரும் தயங்கினர்.
விவாதம் துவங்கும் போது கேள்வி கேட்க யாரும் இல்லை. ஒருவர் கேள்வி எழுப்பியதும், தயங்கித் தயங்கி கேள்வி கேட்டவர்கள், ஒரு கட்டத்தில் சூடுபறக்க விவாதத்தில் இறங்கினர்.
இனி விவாதத்தில் இருந்து....

கேள்வி:
* இத்தொழிலில் இருப்பவர்களை மீட்டு, கல்வி போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கலாமே. வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால், திருந்தி ஒழுக்கமாக இருப்பார்களே?
பதில்:
* ""இரண்டு காரணங்கள் உள்ளன. அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் வேலை கொடுக்கும் சூழ்நிலை இங்கு இல்லை. இரண்டாவது விஷயம். இம்மாதிரி ஆட்கள் திரும்பிச் சென்று சமூகத்தில் உரிய மரியாதையுடன் வாழ முடியாது. பாலியல் தொழில் இல்லாமல் போக வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும். ஆனால், இருக்காமல் போகாது. பெண்ணடிமைத்தனமும், பெண்ணை அடிமையாக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு செயல்படும் குடும்ப நிறுவன அமைப்பும் இல்லாமல் போனால், பாலியல் தொழிலும் இல்லாமல் போகும். அதுவரை பாலியல் தொழிலை அங்கீகரிப்பது மன்னிக்கவும் வரைமுறைப்படுத்துவது என்ற நிலைப்பாடு தேவை''
கேள்வி:
* புத்தகம் வெளிவந்த பின், உங்கள் மீதான குழந்தைகளின் மனப்போக்கு; அவர்களின் மீது சமூகத்தின் பார்வை எப்படி இருந்தது?
பதில்:
* ""இரு பெண் குழந்தைகளில் மூத்தவள், ஆரம்பத்திலேயே என்னை விட்டு பிரிந்து விட்டாள். இரண்டாவது பெண்ணை, புத்தகம் எழுதிய பின் பல சமூக விவாத மேடைகளுக்கு அழைத்து வந்திருக்கிறேன். அவளுக்குத் தெரியும். அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்று; அவள் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறாள். சமூகம் அவளை மனரீதியாக துன்புறுத்தவில்லை''
கேள்வி:
* பாலியல் தொழிலை கட்டுப்படுத்த சட்டமே தேவையில்லை; அதை தனிமனித ஒழுக்கமாக மாற்றி விடலாம்; சட்ட மீறலாகவோ, குற்றமாகவோ பார்க்கத் தேவையில்லை என்பது பற்றி கருத்து?
""சட்டம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலுக்கு வந்தவர்களும், விபத்தாக தள்ளப்பட்டவர்களும் உண்டு. விபத்தாக தள்ளப்பட்டவர்கள், சமூக வாழ்க்கைக்கு திரும்ப, சட்டம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். பாலியல் தொழில் என்ற பெயரில், ஒரு பெண்ணை விற்பனை செய்ய சட்டம் தடையாக இருக்கும். எனவே, சட்டம் தேவை. ஆனால், ஒரு திருத்தம். இரண்டு பேர் சேர்ந்து விரும்பி இருக்கும் போது, அவர்களைக் கைது செய்யக்கூடாது. அவர்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது என்பதே என் கண்ணோட்டம்''
கேள்வி:
* ஆண்களுக்கு பாலியல் வடிகால் தேவை காரணமாகவே, வெளியில் பாலியல் சீண்டல்களும், பாலியல் ஒடுக்குமுறைகளும் எழுகின்றன என்பது பொதுவான கருத்து. அப்படியானால், சட்டரீதியாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில், பெண்களின் மீது பாலியல் ஒடுக்குமுறையும் சீண்டல்களும் இல்லையா? அது சாத்தியமாகி இருக்கிறதா?
பதில்:
* டாக்டர் ஒருவர் குறுக்கிட்டு, ""ஆண்களின் வடிகாலுக்காக, பெண்கள் சார்ந்த பாலியல் தொழில் உள்ளது என்றால், பெண்களும் அவர்களின் வடிகாலுக்காக, ஆண் பாலியல் தொழிலாளர்களிடம் போகலாமா என்ற விவாதம் எழும். அப்படி யதார்த்தம் எழுமானால், அதையும் அங்கீகரிக்கலாம். பொருளாதார சுதந்திரம் வளமை பெற்ற மேட்டுக்குடிப் பெண்களில், அப்படிப்பட்ட ஒரு பிரிவும் இல்லாமல் இல்லை. சமூகத்தில் அப்படியும் ஒரு சிறு பிரிவு இல்லாமல் இல்லை,'' என்றார்.

தீர்க்கமான கருத்துகளை முன்வைத்த ஜமீலா, ""தாய்லாந்து, கோல்கட்டா, மைசூர் பகுதிகளை உதாரணமாகக் காட்ட முடியும். மைசூரில் நான் செக்ஸ் ஒர்க்கராக இருந்துள்ளேன். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய உடனே மிக சுதந்திரமாக நடந்திருக்கிறேன்.
கோல்கட்டாவில் சோனாகாச்சி என்ற இடத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எச்.ஐ.வி., விழிப்புணர்வு தொடர்பாக, அங்கே சென்ற போது, இரவு 12.00 மணிக்கு மதுக்கடையில் மது அருந்தி விட்டு, ரோட்டில் மிக சுதந்திரமாக உலவி இருக்கிறேன். கேலி, கிண்டல் இல்லை.
தாய்லாந்தில் சுகப்பேரியா என்ற பகுதி உள்ளது. புதிதாக திருமணமான தம்பதியினர், தன் தோழர்களுடன் சேர்ந்து அங்கு நடக்கும் "செக்ஸ் ஷோரூம்' நிகழ்ச்சிக்கு செல்வர். அங்கு, பாலியல் தொழிலாளி நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகள், செயல் முறைகளை விளக்குவர். அதைப்பார்க்க நிறைய பேர் வருவர். அந்த புதுமண தம்பதியினர் இதில் வெட்கப்படுவதில்லை; அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
"தேவையான பொருள், தேவையான இடத்தில் கிடைக்கும் போது, தேவையில்லாத சீண்டல்கள் இருக்காது,' என்பதே என் கருத்து. அதற்காக ஒரு குடும்பப் பெண்களின் மீதான சீண்டல் முற்றிலும் இருக்காது என்று கூறவில்லை; மிக மிகக் குறைந்து விடும் என்கிறேன்,'' என்றார்.

ஒரு இளம்பெண் குறுக்கிட்டு, "தாய்லாந்து சென்றிருக்கிறேன். அங்கு பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. லாங்சபாங் என்ற பகுதியில் இதுதான் பிரதான தொழில். அடையாள அட்டை, தடுப்பு உபகரணங்கள் என அனைத்து விஷயங்களும் உண்டு. பாலியல் தொழிலாளிகளை அனைவரும் மதிக்கின்றனர். ரோடுகளில் சீண்டல் இல்லை.
ஆனால், எளிதாக இத்தொழிலில் காசு கிடைக்கிறது என்பதற்காக, இளம்பெண்கள் நிறைய பேர் வேலைக்குச் செல்வதில்லை; படிக்க செல்வதில்லை, என்ற புகார் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால், தொழில் துறை ஸ்தம்பிக்கிறது, என்ற குற்றச்சாட்டும் உள்ளது,'' என்றார்.

"கஷ்டமில்லாத' என்ற வார்த்தையை மறுத்தபடி பேசினார் ஜமீலா. ""கோல்கட்டாவில், செக்ஸ் ஒர்க்கராக இருந்து கொண்டு, படித்து டாக்டரானவர்களும் உண்டு. பாலியல் தொழில் சுலபமானது இல்லை. கண்ணுக்கும் மனதுக்கும் பிடிக்காதவர்கள் வருவர். காசு கொடுக்காமல் ரகளை செய்பவர்களும் உண்டு. பாலுறவு, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வாரத்துக்கு ஒரு முறையே தேவைப்படும்.
ஆனால், தொழிலாக செய்யும் போது பலமுறை உறவு கொள்ள நேரிடும். அது கஷ்டம்தான். பணம் சம்பாதிக்க எளிது, ஈசி என்பதால், தொழிலில் இறங்கி விடுகின்றனர் என்று கூறி விட முடியாது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிப்பு உண்டு.
மனைவியை இரண்டாம் முறை நெருங்கினால், <உடல்வலியால் மறுக்கின்றனர். அப்படியானால், பாலியல் தொழிலாளிக்கு ஏன் கஷ்டம் இருக்காது. நாங்களும் சாதாரண பெண் போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் தானே. சிலர் எங்களை அடிக்கும் போது, "ஓ' என கத்தக்கூட முடியாது. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால், அது கவலைப்பட வேண்டிய விஷயம்''
கேள்வி:
* பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் தேவையா?
பதில்:
* ""தேவையற்ற பாலியல் கட்டுப்பாடுகள், அத்துமீறலுக்கு காரணமாக இருக்கின்றன. அதற்காக, எல்லாரும் இத்தொழிலுக்கு வந்து விடுங்கள் என்று அர்த்தமில்லை. பாலியல் கல்வி அனைவருக்கும் தேவை. சில எழுத்தாளர்கள் சொல்வது போல், பாலுறவு என்பது சொர்க்கானுபவம் இல்லை. சின்ன உணர்வு அவ்வளவே. நமக்கு சாதாரணமாக சிறுநீர் கழிக்கும் முன் ஏற்படும் உணர்வும்; கழித்த பின் கிடைக்கும் நிம்மதியையும் போன்றதே. மிக உயர்ந்த அனுபவம் எல்லாம் கிடையாது. ஆண் என்றால் இவ்வளவுதான், பெண் என்றால் இவ்வளவுதான், என இளைய தலைமுறைக்கு தெரியவைத்து விட்டால் போதும். பாலியல் அத்துமீறல்கள் குறைந்து விடும்.
பாலியல் தொழில் இருக்க வேண்டும்; இருந்தே தீர வேண்டும் என்று கூறவில்லை; பாலியல் தொழில் பாதுகாப்பு இயக்கம் எதையும் நடத்தவில்லை. ஆனால், பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படாத போது, வரைமுறைக்குள் கொண்டு வரப்படாத போது, ஏராளமான தவறுகள் ஏற்படுகின்றன.
செய்தித்தாள்களில் குற்றம் தொடர்பான செய்திகள் பெரும்பாலும் செக்ஸ் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. பாலியல் தொழில் என்பதை தவிர்க்கவும், ஒழிக்கவும் முடியாத நிலையில், அதை வரன்முறைப்படுத்துவதில் தவறு இல்லை. உச்சநீதிமன்றமும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது,'' என்றார்.

இப்படியாக விவாதம் நீண்டு கொண்டே இருந்தது. பாலியலைப் பற்றி சமூகத்தின் ஒரு தரப்பு என்ன நினைக்கிறதோ இல்லையோ; பெரும்பான்மை இளைய சமுதாயம் தெளிவாகவே இருக்கிறது.
வேண்டும், வேண்டாம் என்று சொல்லி விட, அது கடைச்சரக்கு இல்லை. தேவையற்ற கட்டுப்பாடு, விதிமீறலுக்கு வழி வகுக்கும். காட்டாற்று வெள்ளமாக கட்டவிழ்த்து விட்டால், கரையை உடைத்து விடும். கவனமாகக் கையாள்வது அவசியம். விவாதத்தில் பங்கேற்றவர்களில் பால்பேதமில்லை. பாலுக்கும், பாலியலுக்கும் அப்பாற்பட்டவர்களாகவே, பேச்சு இருந்தது. யாராகினும் விவாத அரங்கில் பங்கேற்றிருந்தால், இளைய சமுதாயம் தறிகெட்டுத் திரிகிறது என்ற வாக்கியத்தை சந்தேகமில்லாமல் வாபஸ் வாங்கி இருப்பர்!
இனி உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன்

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?

ஒரு பாலியல் தொழிலாளி பங்கேற்ற விவாத அரங்கின் தொகுப்பில் இருந்து இவை தரப்பட்டுள்ளன. மிக நீண்ட, சிந்திக்க வேண்டிய விவாதம் என்பதால், இரண்டு பதிவுகளாக இட உத்தேசித்துள்ளேன் நண்பர்களே. ஜமீலாவின் பேச்சில் மலையாளவாடை இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.


பாலியல் பற்றிய விவாதம் தேவையா, இல்லையா என்பதே விவாதத்துக்கு உரிய ஒன்றாகி விட்டது. தயங்கித் தயங்கி முணுமுணுக்கப்பட்ட ஒரு விஷயம் இன்று அரங்க விவாதத்துக்கு வந்து விட்டது. நாளை வீதிக்கும் வரும்; வர வேண்டும். இதற்கெல்லாம் காரணகர்த்தா எய்ட்ஸ். எச்.ஐ.வி., விழிப்புணர்வு, உயிர் பயம் என்ற பின்னரே, உலகுக்கு பாலியல் தொழில் குறித்த விவாதத்தின் மீது அக்கறை வந்தது.
இருளோடு தொடர்புடையதல்ல பாலியல் என்ற அடிப்படையில் சமீபத்தில் அனல் பறக்கும் விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது, திருப்பூர் "பதியம்' அமைப்பு.
விவாதத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் நளினி ஜமீலா; கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி. அவர் எழுதிய சுயசரிதை புத்தகம், பெண்ணியம் பேசுபவர்களையும், முற்போக்குவாதிகளையும் திரும்பி பார்க்க வைத்தது. இத்துறையின் மீதான பலரின் கவனத்தையும் திகைக்கச் செய்து ஈர்த்தது.
குளச்சல் மு.யூசுப் "நளினிஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை' என தமிழாக்கம் செய்துள்ளார். புத்தகத்தின் மீதான கருத்துப்பதிவாக துவங்கி, பாலியல் தொடர்பாக அனல் பறக்கும் விவாதமாக மாறியது அந்நிகழ்ச்சி.
பெரிய அளவில் பெண்கள் பங்கேற்காத போதும், இளம்பெண்கள் சிலர் பங்கேற்றனர். சங்கோஜமின்றி அவர்கள் பங்கு பெற்ற வி(வா)தம் இளைய தலைமுறையின் விசால அறிவை வெளிக்காட்டியது. முதலில் ஜமீலா பேசினார். பின்னர் தொடங்கியது விறுவிறு விவாதம்.

ஜமீலா பேசியதிலிருந்து...
கேரளாவில் 33 ஆண்டுகள் பாலியல் தொழிலாளியாக இருந்தேன். எச்.ஐ.வி., விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில், மற்ற துறையினர் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்ள, அரசுக்கு எங்களின் உதவி தேவைப்பட்டது.
"நான் ஒரு பாலியல் தொழிலாளி' என்று சொல்லிக் கொள்வதில் சங்கடம் இருந்தது. ஆனால், விருப்பப்பட்டு யாரும் இத்தொழிலுக்கு வந்து விடுவது இல்லை. விபத்தாக, காலச்சூழ்நிலையின் விளைவாக இதில் தள்ளப்படுகிறோம்.
ஆனால், சமூகம் எங்களைக் குற்றவாளியாக மட்டுமே பார்த்தது; பார்க்கிறது. விருப்பமில்லாத ஒருவரை எங்களுடன் உறவு கொள்ள அழைத்து விட முடியாது. இதுகுறித்த வழக்கில், ஆண்களை விட்டு விட்டு, பெண்களை மட்டும் அரசுத்துறை தண்டிக்கிறது.
போலீசார் எங்களை அடித்து, பணத்தைப் பறித்துக் கொண்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, பிறகே கோர்ட் மூலம் தண்டனை பெற்றுத் தருகின்றனர். ஒரு தவறுக்கு, அதுவும் எங்கள் மீது திணிக்கப்பட்ட தவறுக்கு, நான்கு முறை தண்டனை பெறுகிறோம். என் வாழ்க்கையை எழுதும் போது, இப்புத்தகம் எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தரும் என்றோ, சுதந்திரத்தைத் தரும் என்றோ எனக்குத் தெரியாது.
ஆணாதிக்கம் பேசும்போது, பெண்களுக்கும் சேர்த்து வேலை செய்தல், பாதுகாப்பு என்று பல விஷயங்கள் உள்ளடங்கி உள்ளன. ஆனால், பெண்களுக்கு சுதந்திரம் என்று வரும்போது மட்டும், வீட்டுக்குள் அடங்கிக்கிட; சமையலறையே உன் கதி என்று சொல்லி விடுவர். ஆனால், எங்களைப் போன்ற பாலியல் தொழிலாளர்கள், ஆண்களின் அடக்குமுறை இல்லாததால், நிறைய சுதந்திரத்துடன் உள்ளோம். அதற்காக, எல்லா பெண்களும் பாலியல் தொழிலாளியாக மாறி, அதற்குப்பின் சுதந்திரமாக இருப்பது என்று அர்த்தமில்லை.
இந்த விவாத அரங்கிற்கே, பெண்களை யாரும் அழைத்து வரவில்லை. சினிமாவுக்கு உங்கள் பெண்களை அழைத்துச் செல்லாமல்தான் இருக்கிறீர்களா. "இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நீ கேட்கக்கூடாது. நாளை பாலியலைப் பற்றி பேசினால், என்னால் பதில் சொல்ல முடியாது' என்ற பயம் இருக்கிறது.

ஆண்களுக்கு பாலியல் பற்றித் தெரியவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், பொது இடத்தில் அதைப் பேசலாமா கூடாதா என்ற தயக்கம் இருக்கிறது.
பாலியல் உறவு என்பது இருட்டறையில் மட்டும் நடக்கக்கூடியது; இரண்டு பேருக்கு தெரிந்து மூன்றாவது நபருக்கு தெரியக்கூடாத விஷயம், என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி பொண்டாட்டிக்கு புருசனோடு பேசுவதற்குக்கூ கூட அவகாசம் இல்லை. "ஆணுக்கு தெரிந்ததற்கும் மேல் அவங்களுக்குத் தெரிந்தால், அது எங்கிருந்து தெரிந்தது என்ற சந்தேகம் வரும். பொண்டாட்டிக்கு எப்படித் தெரியும். யார் சொல்லித் தந்தது' என்ற கேள்வி எழும்.
என்வாடிக்கையாளர்களிடம் விளையாட்டுத்தனமாக கேட்டதுண்டு. நீங்கள் இப்படி வருவது உங்கள் பொண்டாட்டிக்குத் தெரியுமா என்று.

"அப்பப்பா அப்படி நெனைக்கக்கூட முடியாதுன்னு' சொல்வாங்க. ஏன் உங்கள் மனைவிக்கு அந்தமாதிரி உணர்வே இல்லையா என்று கேட்டால், அவளுக்கு தெரிந்தால், ஆயிரம் கேள்வி கேட்பாள், அதற்கு என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, என்பர்.
ஆனால், அதே ஆண்கள் பாலியல் தொழிலாளியுடன் உறவு கொள்ள வரும்போது,
"உனக்கு ஏன் இந்த செக்ஸ் பற்றி தெரியவில்லை; அந்த செக்ஸ் பற்றி தெரியவில்லை, ஏன் இந்த மாதிரி உறவு கொள்ளக்கூடாது, அது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை' என்று, நிறைய கேள்வி கேட்பார்கள்.
ஆனால், இதையே நாங்கள் திருப்பிக் கேட்டால் பதில் கிடைப்பதில்லை. எங்களுக்கே பதில் கிடைக்காத போது, குடும்பப் பெண்களுக்கு எப்படிப் பதில் கிடைக்கும்.
மத்த எந்த விஷயத்துக்கு உரிமை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட, பாலியல் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்காக, பாலியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் உறவு என்றால் என்ன, எந்த சமயத்தில் உறவு கொள்ளக்கூடாது, யாருடன் உறவு கொள்ளக்கூடாது; நம்மீது பாலியல் தாக்குதல் நடந்தால் எப்படி சமாளிப்பது, என்பன போன்ற அறிவு பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு வேண்டும்.
அந்தக்காலம் போல இல்லை இப்போது. பெண்கள் இரவில் தனியாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. பாலியல் வன்முறைகளை தவிர்க்க, அந்த தொழிலில் இளம்பெண்கள் தள்ளப்படுவதை தவிர்க்க, பாலியல் குறித்து விவாதிக்க வேண்டும்.


பாலியல் பற்றி பேசுபவர்களும்; அதுபற்றி தெரிந்தவர்களும், பாலியல் தொழிலாளி, அவர்களின் வாடிக்கையாளர்கள் என்று கருதக்கூடாது. பாலியல் பற்றி விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, எங்களிடம் வெறுமனே பேசிச் செல்வதற்காக வருபவர்களும் உண்டு.
பாலியல் தொடர்பாக பொதுக்கூட்டத்தில் விவாதிக்க ஆசைதான்; வேறு வழியில்லாத போது சிறு அரங்கங்களில் விவாதிக்கலாம். "ச்சீ போ' என்று பாலியலைப் பற்றி சொன்ன காலம் முடிந்து போய்விட்டது. இணையத்துக்குள் சென்றால், தேவையானவை கிடைத்து விடுகிறது. புத்தங்களும் உள்ளன.
பாலுறவு, சுயஉணர்வுகள், உடல்நலம் பற்றியும் பகுத்துணர வேண்டியுள்ளது.

இந்தப்புத்தகம் எழுதியதற்கு வேறொரு கோணமும் உள்ளது. அடுத்ததலைமுறைக்கு, இந்தமாதிரியான ஒரு பிரச்னை உள்ளது என்று தெரியவைக்க வேண்டும்.
இதைப்படிக்கும் இளையதலைமுறையினர் அதிகாரிகளாகும் போது, "பாலியல் தொழிலாளிகளைப்பற்றியும், அவர்களின் குழந்தைகள், அவர்களுக்கான பிரச்னைகள் என்ன, எப்படித்தீர்வு காண்பது' என, சிந்திப்பார்கள்.
2010 ல்கூட இதுபற்றி விவாதிக்கக்கூடாது என கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி என்றால் நமக்கு விழிப்புணர்வு வரவில்லை என்றுதான் அர்த்தம்.
கேரள பல்கலையில், என் புத்தகம் உயர்கல்வி பாடத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு சில எழுத்தாளர்கள் "ஷேக்ஸ்பியர் அவுட்; நளினி ஜமீலா இன்' என விமர்சித்தனர். ஷேக்ஸ்பியர் எழுதியது என்ன; நளினி ஜமீலாவின் வரலாறு என்ன, என்றுகூட வித்தியாசம் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தன் உணர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளவும், பாலியல் அறிவியல் பாடம் அவசியம் என, ஜமீலா முடித்தார்.

தமிழக அரசின் கவனத்திற்கு...

தமிழில் பதிப்பிக்கப்படுமா ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்


தமிழக வரலாற்றில் 18ம் நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றைப் படம் பிடித்துக்காட்டும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தமிழில் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களால் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சி இருந்தது என்பதை மறுக்கும் விதமாக கிடைக்கப்பெற்ற இந்தச் சான்றாவணம், ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மட்டுமே முழுமையாக கிடைக்கிறது. தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் இந்த நாட்குறிப்புகளைத் தமிழில் முழுமையாக பதிப்பிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 18ம் நூற்றாண்டு குழப்பமான சூழல் நிலவிய காலம். தஞ்சையில் மராத்தியரும், ஆற்காட்டில் நவாபும், சென்னையில் ஆங்கிலேயரும், புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் ஒரே காலத்தில் நடந்தன. இதுதவிர, நாகை மற்றும் பரங்கிப்பேட்டையில் டச்சுக்காரர்களும், தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களும், ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இக்காலத்தில் நிலவிய அரசியல், சமூக சூழ்நிலைகளை நாம் அறிந்து கொள்ளும் வகையில், சில நாட்குறிப்புகள் கிடைத்துள்ளன. அவை, 18ம் நுõற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கம்பிள்ளை(1709-1761), ரெங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை(1737-1791), இரண்டாம் வீராநாயக்கர், முத்துவிஜய திருவேங்கடம்பிள்ளை(1777-1801) ஆகியோரின் நாட்குறிப்புகளே ஆகும்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. இவர், பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் புதுவையில் காலுõன்ற முக்கியப்பங்கு வகித்த டூப்ளே என்பவரிடம், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.
இந்தநாட்குறிப்பு 1736ம் ஆண்டில் இருந்து 1761ம் ஆண்டு வரையிலான கால்நூற்றாண்டுகாலச் செய்திகளை நமக்குத் தருகிறது.
அப்போதைய காலகட்டத்தில் நிலவிய அரசியல்சூழ்ச்சிகள்; சமுதாய நிகழ்வுகள், கலகங்கள், முற்றுகைகள்; கப்பல் போக்குவரத்து, வர்த்தகம்; முகலாயர் மற்றும் நவாபுகளின் தர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரர்களின் அரசாளும் முயற்சி; புதுவை, ஆற்காடு, வந்தவாசி, திருச்சி, ஐதராபாத், தில்லி பகுதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்' மக்கள் பட்ட சிரமங்கள், அன்னியர்கள் அடித்த கொள்ளை; அக்கால பிரமுகர் வரலாறு, போர்தந்திரங்கள் என, பல்வேறு தகவல்களும் வழக்குத் தமிழிலில் எழுதப்பட்டுள்ளன.
இந்தநாட்குறிப்புகளை, 1836ல், பிரெஞ்சு வருவாய்த்துறை அதிகாரி அர்மோன்கலுவா மொபார், ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் இருந்து கண்டறிந்து, நகலெடுத்தார். அதுவார் ஆரியேல் என்ற பிரஞ்சுக்காரரும் 1850ம் ஆண்டு நகலெடுத்தார். இரு நகல்களும் பாரிஸ் தேசிய நுõலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக எடுக்கப்பட்ட நகலில் இருந்து, மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக்காப்பகம் மேற்கொண்டது. இப்பணி 1892ல் துவங்கி 1896ல் முடிந்தது. இந்நகல், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது.
இந்நகலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அப்போதைய சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894ம் ஆண்டு முதல் 1928ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் கடந்த 1948ம் ஆண்டில் இருந்து 1963ம் ஆண்டு வரை, தமிழில் தொகுதிகள் வெளியிடப்பட்டன. ஆனால், 1736 செப்., 6ம் தேதி முதல், 1753 செப்.,8ம் தேதி வரையான நாட்குறிப்புகள் மட்டும் எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு பிந்தைய 1761 ஜன.,12ம் தேதி வரையிலான நாட்குறிப்புகள் இதுவரை தமிழில் வெளியிடப்படவில்லை.
தமிழில் எழுதப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த நாட்குறிப்பு ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் முழுமையாக கிடைக்கிறது. ஆனால், தமிழில் எட்டு தொகுதிகள் மட்டும் கிடைப்பது வேதனைக்குரிய ஒன்று.
இந்தநாட்குறிப்புகளில் சிலவற்றை பதிப்பித்துள்ள ஜெயசீலன், ""ஐரோப்பியர்கள் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றினர் என இதுவரை கொண்டிருந்த கருத்து மாற்றப்பட வேண்டும்,'' என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
18ம் நுõற்றாண்டில் வழங்கிய தமிழ் உரைநடையை காட்டும் ஒரு ஆவணம் தமிழில் வெளியிடப்படாதது மிகப்பெரும் குறை. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள நிலையில், முழுக்க முழுக்க தமிழில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்றை, தமிழில் முழுமையான தொகுதிகளாக வெளியிட அரசு முன்வர வேண்டும்.

குழூஉக்குறி

முறி,
துருவம்(வாச்சை),
காளை(எசவு),
தொழுவு,
பனையம்,
தட்டை,
பொருத்து,
ஆழி,
வலுவு,
தாயம்,
துருவம்...

பள்ளிப்பக்கம்
ஒதுங்காத
தம்பான்
சரளமாக
மாட்டை விலை
பேசிக்கொண்டிருந்தான்.

அரைலட்சம் சம்பளத்தில்
பேராசிரியர் சொன்ன
குழூஉக்குறி
நகைக்கிறது என்னை.

தாழற்ற கழிப்பறைகண்கள் மட்டும் தெரியும்
முகக் கவசமணிந்து,
கருநிறப் புரவியில் ஆரோகணித்து
வருவாய் என கற்பிதம் செய்திருந்தேன்.
நீயே முகத்துக்கு மட்டும்
கவசம் பூண்டிருந்தாய்.

கைக்குப்பதிலாக கொடுநாவில்
வைத்திருந்தாய்
வார்த்தைச் சாட்டைகளை.
எனக்காக உலகை விலை பேசுவாய்
என்றிருந்தேன்; நீயும் பேசினாய்
உனக்கான விலையை.

தொலைபேசி அழைப்புகளோடு
ஒப்பிடுகையில்,
என் கண்களின் அழைப்பை
கவனிக்க நேரமில்லை உனக்கு.
நின்று, நிதானித்து,
உள்ளுக்குள் பிரவகித்து,
உட்புகுந்து, வெளிவந்து,
எழுந்து, மூழ்க
வேண்டும் எனக்கு;

நீயோ
அவசர கதியில்
மென்று துப்பிவிடும்
வேகத்தில் இயங்குவாய்.
உனக்குள் ஏதோ ஒன்று
விழித்துக் கொள்ளும்போது
எனக்குள் ஒன்று
உடைந்து கொள்கிறது.

அந்த நேரங்களில்
தாழற்ற கழிப்பறையில்
இருப்பதாக
உணர்கிறேன் நான்.

அவரோகணம்
அவரோகணத்தில் இருந்து
ஆரோகணத்துக்குச் சென்று
நிறுத்திய போது,
சில வினாடிகள்
சலமனற்று, பின்
சப்தித்தது சபை.

மனம் நிறைந்த
பூரிப்பும்,
முன்கை சுமந்த
மாலையுடனும்
இல்லம் நுழைந்த
என்னை,
"ஒரு கப் காபி கொடேன்'
என்ற உன் குரல்
வரவேற்றது.

உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கிறாரா?

காந்திக்கு இன்னும் மவுசு குறையவில்லை. அதுதான் காந்திபடம் போட்ட நோட்டு இருக்குல்ல என்கிறீர்களா. நான் அதைச் சொல்லவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட தமிழ்ப்புத்தகம் எது தெரியுமா? "தமிழ்நாட்டில் அண்ணல் காந்தியடிகள்'; 27ஆயிரம் பிரதிகள்.
எழுதியவர் வி.டி. சுப்ரமணியன்(9443179028: 04212477228). திருப்பூர் கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது.

இருக்கட்டுமே அதனால் என்ன என்றுதான் எனக்கும் முதலில் தோன்றியது. அப்படி என்னதான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று பார்க்க புத்தகத்தை வாங்கினேன். பத்து ரூபாய் என விலை போட்டிருந்தார்கள். அதை விட ஆச்சரியம் மொத்தம் இருபதே பக்கங்கள்.


முன் அட்டையின் உள்பக்கத்தில், 1925ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திருப்பூருக்கு காந்தி வந்திருந்த போது எடுத்த படத்தையும், 1936ல் நேரு, 1937ல் பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் திருப்பூர் வந்த போது எடுத்த படங்களை அச்சிட்டுள்ளனர்.


இரண்டாம் பக்கம் புத்தகம் பற்றிய குறிப்புரை. கூடவே, 1969ல் இந்திய அரசின் நூற்றாண்டு விழா தபால்தலை காந்தி படம் போட்டது. மூன்றாம் பக்கம் பதிப்புரை; நான்காம் பக்கம் தியாகி முத்துசாமியின் வாழ்த்துரை; ஐந்தாம் பக்கம் மதம் குறித்த காந்திகருத்து..... என்னடா இது வித்தியாசமா பக்கம் பற்றிய வர்ணனை, போரடிக்கிறதே.


உண்மையில் அதற்கு பிறகு ஒரே புள்ளி விவரங்கள் தான். 1896 டிச., 14ம் தேதி முதன்முதலில் தமிழகத்துக்கு வந்தார் என்பதில் துவங்கி, எந்தெந்த தேதிகளில் தமிழகத்தின் எந்ததெந்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எங்கு என்ன நிகழ்ச்சிகள் நடந்தன, என்பதை அவ்வளவு அழகாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.


கம்யூ., கட்சியின் நல்லக்கண்ணு இதைப்படித்து விட்டு, "எங்க ஊருக்கு காந்தி வந்திருக்காரா? தெரியலையே' என சிலாகித்தாராம். அவ்வளவு துல்லியமான விவரங்கள் இதில் இருக்கின்றன. நூலாசிரியர் திருப்பூர்வாசி என்பதால், திருப்பூருக்கு காந்தியின் வருகை குறித்து தனியாக விளக்கி இருக்கிறார்.அதுமட்டுமல்ல, எம்.எப்.ஹூசைன், ஆர்.கே. நாராயணன் போன்ற பிரபல ஓவியர்களால் வரையபட்ட காந்தியின் கோட்டோவியங்கள் ஆங்காங்கு இடம் பெற்றிருக்கின்றன.காந்தி நூற்றாண்டு விழா ரஷ்ய நாணயங்கள், சிலி, பிரிட்டன், இத்தாலி, உகாண்டா, ரஷ்யா, அமெரிக்கா, காமரூன், மால்டா நாடுகளால் வெளியிடப்பட்ட காந்தி தபால் தலைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்கள், சிறையில் இருந்த நாட்கள்(தென் ஆப்பிரிக்கா உட்பட) பிடித்த பாடல், பிடித்த மொழி(குஜராத்திக்கு அடுத்து தமிழ்தான் பிடிக்குமாம். அழகாக தமிழில் கையெழுத்தும் இடுவாராம்), காந்தியின் அஸ்தி திருப்பூரில் இருக்கிறது என, சுவாரஸ்ய தகவல்களுக்கும் பஞ்சமில்லை.பாரத தேசத்தில் நான் எங்கு சென்றாலும் கதர் ஆடை அணிந்து கூட்டத்திற்கு வருபவர்கள் மிகவும் குறைவானவர்கள் என்பதை கவனித்திருக்கிறேன். ஆனால், தென்னிந்தியாவில் திருப்பூர் என்னும் ஊரில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் கதர் ஆடை உடுத்தியிருந்தது நம்பிக்கை அளித்தது.

யங் இந்தியாவில் காந்தி எழுதியது.


"இந்தியாவின் கதர் லங்காஷையர் திருப்பூர்' "கதரின் தலைநகரம் திருப்பூர்' இவை திருப்பூர் பற்றிய காந்தியின் புகழாரங்கள்.திருப்பூரில் அரிஜன நிதிக்காக காந்தியிடம் பணம் கொடுத்தவர்கள், அரிஜன மக்கள் அல்ல. கவுண்டர், அய்யர், செட்டியார், நாயுடு இனத்தவர்கள், என்ற தகவலையும் இதில் அறிய முடியும்.


வாய்ப்பு கிடைத்தவர்கள் படித்துப் பாருங்கள். ஒரு வேளை உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கக் கூடும்.

மௌனத்தின் கோப்பை

ஒலிகள் கெட்டிப்பட்டு
கிடந்த சந்தை,
வெண்ணிற சிறகு விரித்த
தேவதையின் வருகையில்
நிர்ச்சலனமானது.

நீட்சி பெற்ற விரல்களால்
கோப்பை ஒன்றை வைத்தது
அத்தேவதை,
"வழியும் அளவுக்கு நிரப்புவோர்
முன்வரலாம்'
வார்த்தைகளை உதிர்த்து விட்டு
காத்திருந்தது.

இரவின் அந்தகாரத்தை எடுத்து வந்து
ஊற்றினான் தனிமை விரும்பி;
உள்ளே நுழைவதற்குள்
உலர்ந்து போயிற்று.

மயானத்தின் நிசப்தங்களை
திரட்டி வந்து கொட்டினான்
வெட்டியான்;
கால்வாசிக்குள்
காணாமல் போயிற்று.

வார்த்தைகளால் வரையறுக்க
இயலாததை
எப்படி விளக்க,
அகராதி தேடியது ஒரு புத்தகப்புழு.

"வழியும் அளவுக்கு மௌனத்தை
நிரப்ப முடியாது'
முணுமுணுத்தான் தர்க்கவாதி.

இவையும், இன்னபிறவும்
பயனற்று போக,
கூட்டத்தில் உ(ம)றைந்திருந்தது
மௌனம்.

யாரும் எதிர்பாராத
கணத்தில்,
நிர்வாணம் உடுத்திய
சிறுமியின் கொலுசொலியில்
நிரம்பி வழிந்தது
மௌனத்தின் கோப்பை.

உலகத் தமிழ்ப் (செம்மொழி) பாதுகாப்பு மாநாடு- கூத்துகளுக்கு அளவேயில்லையா?

உலகத்தமிழ் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி, தி.மு.க., அரசு(கவனிக்கவும்தமிழக அரசு அல்ல) தமிழைப் பாதுகாக்கப் போகிறது. தமிழ்மொழியின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க தி.மு.க., அரசு இருக்கிறது; அவர்களுக்கு மட்டுமே அந்த தார்மீக உரிமை இருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அதில் பங்கு கேட்பதில் என்ன நியாயம் இருக்க முடியும், திருவாளர்கள் தமிழ் மகாஜனங்களே?

கோவையில் செம்மொழி மாநாடு நடக்க உள்ளது. அதே இடத்தில், உலகத்தமிழ் பாதுகாப்பு மாநாடு நடத்த, டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கோருகிறார். அப்படியானால், அரசியல் சாணக்கியர் கலைஞரை எதிர்க்கும் அளவுக்கு அவருக்கு துணிச்சல் வந்துவிட்டதா என்ன?

இதையெல்லாம் இப்படியே விட்டுவிடக்கூடாது என, எண்ணிய கோவை காவல்துறை(ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்தபடியாய் நாங்கதான்), அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இம்மாநாடு நடத்தக்கூடாது, என தமிழக அரசு சார்பில் டி.ஜி.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், விடாக்கண்டன் கிருஷ்ணசாமி விடுவதாயில்லை; கோர்ட்டுக்கு போய்விட்டார்.

மேல்முறையீட்டில், "மாநாடு நடத்துவது குறித்து, அங்குள்ள சூழலை ஆய்வு செய்து கோவை மாநகர காவல்துறை அறிக்கை தயாரித்து அனுப்ப வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவுதான் கிடைச்சாச்சே என்று, கிருஷ்ணசாமியும், கோவை கமிஷனர் சிவானாண்டியை சந்தித்து, ஆலோசனை நடத்தி விட்டார்.

பிப்., 6,7ம் தேதிகளில் மாநாடு நடத்த திட்டம் போட்டுருக்காங்களாம். ஆனா, இன்னிக்குள்ள(3ம்தேதி) அனுமதி கிடைச்சாதான் மாநாட்டு பணிகளை துவக்க முடியும். கமிஷனரோ, "கோர்ட் உத்தரவுப்படி, சட்டப்படி பரிசீலனை செய்து அறிக்கை தயார் செய்து அனுப்பப்படும்'னு சொல்லியிருக்கார்.

இதுல யார் பலசாலி. எட்டு மாசமா ஒரு கவர்ன்மென்டே மாநாட்டு பணியில ஈடுபட்டுட்டு இருக்கு. அவங்க மேலய புகார்மேல புகார்.(அட, அநியாயமே. செம்மொழி மாநாட்டுக்காக,கோவை மாநகராட்சிக்கு 113 கோடி ரூபாய்ல, இன்னும் ஒரு பைசாகூட ஒதுக்கலயாமே. யரோ ஒரு புண்ணியவான், தகவல் அறியும் உரிமைச்சட்டத்துல அதையும் கேட்டுருக்கானுங்க)
ஆனா, நம்மாளு 3ம் தேதி அறிவிச்சா, 6ம் தேதி மாநாடு நடத்திருவேனு மார்தட்டிட்டு நிற்கறாரு. அப்ப கண்டிப்பா, கிருஷ்ணசாமிதான் பலசாலி.

இதுல ஒரு விஷயம் மட்டும் புரியல எனக்கு. ஒட்டு மொத்த தமிழனுங்களோட பிரதிநிதிகளா இவங்கள யார் நியமிச்சது? போதும்ப்பா, "முள்வேலி' கொடுமையை தகர்க்க, தீக்குளிச்சு செத்தவன் செத்தான். அவன அரசியல் ஆயுதமா பயன்படுத்தின படுபாவிங்களும் இருக்காங்க. இப்ப என்னடான்னா, தமிழ் மொழி ரட்சகர்களாக தன்னை அறிவிச்சுக்க இவங்க படுற பாட்ட பாத்தா சிரிப்பு வரல. கண்ணீர்தான் வருது.

அடுத்த எலக்ஷன்ல, தேர்தல் வாக்குறுதி என்ன தெரியுமா? செம்மொழி மாநாட்டுல கலந்துகிட்டவங்களுக்கும், கேட்டவங்களுக்கும், பாத்தவங்களுக்கும், படிச்சவங்களும், கேள்விப்பட்டவங்களுக்கும், அதப்பத்தி பேசுனவங்களுக்கும், குறை சொல்லாதவங்களுக்கும், விளக்குபுடிச்சவங்களுக்கும், அதுக்கு எண்ணெய் ஊத்துனங்களுக்கும், மூணு வேளையும் எலவசமா சோறு போடறாங்களாம்... சோறுபோடறாங்களாம்.... சோறுபோடறா...ங்களா...ம்.

'கண்டக' குதிரைகள்இரவின் நிசப்தம் கலைந்து விடாமல்

களையப்பட்டன அணிகலன்கள்;

ஆடைகளும் பாரமோ,

உரியப்பட்டன துகில்கள்.


கழல், குண்டலம், கணையாழி

இத்யாதி இத்யாதிகள்;

எவையெல்லாம் பாரமாகுமோ

அவையெல்லாம் அகற்றப்பட்டன,

இதந்தரு மனையும், மனையும் நீங்கினான்.

வெண்ணிப்பறந்தலையில் பிறர் வெட்க,

போர்புரிந்த கரிகாலனின்

திருப்தி இருந்தது முகத்தில்;

புதிதாய் பிறந்தது போல், எதுவும் இல்லாமல்.உயிரற்ற சுமைகள், உணர்ச்சிகள் அகன்ற பின்

சுமப்பதற்காகவே இருந்த புரவி

பின்தொடர்ந்தது நிழலாய்; நள்ளிரவிலும்.

தண்ணொளி பட்டு மின்னிய

ஆற்றின் கரையில்

இறுதியாய் புரவியையும் நீங்கினான்;

புரவி இறக்கி வைத்தது உடல் சுமையை;

அவன் கால்களை நாவால் ஈரப்படுத்திய பின்;

தன் உயிர்ச் சுமையையும்.

சித்தார்த்தன் புத்தன் ஆவதிலும்

இருக்கிறது சிக்கல்

இறக்க வேண்டி இருக்கிறது

'கண்டக' குதிரைகள்.
குறிப்பு:சித்தார்த்தன் குதிரையின் பெயர் கண்டகம்