பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கிறாரா?

காந்திக்கு இன்னும் மவுசு குறையவில்லை. அதுதான் காந்திபடம் போட்ட நோட்டு இருக்குல்ல என்கிறீர்களா. நான் அதைச் சொல்லவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட தமிழ்ப்புத்தகம் எது தெரியுமா? "தமிழ்நாட்டில் அண்ணல் காந்தியடிகள்'; 27ஆயிரம் பிரதிகள்.
எழுதியவர் வி.டி. சுப்ரமணியன்(9443179028: 04212477228). திருப்பூர் கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது.

இருக்கட்டுமே அதனால் என்ன என்றுதான் எனக்கும் முதலில் தோன்றியது. அப்படி என்னதான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று பார்க்க புத்தகத்தை வாங்கினேன். பத்து ரூபாய் என விலை போட்டிருந்தார்கள். அதை விட ஆச்சரியம் மொத்தம் இருபதே பக்கங்கள்.


முன் அட்டையின் உள்பக்கத்தில், 1925ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திருப்பூருக்கு காந்தி வந்திருந்த போது எடுத்த படத்தையும், 1936ல் நேரு, 1937ல் பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் திருப்பூர் வந்த போது எடுத்த படங்களை அச்சிட்டுள்ளனர்.


இரண்டாம் பக்கம் புத்தகம் பற்றிய குறிப்புரை. கூடவே, 1969ல் இந்திய அரசின் நூற்றாண்டு விழா தபால்தலை காந்தி படம் போட்டது. மூன்றாம் பக்கம் பதிப்புரை; நான்காம் பக்கம் தியாகி முத்துசாமியின் வாழ்த்துரை; ஐந்தாம் பக்கம் மதம் குறித்த காந்திகருத்து..... என்னடா இது வித்தியாசமா பக்கம் பற்றிய வர்ணனை, போரடிக்கிறதே.


உண்மையில் அதற்கு பிறகு ஒரே புள்ளி விவரங்கள் தான். 1896 டிச., 14ம் தேதி முதன்முதலில் தமிழகத்துக்கு வந்தார் என்பதில் துவங்கி, எந்தெந்த தேதிகளில் தமிழகத்தின் எந்ததெந்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எங்கு என்ன நிகழ்ச்சிகள் நடந்தன, என்பதை அவ்வளவு அழகாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.


கம்யூ., கட்சியின் நல்லக்கண்ணு இதைப்படித்து விட்டு, "எங்க ஊருக்கு காந்தி வந்திருக்காரா? தெரியலையே' என சிலாகித்தாராம். அவ்வளவு துல்லியமான விவரங்கள் இதில் இருக்கின்றன. நூலாசிரியர் திருப்பூர்வாசி என்பதால், திருப்பூருக்கு காந்தியின் வருகை குறித்து தனியாக விளக்கி இருக்கிறார்.



அதுமட்டுமல்ல, எம்.எப்.ஹூசைன், ஆர்.கே. நாராயணன் போன்ற பிரபல ஓவியர்களால் வரையபட்ட காந்தியின் கோட்டோவியங்கள் ஆங்காங்கு இடம் பெற்றிருக்கின்றன.



காந்தி நூற்றாண்டு விழா ரஷ்ய நாணயங்கள், சிலி, பிரிட்டன், இத்தாலி, உகாண்டா, ரஷ்யா, அமெரிக்கா, காமரூன், மால்டா நாடுகளால் வெளியிடப்பட்ட காந்தி தபால் தலைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்கள், சிறையில் இருந்த நாட்கள்(தென் ஆப்பிரிக்கா உட்பட) பிடித்த பாடல், பிடித்த மொழி(குஜராத்திக்கு அடுத்து தமிழ்தான் பிடிக்குமாம். அழகாக தமிழில் கையெழுத்தும் இடுவாராம்), காந்தியின் அஸ்தி திருப்பூரில் இருக்கிறது என, சுவாரஸ்ய தகவல்களுக்கும் பஞ்சமில்லை.



பாரத தேசத்தில் நான் எங்கு சென்றாலும் கதர் ஆடை அணிந்து கூட்டத்திற்கு வருபவர்கள் மிகவும் குறைவானவர்கள் என்பதை கவனித்திருக்கிறேன். ஆனால், தென்னிந்தியாவில் திருப்பூர் என்னும் ஊரில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் கதர் ஆடை உடுத்தியிருந்தது நம்பிக்கை அளித்தது.

யங் இந்தியாவில் காந்தி எழுதியது.


"இந்தியாவின் கதர் லங்காஷையர் திருப்பூர்' "கதரின் தலைநகரம் திருப்பூர்' இவை திருப்பூர் பற்றிய காந்தியின் புகழாரங்கள்.



திருப்பூரில் அரிஜன நிதிக்காக காந்தியிடம் பணம் கொடுத்தவர்கள், அரிஜன மக்கள் அல்ல. கவுண்டர், அய்யர், செட்டியார், நாயுடு இனத்தவர்கள், என்ற தகவலையும் இதில் அறிய முடியும்.


வாய்ப்பு கிடைத்தவர்கள் படித்துப் பாருங்கள். ஒரு வேளை உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கக் கூடும்.

0 comments:

Post a Comment