பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

சிறகும், நானற்ற நானும்...




முன்நோக்கி கீழ் வளைந்திருந்தன
மரக்கிளைகள்
மிக மெலிதாக வீசியபடி கிளைகளை
ஊடறுத்த காற்று,
வேம்பின் கசப்பை நாசித்துவாரங்களருகே
விட்டுச் சென்றது.

சட்டென குதித்தது என்முன்
கருடனின் ஒற்றை இறகு;
மிதப்பதும், வீழ்வதுமான வினாடிகளுக்கு முன்
நகைத்தது எனைப்பார்த்து.

வியப்பின் விலாசம் அகலாமல்
விளம்பினேன்
யார் நீ?

நீயற்ற நீயாக இருந்தால் சொல்கிறேன்,
குழப்பியது இறகு.

நான்... நான்... திணறிய பின்,
நீ யார் கூறியது கூறினேன்; ஓ, மன்னிக்கவும்,
வினவியது வினவினேன்.

நான் நானற்ற நான்...
மீண்டும் சிரித்தபடி கூறிற்று அது.

என்னிடம் கோபத்தை
எதிர்பார்த்திருக்க கூடும்; மௌனித்தேன்.

சரி நானொன்று கேட்கிறேன் சொல்,
"இறந்த காலத்தில் நிகழ்ந்ததை,
நீ நிகழ்காலத்தில் பார்க்கிறாய்'
கேள்வியை வீசி விட்டு பார்த்தது.

மௌனித்தேன்.

"ஒளி ஆண்டுகளுக்கு முன் உமிழப்பட்ட
நட்சத்திரங்களின் ஒளி இறந்த காலத்தில் நிகழ்ந்தது;
புவியை வந்தடைய தாமதமாகையால்,
நீ, நிகழ்காலத்தில் பார்க்கிறாய்'
விடையிறுத்தது.

என்னிடம் ஏன் சொல்கிறாய்?
முகம் சுருக்கினேன்.

ஏனென்றால், நான் "நானற்ற நான்'
விஷமமாக சிரித்தது சிறகு.

அருகிருந்த புளியமரத்தின் பூக்களை
உதிர்த்து விட்டு வந்த காற்று,
கருடனின் சிறகை
சுழற்றித் தூக்கிப் பறந்தது.

மணலாடிய குருவிகள்



ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம். தம்பி வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை தூங்க விடாமல் இம்சித்து, மேலே ஏறி, இறங்கி விளையாடிக் கொண்டிருந்த சுதீப்(என் சகோதரியின் இரண்டரை வயது மகன்) மேலே எதையோ பார்த்து விட்டு ஓடி வந்தான். ரகசியம் பேசும் குரலில் மாமா 'குவ்வி கூடு' என்று சுட்டிக்காட்டினான். சிட்டுக்குருவியின் கூடு இருந்தது அங்கே. ஆச்சரியமாக இருந்தது எனக்கு. காரணம் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போயிருந்த சிட்டுக்குருவி மீண்டும் கூடு கட்டியிருந்ததது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருந்த நடராசு அப்பிச்சி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. "சிவனுக்கும் சிட்டுக்குருவிக்கும் பிறப்பு இறப்பில''.
சிலேடை வாக்கியம் அது; சிவன் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதையும், சிட்டுக்குருவியின் பிறப்பு இறப்பில் என்பதையும் சுட்டிக்காட்டும் வாக்கியம். இறப்பு என்பது வீட்டு இறவாரம். (ஓட்டு வீட்டுக் கூரையின் முன்பக்கம்; திண்ணை போன்ற பகுதியின் மேற்கூரைக்கு இறவாரம் என்று பெயர். கொங்கு நாட்டு மக்களின் பாஷையில் அது "இ(எ)றப்பு' ஆகி விட்டிருந்தது).

வழக்கமாக தம்பி வீட்டு இறவாரத்தில் சிட்டுக்குருவி கூடு இருந்து கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக பெரியப்பா முக்கால்வாசி கட்டிமுடித்த கூட்டை பிய்த்து எறிந்து விட, மீண்டும் கூடு கட்ட வரவேயில்லை சிட்டுக்குருவிகள். அருகருகே இரண்டு வீடுகள் இருந்தாலும், அந்தக்காலத்து வீடுகள் என்பதால், ஒவ்வொரு வீட்டின் முன்னும் கிணறுகள் உண்டு. எங்கள் வீட்டுக்கிணறு ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக, தண்ணீர் இறைக்கும் உருளை போடுவதற்காக உயரத்தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு பிரம்மாண்ட கல் தூண்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன.
தம்பி வீட்டுக்கிணறு இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. அந்த கிணற்றினுள் சிட்டுக்குருவிகள் எப்போதும் கெக்கலிட்டுக் கொண்டிருக்கும். முற்றத்தில் காயப்போட்டிருக்கும் கம்பு, சோளங்களை கொத்தித் தின்ன வரும். ஒரே இடத்தில் அமராமல் துறுதுறுவென தாவிக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவியின் தலை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்று திசைகளை நோக்கி பார்த்திருக்கும்; அவ்வளவு வேகம். சிட்டுக்குருவி நடத்தும் மண்குளியலை பார்த்தவர்கள் எளிதில் மறக்க முடியாது.
சமீபகாலமாக சிட்டுக்குருவிகளை பார்க்கவே முடியவில்லை. கிணற்றுக்குள் ஒன்றிரண்டு மட்டுமே இருக்கக்கூடும். நகர வாழ்க்கையில் விருந்தாளியை பார்ப்பது போன்று என்றாவது ஒருநாள் தரிசனம் தரும். சுதீப் சுட்டிக்காட்டிய பின்னரே, சிட்டுக்குருவி என்ற உயிரினத்தை ஏறக்குறைய மறந்து விட்டது நினைவுக்கு வந்தது.
இப்போதே சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் என்னாவாகும். மிருககாட்சி சாலையில் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்ட உயிரினமும் இல்லையே. அதைப்பற்றி கவலை கொள்ளவாவது யாரேனும் இருப்பார்களா என தெரியவில்லை. சுதீப்புக்கு சிட்டுக்குருவியை நான் காட்டி விட்டேன். அவன் மகன்/மகளுக்கு நேரில் காட்ட வாய்ப்பிருக்குமா? சிட்டுக்குருவிகளுக்காகவே, கோவில் முன்மண்டபங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் நெற்பூங்கரகம்(நெற்கதிர்களால் அலங்கார விளக்கு போல் வடிவமைக்கப்பட்டு தொங்க விடப்பட்டு இருக்கும்) எந்தக்குருவியால் இனி தின்னப்படும்?
குருவி கூடுகட்டுவதை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா? நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் மட்டுமே இனி சிட்டுக்குருவியை நம் வாரிசுகளுக்கு காட்டி, அட அங்க பாரு ஸ்பாரோ, க்யூட்டா இருக்கு இல்ல என சொல்லும் காலம் வரலாம். ஆனாலும் மணலாடும் சிட்டுக்குருவிகளை நேரில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பின்குறிப்பு: புதிய கூட்டையும் பெரியப்பா பார்த்தார். பிய்த்து எறியவில்லை. "டே தம்பி, அந்த ஃபேனை கழட்டி வைங்கடா. குஞ்சு பொரிச்சு பறந்து போற வைக்கும், யாராவது போட்டுற போறங்க. அடிபட்டு செத்துப்போயிரப் போவுது பாவம்' என்றார் பேரனை தூக்கி கொஞ்சியவாறே.

ரிதுக்குட்டியும் அனு என்றொரு தோழனும்

பெங்களூரு சி.வி., ராமன் நகரில் கோவில் கொண்டுள்ள அனுமந்தராயர், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், இன்னபிறருக்கும் கடவுள். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களில் 90 சதவீதத்தினரின் இஷ்ட தெய்வமாக ஹனுமன் இருப்பார். ஏனெனில் இந்துக்கடவுள்களில் பிரதானமான ராமனின் அடியவர்; சர்வ வல்லமை படைத்த கடவுள்; பெரும்பாலான ஜிம்களில் வலிமைக்கு உதாரணம். தமிழார்வம் மிக்கவர்களுக்கு சொல்லின் செல்வன். சில அரசியல் கட்சியினருக்கு பிரதான லோகோ. சுருக்கமாக சொல்லப்போனால், நோபல் பரிசுக்கு தகுதியுடையவரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கும், அமெரிக்க அதிபரின் இஷ்ட தெய்வமும் கூட.
இவ்வளவு பிரசித்தியும், சர்வ வல்லமையும் பெற்ற ஒருவர் உங்களுக்கு என்னவாக இருக்க முடியும். கடவுள் என்ற உறவைத் தவிர. ஆனால், இதைப்பற்றியெல்லாம் ரிதுவுக்கு தெரியாது; அதைப்பற்றிய கவலையும் இல்லை அவளுக்கு.
ஓ….. இதுவரை ரிதுவை அறிமுகப்படுத்தாமைக்காக மன்னிக்கவும். அவள் இந்த பூமிக்கு புதுவரவு; ஜஸ்ட் 12 லட்சத்து 74 ஆயிரத்து 41 நிமிடங்களே ஆகின்றன. கணக்கிட சிரமமாக இருக்கிறதா; ரிது(ரிதன்யா) 29 மாதங்களான அழகிய குட்டி தேவதை.
ரிதுவை பொருத்தவரை ஹனுமான், ஹனு ஆகி, அனு ஆகி விட்டிருக்கிறார். தன் வயதொத்த சிறு தோழனாகவே பாவிக்கிறாள். தன் வயதொத்த, என்று நாமாகத்தான் எண்ணிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவள் எங்கு சென்றாலும், அனு அவளின் தோளில் அமர்ந்திருப்பான், அல்லது பின்னால் வந்து கொண்டிருப்பான். ( ஆஷ்டான அனுபூதிகள் மன்னிப்பார்களாக). அவ்வளவு சிறிய உருவத்துக்கு இரண்டு ஆண்டுகள் வயது இருக்குமா என்ன?
என்னதான் பிரெண்டாக இருந்தாலும், கிண்டர்ஜாய்(குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்) வாங்கினால், அனுவுக்கு கிடையாது. தான் “புஸ்“(இயற்கை உபாதைக்கு, ரிது வைத்திருக்கும் பெயர்) போனதையும் அனுவிடம் யாரும் சொல்லக்கூடாது.
அம்மா வலிக்குது, அனுக்கிட்ட ச்சொல்லுங்க( எதுவாயினும், அனுவிடம் சொன்னால் சரியாக போய்விடும் என்பது, ரிதுவின் நம்பிக்கை). உறங்கும் போது, அனுவும் உடன் பள்ளிகொள்வான். இன்னும் ரிதுவுக்கு வரைய தெரியாது என்பதால், அனுவை எந்தமாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறாள் என தெரியவில்லை. ஒரு வேளை குஷிவாலி கபீஷ் மாதிரி இருக்க கூடும்.(கபீஷ் குறும்பும், புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குரங்கு- காமிக்ஸ் ஹீரோ)
யார் மீதும் கோபம் வந்தால், ரிது உடனே அனுவிடம் சொல்லிவிடுவாள். சில சமயங்களில் அனுவுக்கும் சேர்த்து திட்டு கிடைக்கும்.
குழந்தைகளுக்கான உலகம் தனி. எல்லாவற்றையும் குழந்தைத்தனமாகவே அணுகுகிறது. அது கடவுளாகவே இருக்கட்டுமே; அதனால் என்ன?
ரிதுவுக்கு மேலும் சில நண்பர்கள் உண்டு. அவர்களும் அனுவோடு தொடர்புடையவர்களே. அத்தனை பேருமே அவளின் பரந்து விரிந்த கற்பனை ராஜ்ஜியத்துக்கு உரியவர்கள்.
ச்சிம்ப்பு(சிம்பன்சி என்பதன் சுருக்கம் தான் அது தமிழ் நடிகர்கள் யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல); சுக்ரீவன்தான் சிம்பன்சி ஆகி, ச்சிம்பு ஆகியிருக்கிறார். அடுத்த கற்பனை கேரக்டர் ராமாயணம். மற்ற இரு நண்பர்களையும் குரங்கு வடிவில் கற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால், ராமாயணத்துக்கு என்ன உருவம் கொடுக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில் ரிதுவால் முடிந்திருக்கிறது.
அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட(வெல்கம் டூ தி கார்பொரேட் வேர்ல்டு) அம்மம்மாவுடன் இருக்கும் ரிது, இந்த மூவருடனும்தான் விளையாடுவாள். உங்களுக்கு தெரியுமா, அப்பாவின் கார் அவளுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால், பிரண்ட்ஸ்களுடன் பைக்கில் போவதுதான் அவளுக்கு பிடிக்கும், ஒரு முறை ரிது, அனு, ச்சிம்பு, ராமாயணம் நான்கு பேரும் பைக்கில் போன போது, போலீஸ் பிடித்து விட்டது. பின்னே, ஒரே பைக்கில் நான்கு பேர் சென்றால் பிடிக்க மாட்டார்களா. அப்புறம் எப்படி தப்பித்தார்கள் என்பதை ரிது எனக்கு சொல்லவில்லை.
அவளின் உலகத்தை விவரிக்க இந்த தளம் போதுமானதாக இருக்காது என்பதால், இத்துடன் நிறுத்தி உத்தேசித்திருக்கிறேன்(அப்பாடா).
என்ன சொல்வதற்காக இதை எழுதினேன் என தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள். எதை கடவுளிடம் சொல்ல வேண்டும்; அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்.
அவர்களும் கடவுளுடன் விளையாடுகிறார்கள்; நாமும் கடவுளை வைத்து(!) விளையாடுகிறோம்.
அடுத்த முறை அவள் வரும்போது, அனுவைப் பற்றி மேலும் விசாரித்து சொல்கிறேன். நீங்கள் பெங்களூரு போனால், சி.வி., ராமன் நகருக்கு விசிட் அடித்து, அனுவை நலம் விசாரியுங்கள்.