பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

மணலாடிய குருவிகள்ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம். தம்பி வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை தூங்க விடாமல் இம்சித்து, மேலே ஏறி, இறங்கி விளையாடிக் கொண்டிருந்த சுதீப்(என் சகோதரியின் இரண்டரை வயது மகன்) மேலே எதையோ பார்த்து விட்டு ஓடி வந்தான். ரகசியம் பேசும் குரலில் மாமா 'குவ்வி கூடு' என்று சுட்டிக்காட்டினான். சிட்டுக்குருவியின் கூடு இருந்தது அங்கே. ஆச்சரியமாக இருந்தது எனக்கு. காரணம் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போயிருந்த சிட்டுக்குருவி மீண்டும் கூடு கட்டியிருந்ததது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருந்த நடராசு அப்பிச்சி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. "சிவனுக்கும் சிட்டுக்குருவிக்கும் பிறப்பு இறப்பில''.
சிலேடை வாக்கியம் அது; சிவன் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதையும், சிட்டுக்குருவியின் பிறப்பு இறப்பில் என்பதையும் சுட்டிக்காட்டும் வாக்கியம். இறப்பு என்பது வீட்டு இறவாரம். (ஓட்டு வீட்டுக் கூரையின் முன்பக்கம்; திண்ணை போன்ற பகுதியின் மேற்கூரைக்கு இறவாரம் என்று பெயர். கொங்கு நாட்டு மக்களின் பாஷையில் அது "இ(எ)றப்பு' ஆகி விட்டிருந்தது).

வழக்கமாக தம்பி வீட்டு இறவாரத்தில் சிட்டுக்குருவி கூடு இருந்து கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக பெரியப்பா முக்கால்வாசி கட்டிமுடித்த கூட்டை பிய்த்து எறிந்து விட, மீண்டும் கூடு கட்ட வரவேயில்லை சிட்டுக்குருவிகள். அருகருகே இரண்டு வீடுகள் இருந்தாலும், அந்தக்காலத்து வீடுகள் என்பதால், ஒவ்வொரு வீட்டின் முன்னும் கிணறுகள் உண்டு. எங்கள் வீட்டுக்கிணறு ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக, தண்ணீர் இறைக்கும் உருளை போடுவதற்காக உயரத்தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு பிரம்மாண்ட கல் தூண்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன.
தம்பி வீட்டுக்கிணறு இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. அந்த கிணற்றினுள் சிட்டுக்குருவிகள் எப்போதும் கெக்கலிட்டுக் கொண்டிருக்கும். முற்றத்தில் காயப்போட்டிருக்கும் கம்பு, சோளங்களை கொத்தித் தின்ன வரும். ஒரே இடத்தில் அமராமல் துறுதுறுவென தாவிக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவியின் தலை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்று திசைகளை நோக்கி பார்த்திருக்கும்; அவ்வளவு வேகம். சிட்டுக்குருவி நடத்தும் மண்குளியலை பார்த்தவர்கள் எளிதில் மறக்க முடியாது.
சமீபகாலமாக சிட்டுக்குருவிகளை பார்க்கவே முடியவில்லை. கிணற்றுக்குள் ஒன்றிரண்டு மட்டுமே இருக்கக்கூடும். நகர வாழ்க்கையில் விருந்தாளியை பார்ப்பது போன்று என்றாவது ஒருநாள் தரிசனம் தரும். சுதீப் சுட்டிக்காட்டிய பின்னரே, சிட்டுக்குருவி என்ற உயிரினத்தை ஏறக்குறைய மறந்து விட்டது நினைவுக்கு வந்தது.
இப்போதே சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் என்னாவாகும். மிருககாட்சி சாலையில் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்ட உயிரினமும் இல்லையே. அதைப்பற்றி கவலை கொள்ளவாவது யாரேனும் இருப்பார்களா என தெரியவில்லை. சுதீப்புக்கு சிட்டுக்குருவியை நான் காட்டி விட்டேன். அவன் மகன்/மகளுக்கு நேரில் காட்ட வாய்ப்பிருக்குமா? சிட்டுக்குருவிகளுக்காகவே, கோவில் முன்மண்டபங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் நெற்பூங்கரகம்(நெற்கதிர்களால் அலங்கார விளக்கு போல் வடிவமைக்கப்பட்டு தொங்க விடப்பட்டு இருக்கும்) எந்தக்குருவியால் இனி தின்னப்படும்?
குருவி கூடுகட்டுவதை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா? நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் மட்டுமே இனி சிட்டுக்குருவியை நம் வாரிசுகளுக்கு காட்டி, அட அங்க பாரு ஸ்பாரோ, க்யூட்டா இருக்கு இல்ல என சொல்லும் காலம் வரலாம். ஆனாலும் மணலாடும் சிட்டுக்குருவிகளை நேரில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பின்குறிப்பு: புதிய கூட்டையும் பெரியப்பா பார்த்தார். பிய்த்து எறியவில்லை. "டே தம்பி, அந்த ஃபேனை கழட்டி வைங்கடா. குஞ்சு பொரிச்சு பறந்து போற வைக்கும், யாராவது போட்டுற போறங்க. அடிபட்டு செத்துப்போயிரப் போவுது பாவம்' என்றார் பேரனை தூக்கி கொஞ்சியவாறே.

0 comments:

Post a Comment