பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

காசுமரம்


உள்ளங்கை பிசுபிசுப்பில் உறுத்தியது
வட்டமாய் இருந்த வஸ்து
இதை வைத்து என்ன
வாங்கலாம்?
கோமதியிடம் இருக்கற மாதிரி
மின்னாம்பூச்சி,
சரசுகிட்ட மயில்குஞ்சு,
யோகுகிட்ட பனங்கருப்பட்டி,
தேன்மிட்டாய்,
சுத்தரமிட்டாய்,
எலந்த வடை,
சடை வில்லை,
ஊசிக்கப்பலின் வாலாய்
நீ...ண்டது பட்டியல்.
எல்லாமே வாங்கலாம்
காசு மரம் முளைச்சதுக்கப்புறம்...
விழுங்கப்பட்டது காசு.

குழந்தை என்னுமோர் "குறும்பு'யல்

நம்மை விட புத்திசாலிகளிடம் பேசும்போது 'எச்சரிக்கை'யாகவும், முட்டாள்களிடம் பேசும்போது 'அதிக எச்சரிக்கை'யாகவும் பேசுவது நல்லது, நண்பர் திரு தனது பதிவில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். படிக்கும் போது ஏனோதானோ என்று படித்து விட்டேன். அவரிடம் கேட்க வேண்டும் குழந்தைகளிடம் பேசும் போது எப்படிப் பேச வேண்டும் என்பது. தயவு செய்து முட்டாள் போல பேசிவிடுங்கள் அதுதான் நல்லது என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள் சுவி, சுவேதா; பக்கத்து வீட்டு குட்டி தேவதை ( பக்கத்து வீட்டுக்கு மட்டும். பின்னே என்னை மூக்கறுத்தால், குட்டிச்சாத்தான் என்றுதானே சொல்லத்தோணும்).
விஷயம் இதுதான். நான்கைந்து சோட்டாளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சுவி. பள்ளியில் ஆசிரியர்கள் இவளுக்கு நடத்திய பாடத்தை, வீட்டு வாசல் படிகளுக்கும், நாற்காலிகளுக்கும் நடத்திக் கொண்டிருந்தாள். சலிப்புத் தட்டி விட்டதால், "மாமா நீதா நெறைய படிச்சியாமா எங்கம்மா சொல்லிச்சு (அப்படியா சொல்லி வச்சுருக்காங்க.. ம்ஹூம் இது ஆவறதில்ல). எதாவது கதை சொல்லு. தங்க(ம்) கதை இருந்தா சொல்லு". (பொண்ணுக காரியத்துல கண்ணா இருக்காங்க).
நான் கதை சொல்ல பிரயத்னப்படாமல், சமாளிக்க முயன்றேன். ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சங்கத் தமிழரின் பெருமையை பீற்றலாம் என நினைத்து, "அந்தக் காலத்துல நம்ம கிட்ட நெறைய நெறைய
தங்கம் இருந்துச்சாம். நம்ம ஆத்தா இருக்குல்ல அவங்கள மாதிரி இருக்கறவங்க, காதுல பெரிசா தொங்கட்டான் மாதிரி குண்டு குண்டா தங்கம் போட்டிருப்பாங்களாம். கோழி, காக்காய் எல்லாம் நெல்லு தானியத்த கொத்த வந்துச்சுனா, காதுல இருக்கற தங்கத்த கழட்டி வீசிதான் விரட்டுவாங்களாம்".
நிசமாவா... நம்பாமல் பார்த்தாள். (அந்த முகச்சுளிப்புக்கே ஆயிரம் பொன் தரலாம்). அவ்ளோ நெறையாவா... பொய் சொல்லலைல்ல. ஒரு வழியாக நம்பி, கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள்( மறுபடியும் ஆயிரம் பொன்).
திடீரென வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அக்கா, "நகத்தக் கடிக்காம இருக்க மாட்டியா. பொழுதோட நகம்வெட்டறது, கூட்டறதுன்னு ஆகாத வேலையத்தான் செய்வ. சொன்ன கேட்கறதே இல்ல" போகிற போக்கில் சுவியை வசைபாடி விட்டு போக.
காதருகே, எப்பப்பார்த்தாலும் இப்டிதான். ஏ மாம்சு, நைட்ல நகம் வெட்டக்கூடாதா, டைம் கிடக்றப்பதா வெட்ட முடியும். உங்கக்கா கிட்ட சொல்லு' என்றாள் சுவி.
அதுக்கப்பறம்தான் சனி ஏழாம் இடத்தில் நீச்சம் பெற்றான்.
"அம்மாக்கு ஒன்னும் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப மாதிரி பளிச்சுனு எரிய வெளக்கு இல்ல. மின்சாரம் இல்ல. அதனால, கொஞ்சம் வீடு இருட்டா இருக்கும். நகத்தை சரியா வெட்ட முடியாது. சிந்திக்கிடக்கறத முழுசா கூட்ட முடியாது. கூட்டி அள்றதுல சின்னச் சின்ன பொருட்கள் குப்பையோட வெளில கொட்டிருவோம் இல்ல. அதனாலதான் அப்படி சொல்லியிருப்பாங்க".
என் மேதாவித் தனத்தைக் காட்டவும், எனக்குத் தெரிஞ்ச பகுத்தறிவை அவளுக்கும் ஊட்டலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னதற்கு அவளிடம் உடனடி மறுமொழி வந்தது. ஆனால், வேறுவிதமாக.
சினிமாவில் காட்டுவார்களே "ஆப் ரவுண்டு டிராலி ஷாட்' அதே மாதிரி இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னை அரைவட்டம் போட்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 30 நொடிகள் இடை வெளி விட்டு பேசினாள். அதே மாதிரி நீங்களும் படித்துப் பாருங்கள்." நைட்டு..... கூட்டினா.... சின்னப் பொருள்... குப்பையில போயிரும்....."
முகத்துக்கு நேரே கை நீட்டியபடி, "மூஞ்சிய பாரு. அதா தங்கத்தையே வீசி கோழி முடுக்கறாங்களாம். கூட்டுனா சின்ன பொருள் வெளியே போயிரும்னு, விட்டுட்டாங்களாம். தங்கத்த விட, சின்னப் பொருள பெரிசா நினைப்பாங்களாக்கு. தெரிஞ்சா ஒழுக்கமா சொல்லணும். இல்லேன்னா..... டேஷ் மாதிரி ஒளறக்கூடாது.(அவளின் வகுப்புத் தோழி ஒருத்தியின் பெயர்தான் அந்த டேஷ்சில் வர வேண்டிய பெயர். கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை. பெயர் நினைவில் இல்லாததால் டேஷ் போட்டிருக்கேன்)
"டே அழகு வாடா விளையாடப்போலாம். இதுக்கு எங்க அம்மாவே பரவால்ல," சற்றும் மதிக்காமல் அவள்பாட்டுக்கு போய்விட்டாள். நான் கீழே கிடந்த என் மூக்கை அக்காவுக்கு தெரியாமல் எடுத்து மாட்டிக் கொண்டு, அவசரமாக வெளியே போய் விட்டேன்.
அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். இனி குழந்தைகளிடம் முட்டாள் மாதிரி பேசிவிடுவது எல்லாருக்கும் நல்லது என்று.

கம்யூனிஸ்டுகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு - சமூகத்தின் புரிதல்

பதிவர் செம்மலர் அவர்களின் "கோவிந்தசாமியின் விலகலும், போலி கம்யூனிஸ்டுகளின் வேடமும்' என்ற இடுகைக்கு பதில் இடுகையாகவே இடப்படுகிறது. அவருக்கு பின்னூட்டம் இடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். சற்றே நீளும் எனத் தோன்றியதாலும், இதர "தோழர்'களை விவாதத்துக்கு அழைக்கவும் முடிவு செய்தே, இப்பதிவு இடப்படுகிறது. நான் ஒன்றும் கம்யூ.,க்களின் தீவிர எதிர்ப்பாளனோ, ஆதரவாளனோ அல்ல.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், "கம்யூனிஸ்டுகள் நாம் நினைப்பது போல் இல்லை; அங்கும் ஊழல் மலிந்திருக்கிறது. எனவேதான் கோவிந்தசாமி என்ற தனி மனிதனும் விலகி, மற்ற கட்சியினரைப் போலவே நாங்களும் என நிரூபித்திருக்கிறார்' என்பதே, செம்மலர் அவர்களின் கருத்துப்பிழியல் என நினைக்கிறேன்.
அதை நேரடியாகவே அவர் சொல்லி இருக்கலாம். திருப்பூர் வாசி என்பதால், திருப்பூரின் இதர முகங்களையும் தொட்டுத்துலக்கி, தொழிலாளர் பிரச்னை என சுற்றி வளைத்து, கம்யூ.,க்களின் வேடத்தை உரிக்க நினைத்திருக்கிறார்.
அவர் சொல்வதில் சிறிது உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இங்குள்ள முதலாளிகள் கட்டாயமாக எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை வாங்குகிறார்கள் என்பது வெளி உலகுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சூழலில் எட்டு மணி நேர வேலை என்பது வெறும் பேச்சு மட்டுமே. அனேகமாக தோழர் செம்மலரும் (எந்தப் பணி செய்பவராக இருப்பினும்) எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாகவே உழைப்பவராக இருப்பார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
//திருப்பூரில் எந்த தொழிலாளியும் கொத்தடிமை கிடையாது சொல்லப்ப்போனால்

எட்டுமணி நேரம் மட்டும் அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை மட்டும்

என சொன்னால் வேலைக்கு சேராத தொழிலாளிகளைத்தான் இங்கு பார்கிறோம்

ஏன் இந்த நிலை என்றால் ஒரு நாள் இரண்டுநாள் ஓடி பார்த்தால்தான் இங்கு

இருக்கும் விலைவாசிக்கு வண்டி ஓட்ட முடியும் அதற்கு தகுந்தாற்போல

வீட்டு வாடகை மற்றும் விலைவாசி ஏறிவிட்டது .
///
பின் நிதர்சனத்தை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வெளிப்படையாக சொன்னதற்காக அவருக்கு இந்த தண்டனை அவசியமா? கம்யூ.,க்கள் என்றாலே, 100 சதவீத வார்ப்புகளாக, நெகிழ்வுத் தன்மை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று நாமாகவே அர்த்தப்படுத்திக் கொள்வது எவ்விதத்தில் நியாயம்?
///
லாஜிக் படி கோவிந்த சாமி செய்தது சரிதான் ஒரு வகையில் ஆனால்

கட்சி இதற்காக இவரை எச்சரிக்கவில்லை மாறாக அவர் வாங்கிய தொகையில்

கட்சியின் மாநில கமிட்டிக்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால் தூக்கியது.///
இந்தக் குற்றச்சாட்டை எந்த அடிப்படை ஆதாரத்தை வைத்து சாட்டினீர்கள் செம்மலர். பொத்தாம்பொதுவாக இக்குற்றச்சாட்டை நீங்கள் எப்படி வைக்க முடியும்? நீங்கள் சொல்வது போல் கம்யூ., கட்சியிலும் ஊழல் இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், எரியும் கொள்ளியில் நல்ல கொள்ளி இவைதான். அப்படியே இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டை(!), கம்யூ., கட்சி என்றால் மக்கள் மனதில் இருக்கும் படிமத்தை உடைக்கும் விதத்தில் காசு வாங்கியவருடன் சமரசம் பேசச் சொல்கிறீர்களா என்ன?
/// போலி கம்யுனிஸ்டுகள் பேசுவதெல்லாம் சும்மா உருகி உருகி ஓடும் திருப்பூர்

வீதியில் திமுக காரன் அதிமுக காரன் எல்லாம் என்ன சொன்னாலும் தொழிலாளர்

மத்தியில் எடுபடாது அதே நேரத்தில் இந்த போலி தொழிற்சங்க வாதிகளும்

முதலாளிகளும் ஏமாற்றும் அப்பாவி ஜீவன்கள் தொழிலாளர்கள் தாம்.///
ஹா, திருப்பூர் என்ன கம்யூ.,க்களின் எஃகு கோட்டை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க., காரன் சொன்னாலும் எடுபடும். கம்யூ.,க்கள் சொன்னால் எடுபடாமலும் போகும். இன்னும் இங்குள்ளவர்களின் மனப்போக்கை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூ.,வில் வட்டார செயலாளராக இருந்து கொண்டு, தீவிர களப்பணி ஆற்றிக் கொண்டே, இரட்டை இலைக்கு எம்.பி., தேர்தலில் வாக்களித்தவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் தோழரே.

எதற்காக இந்த பதிவை எழுதினேன் என்பதில் இன்னும் எனக்கு புரிதல் இல்லை. ஆனால், உங்களின் இறுதி சில வரிகள் நிச்சயம் ஆட்சேபணைக்கு உரியவை. அதற்கு பதிலளிக்கவே இந்த இடுகை. ஆனால், அசந்தர்ப்பமாக மேலே உள்ள கருத்துகளையும் சொல்லியாக வேண்டி இருந்தது.

///
மொத்தமா ஒரு சாதி ஆதிக்கத்தில் இருந்து திருப்பூர் விடுவிக்கப்படும் வரை

தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது தொடரும்///
திருப்பூரில் சாதிய ஆதிக்கம் என்ற சேற்றை காரண காரியம் இல்லாமல் வீசியெறியாதீர்கள். எந்த நிறுவனத்தில் இன்ன சாதிக்காரன்தான் பணிபுரிய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அல்லது குறிப்பிட்ட சாதிக்காக அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். திருப்பூர் வந்தேறிகளின் ஊர் என்பதை மறந்து விட்டு இது போன்ற சாதிய குற்றச்சாட்டை முன்வைக்காதீர்கள். எல்லாப் பகுதிகளிலும் ஏதேனும் ஒரு சாதியினர் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அந்த ஊரில் நீண்ட காலமாக வசிப்பவனிடம் செல்வம் அதிகம் இருக்கலாம்.
வடமாநில சேட்டுகளின் நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இன்னும் சொல்வதானால், சிங்களவனுக்கு கீழே பணிபுரியும் பிறவிகளும் இங்கேதான் இருக்கிறார்கள்.
அதையும் நினைத்துப் பார்த்து விட்டு சாதிய ஆதிக்கம் திருப்பூரில் என்று குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சாதியின் மேல் தனிப்பட்ட கோபம் இருப்பின் அதை விட்டு விடலாம்.
சுந்தர ராமசாமி 1966லேயே சொல்லி இருக்கிறார் "கலைஞனின் சமூகப் பொறுப்புகளும், பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட காலம் இது' என்று.
எழுதும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்ற போர்வையில் பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அபத்தம். உங்களின் சாதியக் குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள் தோழரே.

கொங்குப் பழமைகளை சேகரிக்கலாம் வாரீங்களா...

"ஏஞ்சாமி கைசாளைக்குள்ற பாத்தியா' அப்பத்தா கேட்டதும்தான் சட்டென நினைவுக்கு வந்தது; கைசாளை என்ற வார்த்தையையே நான் மறந்து விட்டிருந்தேன்.
கொங்கு நாட்டுப்புறத்தின் மிக சரளமான வட்டார வழக்குகள் பல வழக்கொழிந்து போய் விட்டன. தமிழே வழக்கொழியும் நிலையில், வட்டார வழக்கு எம்மாத்திரம். உண்மையில் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் வேர்களை ஆராய்வது என்பது அலாதியானது. ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் ஏதாவது அர்த்தம் இருக்கும்.
"ங்'கண்ணா போட்டு, இழுத்து இழுத்துப் பேசினால் அது கோயமுத்துõர் பாஷை என்ற அளவில்தான் கொங்கு வட்டார வழக்கு அறியப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்று.
அதற்காக இன்னும் வட்டார வழக்கிலேயே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். வட்டார வழக்குகளை கூடவே கூட்டிக் கொள்ளவும் முடியவில்லை; வேண்டாம் என உதறிவிடவும் முடியவில்லை.
சில பிரத்யேக சொற்களை கிராமத்தில் கேட்டுப்பாருங்கள். தமிழோடு எவ்வளவு ஒருங்கிணைந்த வார்த்தைகள் அவை என்பது புரியும்.
"சலதாரி' என்ற வார்த்தை பற்றித் தெரியுமா? வீட்டு சமையலறையில் பாத்திரங்களைக் கழுவ கட்டி வைக்கப்பட்டிருக்கும் இன்றைய "வாஷ்பேசின்'தான் சலதாரி. கிராமப்புறங்களில் குளியலறைக்குள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் வெளியே தெறிக்காத வகையில், சிறிய தொட்டிமாதிரி கட்டி இருப்பார்களே; நாம் நின்று குளிக்கும் இடம். அதற்குப் பெயரும் சலதாரிதான்.
சலம் என்றால் நீர். அது செல்லும் தாரைவழி என்பதே அதற்கு அர்த்தம். வழியும் கங்கையை தலையில் கொண்டிருப்பதால், சிவனுக்கும் சலதாரி என்றொரு பெயர் உண்டு. இது வெறும் உதாரணம் தான்.
திடீரென அப்பத்தா கேட்டதால், அந்த வார்த்தை நினைவுக்கு வந்தது. சராசரி தமிழன் 3,000 வார்த்தைகளையே பயன்படுத்துகிறனாம். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகள் தமிழில் இருக்க, நாம் பயன்படுத்துவது சொற்பமே.
குறைந்தபட்சம் ஒரே மாதிரியான அர்த்தம் தரும் வேறு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மற்றவர்களால் கவனிக்கப்படுவோம் என்ற உளவியல் உண்மையை பரப்பினால் தவிர, தமிழ் வார்த்தைகளை கூடுதலாக உபயோகிக்கும் நிலையை ஏற்படுத்த முடியாது.
அழிந்து வரும் கொங்கு வட்டாரச் சொற்களையும், புழங்கு பொருட்களையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். சக நண்பர்களிடம் உதவி கோரும் எண்ணமும் உள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினரும் இசைவு தெரிவித்துள்ளனர்.

ஓ மறந்துட்டனுங்க... கைசாளைன்னா சமையல் அறைனு அர்த்தமுங்க... அப்புறம் இன்னொன்னு. இதுமாதிரி வட்டார வழக்குச் சொல் ஞாபகத்துக்கு வந்துதுன்னா, எழுதி வச்சுங்குங்க. நா அப்புறமா உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிற. நீங்களும் இந்த சோலில சேந்தா நல்லதுதானுங்க. ஒரு நாளுக்கு 10 பழமை சேத்துனம்னா 100 நாள்ல ஆயிரம் பழமை சேகரிச்சுப்புடலாம். இதே நாலஞ்சு பேருன்னா ஆறு மாசத்துல ஆளுக்கு ரெண்டாயிரம் சேர்த்து, பத்தாயிரம் பழமை கெடைக்கும். முடிஞ்சா சேருங்களே