பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

கொங்குப் பழமைகளை சேகரிக்கலாம் வாரீங்களா...

"ஏஞ்சாமி கைசாளைக்குள்ற பாத்தியா' அப்பத்தா கேட்டதும்தான் சட்டென நினைவுக்கு வந்தது; கைசாளை என்ற வார்த்தையையே நான் மறந்து விட்டிருந்தேன்.
கொங்கு நாட்டுப்புறத்தின் மிக சரளமான வட்டார வழக்குகள் பல வழக்கொழிந்து போய் விட்டன. தமிழே வழக்கொழியும் நிலையில், வட்டார வழக்கு எம்மாத்திரம். உண்மையில் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் வேர்களை ஆராய்வது என்பது அலாதியானது. ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் ஏதாவது அர்த்தம் இருக்கும்.
"ங்'கண்ணா போட்டு, இழுத்து இழுத்துப் பேசினால் அது கோயமுத்துõர் பாஷை என்ற அளவில்தான் கொங்கு வட்டார வழக்கு அறியப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்று.
அதற்காக இன்னும் வட்டார வழக்கிலேயே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். வட்டார வழக்குகளை கூடவே கூட்டிக் கொள்ளவும் முடியவில்லை; வேண்டாம் என உதறிவிடவும் முடியவில்லை.
சில பிரத்யேக சொற்களை கிராமத்தில் கேட்டுப்பாருங்கள். தமிழோடு எவ்வளவு ஒருங்கிணைந்த வார்த்தைகள் அவை என்பது புரியும்.
"சலதாரி' என்ற வார்த்தை பற்றித் தெரியுமா? வீட்டு சமையலறையில் பாத்திரங்களைக் கழுவ கட்டி வைக்கப்பட்டிருக்கும் இன்றைய "வாஷ்பேசின்'தான் சலதாரி. கிராமப்புறங்களில் குளியலறைக்குள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் வெளியே தெறிக்காத வகையில், சிறிய தொட்டிமாதிரி கட்டி இருப்பார்களே; நாம் நின்று குளிக்கும் இடம். அதற்குப் பெயரும் சலதாரிதான்.
சலம் என்றால் நீர். அது செல்லும் தாரைவழி என்பதே அதற்கு அர்த்தம். வழியும் கங்கையை தலையில் கொண்டிருப்பதால், சிவனுக்கும் சலதாரி என்றொரு பெயர் உண்டு. இது வெறும் உதாரணம் தான்.
திடீரென அப்பத்தா கேட்டதால், அந்த வார்த்தை நினைவுக்கு வந்தது. சராசரி தமிழன் 3,000 வார்த்தைகளையே பயன்படுத்துகிறனாம். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகள் தமிழில் இருக்க, நாம் பயன்படுத்துவது சொற்பமே.
குறைந்தபட்சம் ஒரே மாதிரியான அர்த்தம் தரும் வேறு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மற்றவர்களால் கவனிக்கப்படுவோம் என்ற உளவியல் உண்மையை பரப்பினால் தவிர, தமிழ் வார்த்தைகளை கூடுதலாக உபயோகிக்கும் நிலையை ஏற்படுத்த முடியாது.
அழிந்து வரும் கொங்கு வட்டாரச் சொற்களையும், புழங்கு பொருட்களையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். சக நண்பர்களிடம் உதவி கோரும் எண்ணமும் உள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினரும் இசைவு தெரிவித்துள்ளனர்.

ஓ மறந்துட்டனுங்க... கைசாளைன்னா சமையல் அறைனு அர்த்தமுங்க... அப்புறம் இன்னொன்னு. இதுமாதிரி வட்டார வழக்குச் சொல் ஞாபகத்துக்கு வந்துதுன்னா, எழுதி வச்சுங்குங்க. நா அப்புறமா உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிற. நீங்களும் இந்த சோலில சேந்தா நல்லதுதானுங்க. ஒரு நாளுக்கு 10 பழமை சேத்துனம்னா 100 நாள்ல ஆயிரம் பழமை சேகரிச்சுப்புடலாம். இதே நாலஞ்சு பேருன்னா ஆறு மாசத்துல ஆளுக்கு ரெண்டாயிரம் சேர்த்து, பத்தாயிரம் பழமை கெடைக்கும். முடிஞ்சா சேருங்களே

6 comments:

நல்ல காரியம்.
வாழ்த்துக்கள்.


http://vaarththai.wordpress.com

 

வாழ்த்துக்கள்! தொடருங்கள்...
ஒரம்பற: உறவின் முறை
உன்ற: உன்னுடையது
ஏனுங்க:ஏன் (மரியாதையுடன்)..
ம்.... கொங்குத் தமிழ் ஒரு கடல்... தொடருங்கள் முத்தெடுக்க..

 

@rammohan1985
@Chidambaram Soundrapandian
நன்றி நண்பர்களே

 

நல்ல சோலி....அப்பனு...செய்யி. செய்யி,,.மவராசனா இருப்பே....

 

தங்களுக்கு முயற்சிக்கு நன்றி நண்பரே

இங்கு வந்து பாருங்கள்
தங்களின் பங்களிப்பைத் தாருங்கள்

அன்புடன்
திகழ்


கொங்குவாசல்

http://konguvaasal.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

 

@திகழ்
நிச்சயமாக நண்பரே. கூடுதல் சொற்களை சேகரிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது தங்களின் பதிவுகளைப் பார்த்து.

 

Post a Comment