பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

அழிவின் விளிம்பில் ஒரு நதி

கரையிழந்த காஞ்சி... கறைபடிந்த நொய்யல்...

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியா
கி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி என ஐந்து மாவட்டங்களை கடந்து காவிரியில் கலக்கிறது காஞ்சிமாநதி. தான் சென்றவிடமெல்லாம் செழிப்பாக்கிய காஞ்சி நதி, காவிரியுடன் சங்கமிக்கும்இடத்தால் "நொய்யல்' எனப் பெயர் கொண்டது. நொய் என்ற சொல்லுக்குநுண்மை, மென்மை என்பது பொருள். தன் நுண்ணிய மணற் பரப்பினால் இப்பெயர்பெற்றது என்ற கருத்தும் உண்டு. காலப்போக்கில் காஞ்சி நதி என்ற பெயர்வழக்கொழிந்து போனது போலவே, நொய்யலும் தன் வளமிழந்து போனது.
மனித இனம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கற்றுத்தந்த நாகரீகங்கள் மூன்று. பாரம்பரியம் மிக்க எகிப்து, சிந்துசமவெளி நாகரிகங்களுக்
கு இணையாக தமிழ் நாகரீகத்துக்கும் இடம்உண்டு.
நொய்யல் நதிக்கரையின் கொடுமணல் நாகரீகம் கி.மு 300ம் ஆண்டுக்கும் கி.பி. 300ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது எனத் தொல்பொருள் சான்றுகள்தெளிவுபடுத்துகின்றன.
சிற்பக்கலைக்குப் பெயர் பெற்ற பேரூர்பட்டீஸ்வரர் ஆலயத்தை தன் கரையில்கொண்டுள்ளதும்; லட்சக்கணக்கானமக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்தநொய்யல், இன்று கடந்து செல்பவர்கள்முகம் சுளிக்கும் அளவுக்குக் கழிவுகளைச்சுமந்து செல்கிறது.
விவசாயிகளைச் செழிப்படையச் செய்த அதே நொய்யல், அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நொய்யலின் வழித்தடமும், கொடுமண
ல் நாகரீகமும்:
மேற்குத்தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகி, கிழக்குநோக்கிப் பாய்கிறது. இதன்கரையில் பேரூர், திருப்பூர் என்ற முக்கிய நகரங்கள்உள்ளன. தன் வழியில் 32 குளங்கள், 23 தடுப்பணைகளை நிரப்பி, காவிரியில்இணையும் நொய்யல்படுகை 180 கி.மீ., நீளமும், 25 கி.மீ., அகலமும் கொண்டது. திருப்பூரில் இருந்து 16 கி.மீ., துõரத்தில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. நொய்யலில் இருந்து குளங்களுக்குச் செல்லும் வடிகால்களைச் சாளுக்கியசோழர்கள் சீர்படுத்தியுள்ளனர்.
காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தில் இருந்த நொய்யல் குடியிருப்புசேரநாட்டுக்கும் கரூருக்கும் இடையில் முக்கிய இணைப்பாக இருந்ததாகச் சங்ககுறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு சங்ககால மக்கள் 35 ஏக்கர் பரப்பளவில்வசித்து வந்ததற்கான அடையாளங்களைத் தொல்லியல் துறைகண்டறிந்துள்ளது.
ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., துõரத்தில் அமைந்த கொடுமணல் கொங்குப்பகுதிநாகரீகத்துக்கான சான்று. நுõற்றுக்கணக்கான முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், மட்பாண்டங்கள், புதைபொருட்கள் கொடுமணல் நாகரீகம் தொன்மையானதுஎன்பதை இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.
நொய்யல் படுகையால் 3,500 சதுர கி.மீ., பரப்பு பயனடைகிறது; 1800 .கி.மீ., பரப்புபாசனவசதி பெறுகிறது(!). கரையோரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்கள்அடர்த்தி சதுர கி.மீ.,க்கு 120 பேர்; நகரப்பகுதியில் 1,000 பேர்.
நொய்யல் ஒரு போதும் கரை மீறியதாகசரித்திரம் இல்லை. காரணம் ஒவ்வொருகி.மீ., துõரத்திலும் சில அடிதுõரம்ஆழமாகிக் கொண்டே செல்லும்தன்மையால், சரிவான சிற்றாறாகஉருக்கொண்டு அதிவேகமாக காவிரியில் கலக்கிறது. இதனால், ஆறு நிறையதண்ணீர் செல்வதற்கு வழியில்லை. பெரிய அளவிலான தேக்கங்களும் இல்லை.
மற்ற சிற்றாறுகளைப் போல குளிக்கவும், குடிக்கவும் பயன்பட்டு வந்த இந்த நதி, சென்ற தலைமுறையில் சிற்றாறு என்ற நிலையில் இருந்து கழிவுக் கால்வாயாகசுருங்கிக் கொண்டது.

மாசடைந்த நொய்யல்:
இன்றைய தலைமுறையினர் காணும் நொய்யல், நதி என்ற தகுதியை இழந்ததும் ஆண்டுக்குப் பிறகுதான். தொழில் வளர்ச்சி என்ற பெயரில், திருப்பூர் நகரம்அரசின் எந்த உதவியும், கட்டுப்பாடுகளும் இன்றி வளர்ந்த காலகட்டம் அது. வெளிநாடுகளுக்குப் பனியனை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்ததால், தொழில்முனைவோர்கள் பலரும், போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்தனர்.
தொழில் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்டிருந்த கனவான்களுக்கும், அதன் மூலம் கிடைக்கும் அன்னிய செலாவணியை நல்வாய்ப்பாக கருதியஅரசும், அதன் மோசமான மறுபக்கத்தைக் கவனிக்கத் தவறிவிட்டன. ஏற்கனவே, கோவை மாநகரின் கழிவுகள் நொய்யலில் கலந்து, அதை மாசுபடுத்திக்கொண்டிருந்தன.
வெள்ளை நிற ஆடைகளை விட வண்ணமேற்றிய ஆடைகளுக்கு வரவேற்புஎன்பதை அறிந்த திருப்பூர் தொழிலதிபர்கள், சாய சலவை ஆலைகளைஅதிகளவில் அமைத்தனர். சுற்றுச்சூழல் காரணங்களுக்காக வெளிநாடுகளில்கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சாயமேற்றும் முறை, திருப்பூரில்தடையின்றி நடந்தது.
அதன் கழிவுகளைச் சுத்திகரித்து வெளியில் விட வேண்டிய அவசியம் குறித்துதொழில்முனைவோர்கள் அறிந்திருக்கவில்லை. உண்மையை சொல்வதானால், அதுகுறித்த அறிவு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அவர்களுக்கு உற்பத்தி மட்டுமே செய்யத் தெரியும்; அதன் கழிவுகளை சுத்திகரிக்க, அந்தத்துறையில் விற்பன்னர்கள் அல்ல அவர்கள்.
சாயக்கழிவை சுத்திகரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம்அசட்டுத்தனமாக இருந்து விட்டது. விழிப்புணர்வும், தொழில்நுட்ப வசதிகளும்பெருகி விட்ட இக்காலத்திலேயே இன்னும் தீர்வு காணப்படவில்லை; 25 ஆண்டுகளுக்கு முன் அரசு நிர்வாகம் எப்படி அக்கறை காட்டியிருக்கும்.
ஆனால், அதற்கான பலனை அரசு அனுபவித்ததே இல்லையோ, பொதுமக்களும், விவசாயிகளும் நன்கு உணர்ந்தனர். ஒரு நதி, பெரிய கழிவு நீர் கால்வாயாகிநிலத்தடி நீர் மாசடைந்தது.
போதாக்குறைக்கு பிளாஸ்டிக் கழிவுகளும் நதியின் வேகத்தைத் தடை செய்து, தேங்கிய சாக்கடை ஆக்கி விட்டன. விவசாயிகளுக்காகக் கட்டப்பட்டஒரத்துப்பாளையம் அணையில் சாயக்கழிவுகள் தேங்கி நின்றன. கால்நடைகள்இனவிருத்தி செய்யாமல் மலடாகிப்போகின. அணையை சுற்றிலும் இருந்தவிவசாய நிலங்களில் களை கூட முளைக்கவில்லை. தென்னை மரத்தின்இளநீரிலும் ரசாயனத்தின் காரத்தன்மை கலந்தது. குடிநீர் இன்றி, மக்களும், கால்நடைகளும் பரிதவித்தனர். தோல்நோய் மருத்துவமனையும், செயற்கைகருத்தரிப்பு மையங்களும் அதிகளவில் ஈரோடு சுற்றுப்பகுதியில் அமைந்தன.
பிரச்னையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த விவசாய சங்கங்கள் எதிர்ப்புகுரல்கொடுக்க துவங்கின. சாய ஆலைகளின் கழிவுகளைச் சுத்திகரித்து விடவேண்டும் என்ற கோஷம், விவசாயிகளால் கத்தித் தீர்க்கப்பட்டது. சமூகஅக்கறையுள்ள அமைப்புகள் நொய்யலை மீட்டெடுக்க வேண்டும் என்றகோஷத்தை வலியுறுத்தின. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின், கோர்ட்தலையீட்டின் காரணமாக நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் வெளியேற்றத்துக்குதடை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
கோர்ட் உத்தரவின் காரணமாக, அனைத்து சாய ஆலை உரிமையாளர்களும் 800 கோடி ரூபாய் மதிப்பில் 20 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள்அமைத்துள்ளனர். சிலர் சொந்தமாகவும் அமைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த வினாடி வரை சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் நொய்யலில்கலக்கிறது.
தொழில் துவங்குவது குறித்த அரசின்சிறு கட்டுப்பாடுகளே இப்பிரச்னையைமுளையிலேயே தடுத்திருக்கும். மாசுக்கட்டுப்பாட்டு துறை, தன் வேலையில்ஒரு சதவீதத்தை கூட செய்யவில்லை. இல்லாவிட்டால் ஒரு நதியே அழிந்துபோயிருக்காது.
திருப்பூர் நகரத்தின் மேற்கு எல்லையில் நொய்யல் நதி, முழுமையானசாக்கடையாக மாறத்துவங்குகிறது. பெரியாண்டிபாளையத்தில் இருந்து சாய, சாக்கடைக்கழிவுகள் அதிகளவில் நொய்யலில் கலக்கின்றன. கழிவுகள்மட்டுமன்றி, ஆக்கிரமிப்புகளும் நொய்யலை உருக்குலையச் செய்துள்ளன.
ஒரு நதி நம் கண்முன்னால் உயிர்ப்பை இழந்து கொண்டிருப்பது குறித்து எந்தஅரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை.

ஆக்கிரமிப்புகள்:
பரந்து விரிந்த நொய்யல், ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் சிறு கால்வாய்அளவுக்கு சுருங்கிப் போயுள்ளது. திராவிட கழகங்களின் முக்கியவரலாற்றுச்சம்பவமாக கருதப்படும் .வே.ரா., அண்ணாதுரை சந்திப்பு நடந்தபொதுக்கூட்டம் நொய்யலின் நதிக்கரையில் நடந்தது. கட்சிக்கூட்டங்கள், பொதுவிழாக்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குஅருகே, மணற்பரப்பில் நடக்கும். அந்த அளவுக்கு அங்கு இடவசதி இருந்தது. இன்று அப்பகுதி வழியாக நடந்து கூடச் செல்ல முடியாது. நொய்யல் கரைதனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நொய்யலின் இரு கரைப்பகுதியும் வழிநெடுக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வெளிமாவட்டங்களில் இருந்து குடியேறியவர்களுக்கு நொய்யல் நதிக்கரைபுகலிடம் அளித்தது. அப்போதைய நகராட்சி நிர்வாகம், குடியிருப்புகளுக்காகநொய்யல் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவில்லை. இன்று, ஆக்கிரமிப்புகளைஅகற்றினால், அரசியல்கட்சிகள் லட்சக்கணக்கான ஓட்டுகளை இழக்க நேரிடும்.
ஒரு ஓட்டுக்கு எதிராகக் கூடத் தங்கள் சுட்டுவிரலையும் அசைக்க விரும்பாதஅரசியல் கட்சிகள், ஆறு ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. ஒரு ஆறு, சிறு கால்வாயாக மாறிப்போனதற்கு இதுவே காரணம்.
நொய்யலை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை; புறக்கணித்து விட்டது. மணல் வளம் இருந்திருந்தால், கொள்ளையடிக்கவாவதுஅரசியல்வாதிகள் முண்டியடித்திருப்பர். பல வழிகளிலும் தண்ணீர் வரத்துகுறைந்ததால், நீரோட்டமின்றி மணல் வளமும் குறைந்து விட்டது.

நொய்யலை சீரமைக்க:
கொங்கின் நாகரீகத்துக்கு வேராக இருந்த நதி, வெறும் 25 ஆண்டுகளில்இல்லாமல் போய்விட்டது. இனியாவது அரசாங்கம் விழித்துக்கொள்ளாவிட்டால், நொய்யல் என்ற பெயரைச் செவிவழியாக மட்டுமே கேட்கமுடியும்.
நொய்யலை நேரடியாகச் சீரமைத்து விட முடியாது. சங்கிலித் தொடர் போல், பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, சில நடைமுறைகளைக்கையாண்டால் மட்டுமே சாத்தியம்.
*திருப்பூர் மாநகரில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும். சாக்கடைக்கழிவுகள் நொய்யலில் கலக்கும் போது, பிளாஸ்டிக் கழிவுகள்நீரோட்டத்தை தடை செய்கின்றன.
*சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும், ஆற்றில் கலப்பதை தடை செய்யவேண்டும். ஒரு சொட்டுக் கழிவு நீர் கூட ஆற்றில் கலக்காமல் குழாய் மூலம்அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
*நொய்யலின் பாதையில் உள்ள எந்த உள்ளாட்சி பகுதியில் இருந்தும் சாக்கடைக்கழிவுகள் நொய்யலில் கலக்க தடை விதிக்க வேண்டும்.
*நொய்யலைத் தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளைப் பாரபட்சமின்றி அகற்றவேண்டும். நொய்யலால் நீராதாரம் பெறும் குளங்களையும் தூர்வார நடவடிக்கைஎடுக்க வேண்டும். இத்திட்டங்களுக்காகச் சில ஆயிரம் கோடிகள் தேவைப்படும். ஆயினும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை தன் மெத்தனப்போக்கால்சிதைத்து விட்ட அரசு, பணத்தைச் செலவழித்தே ஆக வேண்டும்.
*கோர்ட்டில் உள்ள நொய்யல் தொடர்பான வழக்குகளை அனைத்து தரப்பும்வாபஸ் பெற்று, நேரடியான தனிக்குழு மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அல்லது விரைவு நீதிமன்றம் மூலம் மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணவேண்டும்.
போக்குவரத்து வசதி:
கோவையில் இருந்து கரூர் வரை, நொய்யலின் இரு கரையையும் அகலப்படுத்தி, ரோடு அமைக்கலாம் என்ற திட்டம் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டுஇருந்தது. ஆற்றின் கரை சுத்தப்படுத்தப்படும். ரோடு வசதியும் உருவாகும். ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியும். போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வுகிடைக்கும். சென்னையை சுற்றி மட்டுமே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைசெலவழிக்கும் அரசு இத்திட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொங்குமண்டலத்துக்குள் மெட்ரோ போன்ற ரயில் திட்டம் உருவாக்கம் வேண்டும் என்றகோரிக்கை உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ஆனால், நொய்யல் கரையில் ரோடு வசதியை உருவாக்க மத்திய அரசை எதிர்நோக்கவேண்டிய அவசியம் இருக்காது. போக்குவரத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். முழுமையான ரோடாக இல்லாவிட்டாலும், முக்கிய இணைப்புகள் வரை ரோடுஅமைக்கலாம். அந்த ரோட்டை தாண்டியே கழிவுகளை ஆற்றில் கலக்க முடியும்என்பதால், கழிவுகள் கலப்பதும் தடுக்கப்படும்.
புறநகர் வழிச்சாலை; தொழில்வளர்ச்சி என பல பரிமாணங்களிலும் இத்திட்டம்பலனளிக்கும்.

நொய்யல் என்ற நதியையே இல்லாமல் செய்து விட்ட இந்த தலைமுறை, இனப்படுகொலைக்குச் சமமான பாதகத்கைச் செய்துள்ளது. வாருங்கள்யாரேனும் பூனைக்கு மணி கட்டுங்கள். நொய்யலைச் சீரமைக்காவிட்டால், வருங்காலம் நம்மைத் தூற்றும்.
12 1985

2 comments:

அக்கறையான இடுகை நண்பரே

வாழ்த்துகள்

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..

 

நொய்யல் பற்றிய அபரிமிதமான தகவல்களுடன் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான கட்டுரை.

அடுத்த தலைமுறையினருக்கு நாம் செய்துவரும் துரோகங்கள் மன்னிக்கமுடியாதவை. நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு உடனடியாக எட்டப்பட வேண்டும். அரசுக்கு செம்மொழி மாநாடு போன்ற அத்தியாவசிய பணிகள் இருப்பதால் வெறும் அரசாங்கத்தை நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பக்கத்திற்கு வருகிறேன் நண்பா.

 

Post a Comment