பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பாற்கடல் சக்திவேல்.

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
சக்திவேல் எனது பெயர்; பாற்கடல் வலைப்பூவின் பெயர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
பசுமை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி, குறிஞ்சித்திட்டு என்ற பெயர் தேடிப்பிடித்து வைத்திருந்தேன். பிறகு தம்பி சிந்தன், எப்படி வலைப்பூ துவக்குவது என்று சொல்லிக் கொடுத்தான். படிக்க நிறைய வாய்ப்பு; எழுதவும் நிறைய வாய்ப்பு. ஆனால், நான் 100 சதவீத சோம்பேறி என்பதால், இரண்டுமே முழுமையாக நடக்கவில்லை.

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமா அப்டின்னா என்னங்க? நான் பிரபலமாயிட்டேன்னு யார் சொன்னாங்க?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எதுவுமே சொந்த விஷயம் இல்லீங்க. திருடுனதுதான். பின்ன என்ன கேள்விங்க இது. யாருக்குமே சொந்த பாதிப்பு இல்லாம எழுத முடியாது. சில சமூக(!) கருத்துள்ளது எழுதினாலும், எங்கயாவது நாம உள்ள ஒளிஞ்சுருப்போம் இல்ல. அதனால.... சகலமும் கலந்திருக்கும்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதுவரைக்கும் ஏழு லட்சத்துக்கு நாப்பத்து நாலாயிரத்து முன்னூற்று இருபத்தி ஒரு ரூபாய் சம்பாதிச்சுருக்கேன். நிஜமா நம்புங்க. பதிவு எழுதறதே சம்பாதிக்கிறதுக்குத்தான். (நண்பர்களை சம்பாதிக்கலாம்.; அதற்கு விலை மதிக்க முடியுமா...அடடா)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஐடியா முழுசா இல்லாததால, அடுத்தடுத்து மூணு துவக்கினேன். மூணுமே தமிழ்லதான்;பின்ன துரை இங்கிலீசெல்லாம் எழுதும்னு நினைச்சீங்களா?.
குறிஞ்சித்திட்டு, வழிப்போக்கன், பாற்கடல். தற்போது பாற்கடலில் மட்டும் நீந்திக் கொண்டிருக்கிறேன்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் நிறைய எழுதினாலும் பொறாமை வரும். கோபம் வந்திருக்கிறது; சில விவாதங்களைக் கேள்விப்பட்டு. ஊர சொன்னாலும் பேர சொல்லக்கூடாது. பிறகு, அவரும் அவர் சார்ந்தவர்களும் என்மேல் கோபப்படுவார்கள். (எங்களின் "தல' வெயிலான் அநியாயத்துக்கும் அப்டேட்ல இருக்கார். அவருக்கும் நேரம் பத்தக்கூடாதுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கறேன்)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..
அடடா தினமும் லட்சக்கணக்கான பேர் பாராட்டுறதால, முதல்ல பாராட்டுனவங்க பேரு தெரியல. பதிவுகளை இடுவதற்கு முன், சிந்தனும், திருவும் பாராட்டினார்கள். பதிவுக்குப் பின், வந்த முதல் பாராட்டு பற்றி நினைவில் இல்லை.
நல்லவேளை திட்டுனவங்க லிஸ்ட் கேக்கல. சங்கதி அப்புறம் இல்ல தெரிஞ்சு இருக்கும்.
10)கடைசியாகவிருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஹலோ கடைசியாகனா என்ன அர்த்தம்.? மங்கலம் பாடலாம்னு பாக்குறீங்களா?
எதையாவது சமூகத்துக்கு செய்யணும் நினைச்சு, எதுவுமே செய்ய முடியாத இளைஞன். ஆசிரியர், பத்திரிகையாளன்னு இரண்டு மிக விருப்ப துறைகள் இருந்தும், ஆசிரியராக ஒரு ஆண்டு பணியாற்றி விட்டு, எதையாவது செய்யலாமே என்று பத்திரிகை துறைக்கு வந்தவன். சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவுக்கு சாதிக்காவிட்டாலும், சிலருக்காவது என், பணிகள் நன்மை பயந்தது உண்டு. அதற்காகவே இன்னும் பத்திரிகை துறையில் இருந்து விலகாமல் இருக்கிறேன். சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் தொடர் பதிவில் சந்திக்க நேரிடும் போது, நிச்சயம் அதீத திருப்தியுடன் உங்களைச் சந்திப்பேன்.

என்னை தொடர்பதிவுக்கு அழைத்த, "திருச்சொல்' திருநாவுக்கரசு நண்பருக்கு நன்றிகள் பல.
அடுத்ததாக நான் அழைக்க நினைக்கும் பதிவர், சிந்தன்(என் குருநாதனும் கூட. சின்னப் பையன் என்பதால், குருநாதருக்குப் பதில் குருநாதன்)

ஒரு சகாவிடமிருந்து...

ஒரு சகாவிடமிருந்து...

....,
அன்புள்ள என்றா, அல்லது நண்பனே என்றா, எப்படி துவங்குவது என தெரியவில்லை. அதனால், உனக்கு பிடித்திரா விட்டாலும், உனது பெயரை முன்னிறுத்தி எழுதுகிறேன். தகவல் தொழில்நுட்பம் நேரில் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தாலும், கடிதங்களின் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. இதை நீ கடிதமாகவே பாவிப்பாய் என எண்ணுகிறேன்.
பள்ளியில் சேர்ப்பதற்கு முதலில் இருந்து, துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உடுமலை கல்லூரி, விடுதி, பட்டமேற்படிப்புக்காக தங்கியிருந்த அறை, கோவை கல்லூரி, புத்தக நண்பர்கள், ஏதேச்சையாக சந்தித்த மனிதர்கள் என எனக்கான வட்டத்தில் நிறைய சகாக்கள் இருக்கின்றனர்.
எத்தனை பேர் இருப்பினும், எனக்கான பக்கங்களில் உன்பெயரை எழுதாமல் தவிர்த்து விட முடியாது. குறிப்பிட்ட சில பேர் என் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பார்கள். கல்லூரியில் ஆத்தி வகித்த இடத்தை, இங்கு நீ எடுத்துக் கொண்டாய் என எண்ணுகிறேன். ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது என்றாலும், இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. மற்றவர்களுக்கு கூட உதவி செய்திருக்கிறேன்; ஆத்திக்கு எதுவும் செய்ததில்லை. ஆத்தி அதை எதிர்பார்த்ததும் இல்லை.
என்னுடன் அவன் மூர்க்கத்தனமாக நட்பு பாராட்டினான். மூன்றாம் ஆண்டில், அவன் வாங்கி வந்த தின்பண்டத்தை நான் மற்றவர்களுக்கு கொடுத்து, அவனுக்கு கடைசியில் கொடுத்த போது, அவன் பார்த்த பார்வையும் லேசாக விடுத்த முணுமுணுப்பும் இன்னும் நெஞ்சில் வலிக்கிறது. அதற்குப்பின் மூன்றாண்டுக்குப் பின் அந்த இடத்தில் நீ இருக்கிறாய் என எண்ணுகிறேன்.
எங்கள் ஊரில் நான் கோபப்படாத பையன். ஆனால், எனக்கு மிக நெருங்கியவர்களுக்கு என் கோபம் பிரசித்தம். நீ என்னிடம் இருந்த அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை.
நீ ஒன்றை கவனித்திருப்பாயென நம்புகிறேன். சமீபத்திய உன் பிறந்தநாளின் போது, நான் உனக்கு வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி சொல்வது எனவும் தெரியவில்லை. சில நேரங்களில் சம்பிரதாயங்களை நான் வெறுக்கிறேன்.
சிலவற்றில் எனது பிடிவாதத்தை நீ வெறுத்திருக்கக் கூடும். ஆனால், என் வளர்ப்பு நிலை அப்படி. "தோழமையோடும் ஏழமை பேசேல்' எனக்கூறி வளர்க்கப்பட்டேன். எனக்குள் இருக்கும் சுயம், யாரிடம் தாழ்ந்து நிற்க அனுமதிப்பதில்லை. அது ஒருவகையான பைத்தியகாரத்தனமாக கூட இருக்கலாம். நான் இறங்கிப் போயிருக்கிறேன் என்றால், அப்போது என்னை அதிகபட்சமாக சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.
ஓ... இந்த கடிதம் பாதை மாறி விட்டது.
நீ என்னிடம் இருந்த, இருக்கும் அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை. அப்படி இருக்க முயற்சியும் செய்ததில்லை. என் கோபங்களுக்கு நீ ஆளாகும் போது, பின்னர் யோசிக்கையில் அது அதிகப்படியானதோ என எண்ணத் தோன்றுகிறது. என் பத்திரிகை உலக வாசம் நிறைய அற்புத தருணங்களை, வேடிக்கையான சம்பவங்களை, மறக்க முடியாத நிகழ்வுகளை, நெருக்கமான உறவுகளை தந்திருக்கிறது.
மிக நெருங்கிய, நெருங்கிய, ஆத்மார்த்த, ஆலோசனை கேட்கின்ற, மடிசாய்ந்து அழுகிற, பிரதிபாசம் எதிர்பார்க்கிற, விவாதம் நடத்த தகுதியுடைய, ஏதேனும் கற்றுக்கொள்ள, சிரிக்க மட்டும், உபயோகப்படுத்திக் கொள்ள இன்னும் இத்யாதி, இத்யாதியினர் என்னுடனான உறவு வட்டத்தில் இருக்கின்றனர்; இருப்பர்.
இதில் ஏதாவது ஒன்றாகத்தான் நீயிருப்பாய், என அடையாளமிட்டுக் காட்ட இதைச் சொல்லவில்லை. இவற்றில் நீ எந்த ரகம் எனவும் அடையாளப்படுத்த கூறவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். நீண்ட ஆண்டுகளுக்கு பிரிந்திருக்க வேண்டியிருந்தால், என்றாவது ஒரு நாள் உன் நினைவு வரும் போது சிறு புன்னகையும், கனத்த மௌனமும் நிச்சயம் என்னுள் எழும்.
இன்னொன்றையும் நினைவில் கொள், ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்காக உன்னிடம் மன்னிப்பு கோரவும் மாட்டேன். ஏனென்றால், நான்...... நான்தான்.

திருப்தியுடன்...
நான்.
(நவ.,2009)