பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

இடந்தலைப்படுதல்


முட்டுச்சந்து,
முடைநாற்றத்துடன்
கோணியே சுவராய் ஒரு மறைவிடம்,
புளியமரம் புறங்கடை ஒதுக்கு,
மேற்கூரையின் விரிசல்களுக்கிடையே
பல்லிகளூரும் பாழறை...
ஏதோ ஓரிடம்
உராய்ந்து விட்டுப் போகிறது கழுதை
சுவருக்கென்ன சுகம்?

அது சிவமாக இருக்கலாம்...நில்!
கீச்சுக்குரலில் அதட்டியது சிவம்..

வார்த்தை மீறியது குற்றமே
இனி இது நிகழாது,
தட்சயாகம் சம்ஹரித்த பின்
சக்தி கெஞ்சினாள்.

முடியாது,
முரண்டு பிடித்தது சிவம்.

முயற்சி மெய்வருத்தியும்
கூலி இல்லை; வெகுண்டாள் சக்தி
தனித்தியங்குவேன்
முரசு கொட்டினாள்.

நானின்றி நீயா; ஒருக்காலும் நடவாது
கெக்கலித்தது சிவம்.
சக்தியில்லையேல் சகலமும் இல்லை
நீ சரசமாடக்கூட சக்தி தேவை,
எக்களித்தாள் சக்தி.

அடி முடி காணவியலா ஜோதி நான்,
ஆங்காரமிட்டது சிவம்.

முயன்ற இருவருமே ஆண்கள்
முடியாது என நான் புகலவில்லை,
அலட்சியப்படுத்தினாள் சக்தி.

நான் நெருப்பு;
சகலத்திலும் தானாகும்
வல்லமை நெருப்புக்கு உண்டு
ருத்ரன் தாண்டவம் பூண்டால்
கிழியும் ககனம்
சகலமும் தகனம்,
சப்தித்தது சிவம்.

ஹா...அக்னியின் வெம்மை நான்
நீங்கினால் குளிரும்
நேத்திரன் பெருமை,
குறும்பு கொப்பளித்தது சக்தியிடம்.

சினம் கொண்டது சிவம்
தத் தித் தரிகிட தளாங்கு தரிகிட
தித் தித் தரிகிட தீம் தீம் தரிகிட
நாட்டியம் கைக்கொண்டு
நாரசாரமாய்க் கூவியது.

சிவத்தின் தாண்டவக் கோலம்
கண்டஞ்சின பூதங்கள்;
மருண்டனர் மகரிஷிகள்
அக்கணம் கூடின
அனைத்துக் கணங்களும்
நிகழ்வின் சாட்சியாய்.
பிரேதச் சாம்பலும்,
பிள்ளையின் ஓடும் தெறிக்க
சிவ நடனத்தில்
காந்தல்.

லாவண்யத்துடன்
லாவகம் காட்டினாள் சக்தி
கால் பாவினாள்,,நடந்தது நதி;
வீசினாள் கை,,அலைந்தது அனந்தல்;
விழுந்தது குழல்,,எழுந்தது கொண்டல்;
நிமிர்ந்தது நெஞ்சு,,உவந்தது வெற்பு;
அடவு காட்டினாள்,,அசைந்தது அருவி;

நூபுர இசையில்..வெட்கியது யாழ்
உலவினாள்,
நின்றாள்,
மூழ்கினாள்,
பிரவகித்தாள்,

மொத்தத்தில்
சக்தி நெய்தது நாட்டியத் தறி
சடுதியில் கோணியது சிவத்தின் குறி

ஊழித்தீயாய் உக்கிரம் சிவத்துக்கு
இடக்கால் கொண்டு
வலக்காது தொட்டு,
குண்டலம் கழட்டியது சிவம்
நான் பொன்னார் மேனி,
நீ காலுயர்த்த தெரியுமுன் யோனி
குரூரமாய்ச் சிரித்தது அந்தச் சவம்.

ஆயினுமென்,
சன்னத்தமானாள் சக்தி.
அகிலம், அண்டம்
அனைத்துமே அழியும்
பொறுத்தருள்க,
குமரனின் நிலையும்,
குவலயத்தின் நிலையும்
என்னாவது?
இறைஞ்சின கணங்கள்.

ரிஷிகளை நீங்கினர் பத்தினிகள்
கொற்றவை என்னும் கோலம் கொள்,
வேண்டினர் அவளை,
சாந்தம் கலைத்தது
சண்டமாருதம்;
கோர வாயில் குருதி ஒழுக,
விரிந்த சடை வெறியுடன் வீச,
ஆறிரு கரங்களில் ஆயுதம் தரித்து,
என்பு மாலை இடை வரை புரள
செவிப்பறை தன்னைத்
தமருகம் கிழிக்க
நிகழ்ந்தது ஆங்கோர்
சக்திதாண்டவம்.

கொற்றவைக் கூத்தின்
குரூரம் கண்டு பதறியது சிவம்.
ஒரு முறை நான் "பிழை'த்ததால்
நீ பிழைத்தாய்
இம்முறை தாட்சாயினி
அல்ல; கொற்றவை நான்,
கர்ஜித்தாள்..

இடக்காலுயர்த்தி
வலக்குண்டலமும்,
வலக்காலுயர்த்தி
இடக்குண்டலமும்
கழற்றி வீசினாள்.

அந்தகாரம் சூழ்ந்தது
எங்கும் நிசப்தம்
எங்கோ கேட்டது ஈனக்குரல்
அது ஈசனின் குரல்
புலித்தோல் களைந்து,
சூலம் தொலைத்து,
பிறையினை பிடுங்கி
பித்தம் கொண்டது சிவம்

மூன்றாவது கண்ணும்
சூனியம் வெறிக்க
கண்டது தின்று,
சொற்களை மென்று
உன்மத்தம் கொண்டு
திரிகிறது

எதிர்ப்படும் பைத்தியம்
உதிர்க்கும் வார்த்தை
"சக்தியை நீங்கிய சிவம்
உயிரை நீங்கிய சவம்''
என்பதாக இருந்தால்,
உற்றுப்பாருங்கள்
அது சிவமாக இருக்கலாம்.