பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

மரித்துப் போன சொற்களைப் பதப்படுத்தியவன்சகி,

ரணத்தில் இருந்து குருதி ஒழுக, நகர்தலுக்கான சாத்தியக்கூறுகள் முடங்கிப் போய்விட்ட, நினைவுகள் தப்பிப் போகும் முன்னரே உறுப்புகள் புசிக்கப்படுவதை உணரும், வேட்டையாடப்பட்ட மிருகத்தின் அவஸ்தை எனக்குள். முனகக்கூட திராணியற்றுப் போய்விட்ட அம்மிருகத்தைப் போலவே என் வார்த்தைகளும் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன அல்லது உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

உனக்கு நினைவிருக்கக்கூடும் பதின்ம வயதில் சக, எதிர்பால் ஈர்ப்புக்காக மற்றவர்கள் மெனக்கெட, எனக்கான ஆயுதமாக சொற்களைக் கூர்தீட்டிக் கொண்டிருந்தேன். நுட்பமும், சிலேடையும், ரஸமும் மிக்க சொற்களால் என்னை நிரப்பிக் கொண்டிருந்தேன் அவற்றில் சிலவற்றை பிரயோகிப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. செறிவு மிக்க சொற்களாலேயே என்னைத் தகவமைத்துக் கொண்டதாக, அப்போது எனக்குப் பட்டது. சதா சொற்களிலேயே களமாடிப் பழகி விட்ட பின், சொப்பனங்கள் கூட சொற்களால் நெய்யப்பட்டிருந்தன. அகங்கைக் குழியில் தேக்கப்பட்ட எண்ணெய், அதீத கவனத்தையும் மீறி விரலிடுக்குகள் வழியே கசிவதைப் போல, எனக்குள் சொற்கள் கசிந்து கொண்டிருந்தன. ஆனால், எனக்குத் தெரியும், என்னை உன்னில் அனுமதிக்க அவை ஒரு காரணமாக இல்லை என்பது. உனக்குச் சொற்கள் பற்றி எவ்வித அக்கறையும் இருந்ததாக என் நினைவில் இல்லை. சூலுற்ற சோளப் பயிர் வாசத்தைப் போல, விவரணத்துக்கு அப்பாலான வாசனையை உன் சொற்கள் கொண்டிருந்தன. அருகிருந்த பொழுதுகளில், உன்னை விட உன் சொற்களை நான் கவனித்ததை, நீ கவனிக்காதது போல் அவதானிப்பாய்.

சொல்லரங்குகளின் முடிவில் என் பெயர் பிரதானப்படுத்தப்படும் போதெல்லாம், உன் இதழ்கள் இடது புறமாய் சற்றே நகர்ந்த பின் இயல்பாகும். பொருள் காண முடியா அப்புன்னகையைச் சந்திக்க நேர்கையில், அந்த குறுகுறுப்பு... ம்ச்சு. நிராயுதபாணி எதிரியை வெல்லவும் முடியாமல், பின் வாங்கவும் தோன்றாமல், கொன்றுவிடமாட்டானா என ஏங்கும் மன நிலையில் இருப்பானே, அப்படித் தோன்றுமெனக்கு. இளவேனிற் காலத்து மதிய நேரமொன்றில் உன் தோட்டலிருந்தோம். தாத்தாப்பூ தலைகளைக் கொய்தபடி, வரப்பில் முழந்தாளின் மீது தாவாய்க்கட்டையை ஊன்றியபடி நீ மவுனித்திருந்தாய். திடீரென என் தலைபற்றி விரல்களால் அளைந்தபடி, உதடு பிரித்தாய்; சொற்கள் பிரவகித்தன. நீ பேசியதின் துவக்கம் நினைவில் இல்லை எனக்கு. ஆனால், மணலோடிய கால்வாயில் பாம்பின் தடம் கூட, அடிவயிற்றை இழுக்குமே அந்த உணர்வு இருந்தது. யாரிடமும் அதிர்ந்தோ, வியாக்கியானமாகவோ பேசியறியாத/அறியப்படாத நீ அன்று பேசியவை, முதிர்ச்சி மிக்க உழவன் ‘விலா பிரிக்கும் லாவகத்துடன் இருந்தன.

பின்னான நாட்களில் அப்படி ஒரு பிரிவு வருமென எதிர்பார்க்கவில்லை இருவரும். ஒருவேளை நீ எதிர்பார்த்திருக்கக்கூடும். அந்த வாக்குவாத நேரங்களில் என்னை மிகவும் தற்காத்துக் கொண்ட போது, உன் சொற்களை என்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது உனக்குத் தெரியுமா? இன்றும் கூட என் ஒவ்வொரு அணுவிலும் அந்தச் சொற்கள் சதா ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கனவில் அம்மாவை நரி இழுத்துச் செல்கையில் அழும் குழந்தை போல, பின்னரவில் என் முகம் கோணுவதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க, என் சொற்சேகரங்கள் உதவுவதில்லை.

சின்னாட்களுக்கு முன், அதை நான் கேள்விப்பட்டேன். ‘கலகலன்னு பேசிட்டே இருப்பா! இப்பல்லாம் யார்கிட்டயும் பேசறதே இல்ல அதுவும் கல்யாணத்துக்கப்புறம் பேசாமடந்தை ஆயிட்டா என்று.

என் சேகரச் சொற்களில் பெரும்பாலானவை மரித்து விட்டன; பதப்படுத்தி வைத்திருக்கிறேன். அவற்றை விற்றுப் பிழைப்பவனாக இருக்கிறேன். உன் இறுதிச் சொற்களை உயிர்ப்புடன் சுமந்தவாறு.

களி கூறல்


திங்களின் முகமும் கொண்டு
திருமகளாய் வந்த தேவி,
பெற்றங்கள் நிறைந்த இல்லம்
பீடுடன் வாழ்வது போலும்
சுற்றங்கள் மகிழ எம்இல்
நல்லறம் புகுந்த மாது,
நனிபசும்பாலைப் போல
நற்சுவை தன்னைச் சேர்த்து
நல்லரும் வாழ்வே போந்தாள்.
பாணரும், பாடினியரும்
தமிழ்மிகு புலவோர் தாமும்
சாற்றிய தேன்கவிகள் கேட்டு,
அரும்பொருள், ஆடை, தங்கம்
நெல்வயல், நிரைகள் பிறவும்
தந்து புகழ் சேர்த்த மன்னர்
வீற்றிருந்தது கேட்டதுண்டு.
பாடல்பாடும் முன்னே
பரிசிலைத் தந்த பாவை தன்னை
அறிந்தவர் உளரோ யாரும்
எம்குலம் இனிது செழிக்க
வளமார் பொன்னி அன்ன
இன்னரும் புதல்வி தந்த தேவி,
நிலமகள் தன்னையாள
ஏறென ஆண்மகவு தன்னை
இனிதாய் எமக்குத் தந்தாள்
வேளிர் வேந்தன் தன்னை
வேழமென எமக்குத் தந்த
அன்னை அவர்க்கு,
என் சொல்லி நன்றி கூற
ககனமே வென்று வந்து,
கால்களில் வைத்த போதும்
இணையில்லை என்பதாலே
மாசற்ற தாள்கள் அதன்மேல்
கண்ணீரால் சிரித்து வைத்தேன்


*குட்டி இளவரசனைத் தந்த
எம் ப்ரிய அண்ணிக்கு...

சாக்தம்


அணிகளைந்து
ஆடையவிழ்த்து
பூ அகற்றிய பின்
ஊற்றிய நீர்
பிறைநெற்றிச் சாந்தழித்து
நேரிள கொங்கை நனைத்து
இடை வழிந்து
நாபி நிறைத்து
மேழி நிகர்த்த கால்கள் தழுவி
விரல்வழிச் சொட்டியது.

ஆடவன் விரல்கள்
அங்கம் தடவின;
அலங்கரித்தன

திரை விலகியதும்
தூர நின்று
தரிசித்த பெண்டிர்க்கு
ஆயிரம் கசைகள்
அணைந்து பிரிந்த
அவஸ்தையில்
தொடையிடுக்கியபடி
அருள்பாலிக்கத் துவங்கினாள்
முயங்குபூண் முலையம்மன்சாக்தம்--சக்தி வழிபாடு

கேப்டன் போட்ட டாஸ்

சரியாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய இதே தினத்தில் 23 /3 /2009 அன்று, லோக்சபா தேர்தல் நடக்கும் சமயம்; தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அப்போதைய நிலைக்கும், இப்போதைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. எனவே அதை மறு பதிவாக இடுகிறேன்.
சில விஷயங்கள் மாறுபடலாம். இருப்பினும் பதிவை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்...

பச்சையான சந்தர்ப்பவாதம். வேறென்ன சொல்ல. வழக்கமான அரசியல்வாதிகளைப் போலத்தான் தானும்;திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் வெறும் பாவ்லா என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த்.தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தன்னை
முன்னிறுத்திக் கொண்டார் கேப்டன்(!?). இளைஞர்களை கவரும் விதத்திலான எளிமையான பேச்சு; இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத போதும்,
திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என தன்னைக் காட்டிக் கொண்ட விதம் என்பன போன்றவற்றாலும்; இதுவரை வாக்களிக்கச்
சென்றிடாத சில சதவீத வாக்குகள் பதிவான போது, அது தே.மு.தி.க.,வுக்கு என மாற்றிக் கொண்டதும் அரசியலில் விஜயகாந்தின்
வளர்ச்சிக்கு காரணங்கள்.உண்மையில் இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதான். லோக்சபா தேர்தல் என்பதால், தமிழகத்தில்
புறம்தள்ளி விட முடியாத ஒரு கட்சி போல் தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அவர் மக்கள் தன் மீது வைத்த
நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னும்(நான்கு ஆண்டுகள்) அதே முறையிலான அரசியல் பேச்சுகள் மக்களை சலிப்படையச்
செய்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, குட்டிக் கோடம்பாக்கத்தில்(பொள்ளாச்சி) "மரியாதை' பட
ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். சட்டசபை கூட்டத்தொடருக்கு செல்லவில்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு "இப்போது
தொழிலுக்காக வந்துள்ளேன். அதைத்தான் பார்க்கப் போகிறேன்' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.தொழில் முக்கியம் என்பவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?கோவை விமான நிலையத்தில் வழிமறித்த செய்தியாளர்கள் , இலங்கைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் எதுவும்
சொல்லாமல், "தொழிலை கவனிக்கவே வந்தேன் வேறேதுவும் கேட்க வேண்டாம்' என மழுப்பினார்.எல்லோரையும் போல அவருக்கும் திடீரென விழிப்பு வந்தது. ஈழத்தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என அழைப்பு விடுத்தார்(யாருக்கு?).தமிழினத்தலைவர் என அழைத்துக் கொள்ளும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனத்துவங்கி, அப்பா
என மரியாதையாய்(!) அழைத்து வந்த கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.இறுதி வரை தனியாகத்தான் போட்டியிடுவேன்; மக்களை மட்டுமே நம்புகிறேன் என்று கூறி வந்தவர்; டெல்லியில்
காங்.,மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை நீங்கள் படிக்கும் போது அனேகமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கலாம். பா.ம.க., மட்டுமே இப்போது விஜயகாந்த்
கூட்டணியில் சேர்வதற்கான "செக்'.பா.ம.க.,வுக்கு எதிரணியில் சேர்வதுதான் கேப்டனின் திட்டம். இரட்டை இலக்கத்தில் சீட் கோரி வரும் விஜயகாந்த் தனியாக
போட்டியிடுவேன் என்ற வார்த்தை தர்மத்தை மீறி விட்டார். மற்ற கட்சியினரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்தவர், அரசியல்
சதுரங்கத்தில் தானும் மக்களை வெட்டுக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சாதாரண அரசியல்வாதி என்பதை
நிரூபித்து விட்டார்.ஒரு திரைப்படத்தில், "நான் வருவேன், வரமாட்டேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வந்தா உறுதியா வருவேன்' என பிரபல
நடிகரை தாக்கி "பஞ்ச்' டயலாக் பேசியவர், இப்போது, கூட்டணி இல்லை; நான் தெளிவா இருக்கேன்; கூட்டணி பத்தி மூன்று
நாட்களில் சொல்வேன்' என விளக்கெண்ணை வாதம் பேசி வருகிறார்.கேப்டன் எடுக்கும் முடிவை பொருத்தே அவர் கட்சியின் எதிர்காலம்(!) அமையும் கூட்டணியா இல்லையா என்பதை டாஸ் போட்டு பார்ப்பாரா கேப்டன்?

அசுண வேட்டை


கனவுகளுக்கு அர்த்தம்
சொல்பவர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்களுக்கேனும் தெரியுமா?

யாருமற்ற மணல்வெளியில்,
நீலப்பெரு வெளி நோக்கி
ஊன்றப்பட்ட இரு ஏணிகளில்
ஒன்று குட்டை
மற்றது சற்று நெடிது.

அதில் ஏற வேண்டும் எனக்கு
பற்றுக் கோடில்லா வெளியில்
அவைகளின் உயரம்
கட்டை விரல்களுக்கே போதா.
வாளிகளில் மொண்டு மொண்டு
நீருற்றினேன் ம்ஹூம்...
அப்போதும் வளரவில்லை அவை.

சோர்ந்து போயிருந்த கைகள்
இறகென நீள்வதாகப் பட்டது.
ஆம் என் கழுத்து நீண்டு
மூக்கு அலகாகி
நான் இப்போது பறவையாகிருந்தேன்.

வெறும் பட்சியல்ல,
இசை பிரித்தறியும் அசுணம்.
அப்போது அவன் வந்தான்
ராகத் தானியங்களை
வீசியபடி.
லயம் மாறா மொழிகளில்
லயித்திருந்தது மனம்

ஏணியின் சட்டத்தில்
பற்றியிருந்த வளைநகம்
நழுவும் வேளையில்,
திடுமன முழங்கிய
பறை தாறுமாறாக
சப்தித்தது;
வீறிட்டது யாழ்.
பதைபதைத்து
என் உயிர் வழிகையில்,
தந்தி நரம்புகளை
முறுக்கேற்றி தெறிக்க வைத்த
அவன் கண்களில் தெரிந்தது
குரூரம்.

கனவுகளுக்கு அர்த்தம்
சொல்பவர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.


யானைகள் துரத்தும் கனவு


முந்தைய நாள் இரவை
விழுங்கியிருந்த மழை,
இட்டேரி முழுக்க
மணற்கம்பளம் விரித்திருக்க,
என் உள்ளங்கையை
நிறைத்திருந்தது அப்பாவின்
சுண்டுவிரல்.
விரலிடையில் குறுகுறுக்க
மணல்வெளியெங்கும்
என் கால்தடத்தை
வாஞ்சையாய்ப் பதித்திருந்தார்.
முதல் பள்ளிப் பிரவேசம்
கண்ணீர் ததும்ப நான்,
புன்னகையுடன் அவர்
நின்றது இன்னும் இருக்கிறது
நினைவில்.
எதிர்பாராத போது
கிணற்றுக்குள் தூக்கி வீசி,
தண்ணீர் குடித்து நான்
காற்றுக்குத் தவிக்க,
தலைமுடி பற்றி தூக்கிச்சிரித்து,
"புர்ரி' என்ற போது,
கழுத்தைக் கட்டிக் கொண்ட
நிமிடங்கள்.
கண்கள் விரிய அவர்
கதை சொல்லும் போது,
கனவுகளில் யானை துரத்தும்.
பொன்னியின் செல்வனை
அறிமுகம் செய்ததில்,
வந்தியத்தேவன் குதிரை
என் ஆதர்சம்.
இளவேனிற் பௌர்ணமி,
நட்சத்திர வானம்
என, ஒவ்வொன்றாய்
ஊட்டிவிட்டவர்,
ஒரு முறை அரிவாள் ஏந்தி
அய்யனாராய் நின்றார்.
"அவங்கூட வந்த பின்னாடி
எங்க வீட்டுப் பொண்ணு;
பாத்துட்டுப் போலாம், கூட்டிட்டுப்
போக நினைக்கக்கூடாது'
என்றபோது,
உறவுகள் உறைந்து நின்றன.
எனக்கு அவர் மகா சொரூபி;
அவரின் சுண்டுவிரலை,
தன் உள்ளங்கையில்
நிறைத்துக் கொண்டிருக்கும்
என் மகனைக்கேட்டேன்,
உனக்கு என்ன பிடிக்கும்?
"யானைகள் துரத்தும் கனவுகள்
பிடிக்கும்' என்றான் அவன்.