பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

தமிழக அரசின் கவனத்திற்கு...

தமிழில் பதிப்பிக்கப்படுமா ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்


தமிழக வரலாற்றில் 18ம் நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றைப் படம் பிடித்துக்காட்டும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தமிழில் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களால் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சி இருந்தது என்பதை மறுக்கும் விதமாக கிடைக்கப்பெற்ற இந்தச் சான்றாவணம், ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மட்டுமே முழுமையாக கிடைக்கிறது. தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் இந்த நாட்குறிப்புகளைத் தமிழில் முழுமையாக பதிப்பிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 18ம் நூற்றாண்டு குழப்பமான சூழல் நிலவிய காலம். தஞ்சையில் மராத்தியரும், ஆற்காட்டில் நவாபும், சென்னையில் ஆங்கிலேயரும், புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் ஒரே காலத்தில் நடந்தன. இதுதவிர, நாகை மற்றும் பரங்கிப்பேட்டையில் டச்சுக்காரர்களும், தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களும், ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இக்காலத்தில் நிலவிய அரசியல், சமூக சூழ்நிலைகளை நாம் அறிந்து கொள்ளும் வகையில், சில நாட்குறிப்புகள் கிடைத்துள்ளன. அவை, 18ம் நுõற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கம்பிள்ளை(1709-1761), ரெங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை(1737-1791), இரண்டாம் வீராநாயக்கர், முத்துவிஜய திருவேங்கடம்பிள்ளை(1777-1801) ஆகியோரின் நாட்குறிப்புகளே ஆகும்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. இவர், பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் புதுவையில் காலுõன்ற முக்கியப்பங்கு வகித்த டூப்ளே என்பவரிடம், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.
இந்தநாட்குறிப்பு 1736ம் ஆண்டில் இருந்து 1761ம் ஆண்டு வரையிலான கால்நூற்றாண்டுகாலச் செய்திகளை நமக்குத் தருகிறது.
அப்போதைய காலகட்டத்தில் நிலவிய அரசியல்சூழ்ச்சிகள்; சமுதாய நிகழ்வுகள், கலகங்கள், முற்றுகைகள்; கப்பல் போக்குவரத்து, வர்த்தகம்; முகலாயர் மற்றும் நவாபுகளின் தர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரர்களின் அரசாளும் முயற்சி; புதுவை, ஆற்காடு, வந்தவாசி, திருச்சி, ஐதராபாத், தில்லி பகுதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்' மக்கள் பட்ட சிரமங்கள், அன்னியர்கள் அடித்த கொள்ளை; அக்கால பிரமுகர் வரலாறு, போர்தந்திரங்கள் என, பல்வேறு தகவல்களும் வழக்குத் தமிழிலில் எழுதப்பட்டுள்ளன.
இந்தநாட்குறிப்புகளை, 1836ல், பிரெஞ்சு வருவாய்த்துறை அதிகாரி அர்மோன்கலுவா மொபார், ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் இருந்து கண்டறிந்து, நகலெடுத்தார். அதுவார் ஆரியேல் என்ற பிரஞ்சுக்காரரும் 1850ம் ஆண்டு நகலெடுத்தார். இரு நகல்களும் பாரிஸ் தேசிய நுõலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக எடுக்கப்பட்ட நகலில் இருந்து, மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக்காப்பகம் மேற்கொண்டது. இப்பணி 1892ல் துவங்கி 1896ல் முடிந்தது. இந்நகல், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது.
இந்நகலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அப்போதைய சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894ம் ஆண்டு முதல் 1928ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் கடந்த 1948ம் ஆண்டில் இருந்து 1963ம் ஆண்டு வரை, தமிழில் தொகுதிகள் வெளியிடப்பட்டன. ஆனால், 1736 செப்., 6ம் தேதி முதல், 1753 செப்.,8ம் தேதி வரையான நாட்குறிப்புகள் மட்டும் எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு பிந்தைய 1761 ஜன.,12ம் தேதி வரையிலான நாட்குறிப்புகள் இதுவரை தமிழில் வெளியிடப்படவில்லை.
தமிழில் எழுதப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த நாட்குறிப்பு ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் முழுமையாக கிடைக்கிறது. ஆனால், தமிழில் எட்டு தொகுதிகள் மட்டும் கிடைப்பது வேதனைக்குரிய ஒன்று.
இந்தநாட்குறிப்புகளில் சிலவற்றை பதிப்பித்துள்ள ஜெயசீலன், ""ஐரோப்பியர்கள் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றினர் என இதுவரை கொண்டிருந்த கருத்து மாற்றப்பட வேண்டும்,'' என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
18ம் நுõற்றாண்டில் வழங்கிய தமிழ் உரைநடையை காட்டும் ஒரு ஆவணம் தமிழில் வெளியிடப்படாதது மிகப்பெரும் குறை. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள நிலையில், முழுக்க முழுக்க தமிழில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்றை, தமிழில் முழுமையான தொகுதிகளாக வெளியிட அரசு முன்வர வேண்டும்.

1 comments:

நல்ல கட்டுரை நண்பரே.

தமிழ் மொழி மாநாட்டில் தமிழுக்கு மரியாதை செய்வார்களா பார்க்கலாம்.

 

Post a Comment