பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்


சமீபத்தில் சக நண்பர்களுடன் தொழில் நிமித்த சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது, கொங்குமண்டலத்தில் புதிதாக முளைத்துள்ள நாகரிகம் என்ற பெயரிலான நடைமுறை ஒன்றின் மீது விவாதம் எழுந்தது. மூத்த பத்திரிகையாளரும் வழிகாட்டியுமான செல்வா அண்ணன் விவாதத்தைக் கிளப்பினார்.

கோவை பகுதியில் சமீபகாலமாக திருமணத்தை கோவிலில் நடத்தி விட்டு, ஓட்டலில் சாப்பாடு போடுவது பற்றி விவாதித்த போதுதான், நிதர்சனம் செவிட்டில் அறைந்தது.
திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நிகழ்வது(பெரும்பாலும் அப்படித்தான்). உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய நிகழ்வு அது. உறவினர்கள் சூழ, கேலியும், கிண்டலுமாக வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்கு துணையுடன் செல்லும் உற்சவம்.

திருமணம் என்றால் பட்டு, நகை, மேளதாளம் இவற்றுடன் சாப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்துக்காக உறவினரைக் கூட்டி, பந்திபரிமாறா விட்டால், திருமணம் நடந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், சமீபகால நாகரீகம் இந்த முறைக்கே வேட்டு வைத்துவிட்டது. கோவிலில் சிறிய அளவில் திருமணத்தை முடித்து விடுகின்றனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இன்னும் பெண் வீட்டார் உள்ள கிராமத்தில்தான் திருமணம் நடக்கிறது.

ஆனால், கொங்கு மண்டலத்தில் பெரிய, பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. வசதியைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக, வெரைட்டி வெரைட்டியாக சாப்பாடு போட்டு அசத்தும் திருமணங்களும் அரங்கேறும். ஆனால், வறுமையில் இருந்து திடீரென ஒரு ஐ.டி., கம்பெனியின் தயவால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சில கனவான்களின் செயல்பாடு, மரபுகளை உடைத்து விடும் போலிருக்கிறது.

சிம்பிளாக கல்யாணத்தை முடிக்கிறேன் பேர்வழி என்று, கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு, வந்த விருந்தினர்களுக்கு(விருந்தினர்கள் என்றே சொல்லக்கூடாது. உபசரித்தால்தான் விருந்தினர்கள்) கையில் டோக்கனை திணித்து விடுகின்றனர். அவர்களும் திருமண வீட்டார் கோவித்துக் கொள்ளக் கூடாதே என்ற காரணத்தினாலும், வைத்த மொய்க்கு இதையாவது தின்போம் என்ற அபிலாஷையாலும், ஓட்டல் வாசலில் காத்திருக்கின்றனர்.

ஒரு பிச்சைக்காரனைப் போல், அடுத்தவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரை, அவன் டேஷூக்குப் பின்னால் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது விருந்தையே அவமானப் படுத்துவது போல் இல்லையா? பிரம்மாண்டமாக திருமணம் நடத்தச் சொல்லவில்லை. உன்னால் பத்துப் பேருக்கு மட்டும் சாப்பாடு போட முடியும் என்றால், அதை நீயும், உன் உறவினர்களும் பரிமாறுங்கள்.

திருமணத்துக்காக சாப்பாடு கூட போடமுடியவில்லை என்றால், அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறாய். அதிலும், கிராமத்து உறவினனுக்கும், நகரத்தில் ஏழை நண்பனுக்கும் அழைப்பு விடுப்பதில்லை. சமூகத்தின் இந்த பிறழ்வுகளைத் திருத்த வேண்டிய அவசியம் சக மனிதன் என்ற முறையில் நமக்கும் இருக்கிறது. இந்த அதிபுத்திசாலித்தன கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கான தவறான வழிகாட்டுதல்.
உங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். ஓட்டலில் சாப்பாடு போடுவதை விட, யாருக்கும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது உத்தமம். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையை "மிஸ் கைடு' செய்யாமல் இருக்கும் புண்ணியமாவது உங்களைச் சேரட்டும்.
செல்வா அண்ணனின் இந்த கூற்றை உடனிருந்த யாரும் மறுக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் பதிவு செய்யுங்கள்.

1 comments:

one way it is good to have the food in the hotel, why people should waste their energy and time on cooking, purchasing grocery items.

Lets outsource.

 

Post a Comment