பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

கதவு
எப்போதிருந்து கதவுகளின் மீது எனக்குப் ப்ரியம் ஏற்பட்டது என்பதை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், பதினொன்றோ, பனிரெண்டாம் வகுப்பிலோ கி.ரா.வின் ''கதவு'' சிறுகதையைப் படிப்பதற்கு முன்பிருந்தே கதவுகள் என்றால் எனக்குக் கொள்ளைப் ப்ரியம். முழுதாக மூடியிராத, ஒருக்களித்தபடி உள்ளே என்ன இருக்கிறது என்ற ஆவலை உந்தித்தள்ளும் விதத்தில் இருக்கும் கதவுகள் மேல் தனி வாத்சல்யமே உண்டு.விசும்பல்கள், சிணுங்கல்கள், மூர்க்கங்கள், மறுதலிப்புகள் என, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு காலத்தின் மௌனசாட்சியாய் நின்று கொண்டிருக்கின்றன கதவுகள்.

ஒருவேளை அப்பச்சியிடம் இருந்து கதவுகளின் மீதான காதல் எனக்குள்ளும் வந்திருக்கலாம். அப்பச்சியைப் பற்றிய பேச்சோ, அப்பச்சியின் பேச்சோ அதில் கதவு பற்றி ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். ''பெரியப்பன் ஒத்தக்கால அண்டக் கொடுத்து நின்னுட்டா, 15 பேர் தள்ளுனாலும் கதவத் திறக்க முடியுமா'' என்பதுதான் அவரையும், கதவையும் இணைத்து நான் கேட்ட முதல் வாக்கியம்.

முழுமையாக நரைத்த தலை. மேலே தூக்கிச் சீவியிருப்பதால், நடுவழுக்கை பெரிதாகத் தெரியாது. இருபுறமும் தூக்கி நிறுத்திய வெண்ணிற மீசையில் எலுமிச்சை நிறுத்தலாம் போலிருக்கும். தீட்சண்யமான கண்கள், சராசரியை விடக் கொஞ்சம் உயரம் குறைவு. ஆயுதம் இல்லாமல் ஐந்து பேரைச் சமாளிப்பாராம். ரெண்டு கையிலும் கம்பெடுத்து சுத்துனா கல்லு வீசினா, தெறிக்கும் என்ற தகவல் அவர் பற்றிய கூடுதல் மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அப்பிச்சி வெளியே கிளம்பும் போது, அம்மத்தா கதவை ஒருக்களித்துப் பிடித்தபடி, அப்பச்சியை நேருக்கு நேர் பார்க்காமல், என்னென்ன வாங்க வேண்டும் என்று சொல்ல, அதைக் கேட்டும் கேட்காத மாதிரி ஒரு சிரிப்புடன் கிளம்பி விடுவார்.ஆனால், வரும்போது அமத்தா சொல்ல மறந்ததையும் சேர்த்தே வாங்கி வந்திருப்பார். அப்பிச்சியுடனான அமத்தாவின் பெரும்பாலான சம்பாஷணைகள், கதவைப் பிடித்துக் கொண்டுதானிருக்கும்.

அப்பிச்சி எந்த வீட்டுக்குப் போனாலும் கதவைத்தான் முதலில் பார்ப்பார். பார்க்கும் போதே என்ன மரம் என்பதையும், எவ்வளவு கனம் என்பதையும் சொல்லி விடுவார். பெரியப்பனுக்கு அப்படி கதவு மேல என்னதான் பிரியமோ தெரியலைப்பா என்பார்கள். இரட்டைக் கதவுகளை விட, அகலமான ஒற்றைக் கதவுகள் அவருக்கு அதிகமாகப்பிடிக்கும். கருகருவென வழவழப்பான மேற்பரப்புடன் கூடிய மர அலமாரி ஒன்று அவர் வசம் இருந்தது. சுவருடன் இல்லாமல் தனித்து இருக்கும்படியான அந்த அலமாரியின் கதவுகளின் அலங்கார வேலைப்பாடு வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகமே.வேறு யாரிடமும் அதன் சாவியை அவர் கொடுத்ததே இல்லை.

தண்ணீர்த் தொட்டி அருகே போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டலின் மீதிருந்தபடி யாரோ ஒருவரின் குடும்ப பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்து கொண்டிருந்தார்.''கட்டில் பாதி, கதவு மீதி அதான்டே கலவி. தா(ழ்)ப்பா சரியில்லனா கதவு திறந்துதான்டா இருக்கும். எல்லாஞ்சரியின்னுஞ் சொல்ல முடியாது! எதுவும் தப்புன்னுஞ் சொல்ல முடியாது. பாத்து நடந்துக்க என்றபடி, அவன் தோளைத் தட்டியபடி சமாதானம் செய்தார். அடுத்த வாரத்திலேயே அவன் கோவித்துக் கொண்டு போன பெண்டாட்டியை திரும்ப அழைத்து வந்து, அப்பச்சியிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனான்.

அது என்னங்க அப்புச்சி, ‘கட்டில் பாதி, கதவு மீதி எனக்குப் புரியலயே என்றேன். புரியும்போது புரியும்டா பேராண்டி என்றவர் சிரித்தபடியே மீசை ஒதுக்கினார்.ஒரு மகாளாய அமாவாசை தினத்தன்று அவர் புகழுடம்பு எய்தினார். அவரை மண்ணுக்குக் கொடுத்து விட்டு திரும்பி ஆசாரி வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது, பொன்னையா ஆசாரி சம்சாரம் தனம்மா விசும்பிக் கொண்டிருந்தது என் காதில் மட்டுமே விழுந்த மாதிரி இருந்தது எனக்கு.

1 comments:

பழய கதவுகள் சில வீடுகளில் முழுமையாக திறக்கமுடியாமல் கீழே உரசிக்கொண்டு கீச்சென்ற சப்தத்துடன் திறக்கும். அதுவும் மாலை நேரங்களில் அனுபவித்தால் மனம் முழுதும் அதிலேயே ஈடுபட்டு நிற்கும். நான் அதுபோன்ற கதவுகளைக்கண்டால் திறந்து மூடி திறந்துமூடி ரசிப்பேன். இப்போது அப்படி கதவுகளை காணமுடிவதே இல்லை:(

பகிர்வு நினைவுகளை கிளறும் வண்ணம் அமைந்துள்ளது சக்தி.

 

Post a Comment