பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பாத்திரம் அறிந்து...

பாத்திரம் அறிந்து...
இரக்க உணர்வுகள் இல்லாமல் இல்லை. ஆனால், உழைப்பை கேவலப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் பிச்சையிடுதலை என் கோணத்தில் பார்க்கத் தோன்றுகிறது. இயலாதவர்கள் என்பது வேறு. ஆனால், வாய்ப்பு மறுக்கப்படாத நிலையிலும் இரந்துண்டு வாழ்தல் தகுதியற்ற ஒரு விஷயம்.
பஸ்ஸ்டாண்டுகள், தெருவோரங்களில் கைநீட்டும் குழந்தைகளை பார்க்கையில் தவறு யார் மீது என்று புரியவில்லை. குழந்தைகளுடன் வரும் பெண்கள் கைநீட்டுகையில், இயற்கையாக எழும் பச்சாதாபம் உந்தித்தள்ளும் போதும், மனதை கல்லாக்கிக் கொண்டு பிச்சை மறுக்க வேண்டியதாகிறது. மனதிற்கும், புத்திக்கும் போராட்டம் நடக்கிறது. ஊக்குவிப்பதால்தானே மீண்டும் கையேந்துகின்றனர்.
சமீபமான நாட்களில் இரு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, கைக்குழந்தையுடன் கையேந்திய பெண்ணுக்கு, சில்லறை இல்லை என வழக்கமான பதிலை சொன்னேன். அருகிலிருந்த நண்பன்(சிவா)பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தான். என்னிடம் இருந்த சில்லறையை அவனுக்கு கொடுத்து, பிச்சையிடச் சொன்னேன்.
அப்படியே செய்தவன், கேட்டான் "ஏன் மகாபிரபு நீங்க போட மாட்டீங்களா?'
பிச்சையிடுவது எனக்கு பிடிக்காது என்றேன். மற்றொரு நண்பனும்(ரவி)வழிமொழிந்தான். பின் பிச்சையிடுதலை பற்றி எங்கள் விவாதம் தொடர்ந்தது.
நமக்கே வாழ வழியில்லாத போது, இவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? எனது கோபமான கேள்விக்கு சிறிது நேரம் மவுனம் நிலவியது.
சிவா, "அப்படி ஏன் நினைக்கிறாய். வாழ்க்கையின் வேறு எந்த பரிமாணங்களையும் அவர்கள் கண்டதில்லை. பிளாட்பாரத்தில் வெட்டவெளியில், பரிணாமம் அற்றவைகளைப் போல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர்த்துக் கொள்ளும் உடல் இச்சைதான் அவர்களின் ஒரே இன்பம். அதன் விளைவாகவே இனவிருத்தி. அதனால்தான் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளை முதலீடாக கருதி பெற்றுக் கொள்வதில்லை,' என்றான்.
"ஆனால், குழந்தையைக்காட்டித்தானே அனுதாபத்தை பெறுகிறார்கள்,' விவாதத்தை நீட்டித்தேன்.
"முதலீடாக கருதி பெற்றுக் கொள்வதில்லை. ஆனால், பெற்ற பின்பு, வீட்டில் விட்டுவிட்டா வரமுடியும். அனுதாபத்தையும் பெறமுடியும் என்பது கூடுதல் காரணம் அவ்வளவே' அவன் கோணத்தில் இருந்து விளக்கினான்.
அப்படியானால், கடவுள்களோடு தொடர்பு படுத்தி அலகு குத்திக்கொண்டும்,< இன்னபிற காரணங்களை முன்வைத்தும் காசு கேட்போரையும் இதே பார்வையில் அணுகலாமா? முதுமையின் காரணமாக உழைக்க முடியாதவர்களும், நிஜமாகவே உடல்உறுப்பு செயல்பாடுகள் குறைந்தவருக்கும் உதவுவதில் தவறில்லை. உண்மையில் அதுகூட தவறான ஒன்றுதான்.
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அரசு, அந்தந்த மண்டலவாரியான அதிகாரிகள், இதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். கண்ட காரணங்களுக்காக செலவிட்டு, விளம்பரம் தேடிக்கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பணக்கார சேவை அமைப்புகளும் இதில் ஏன் அக்கறை காட்டவில்லை.
அப்படி அக்கறை காட்டும் ஒன்றிரண்டு நிறுவனங்கள்(!குறிக்கோள் பணம் எனில், அவை அமைப்புகள் அல்ல. நிறுவனங்கள் என்பது என் கருத்து) வெளிநாட்டு நிதி உதவி, அரசுகளின் வரிவிலக்குகளுக்காக வேஷம் போடுகின்றன.
பிச்சை புகினும் கற்கை நன்று; ஆனால், பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
ஒருபோதும் பிச்சையிடுதலை ஊக்குவிப்பதில்லை என்பதே எனது கோணம். உங்களின் கருத்துகள் என் கோணத்தை மாற்ற உதவலாம் நண்பர்களே..

0 comments:

Post a Comment