பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

குழந்தை என்னுமோர் "குறும்பு'யல்

நம்மை விட புத்திசாலிகளிடம் பேசும்போது 'எச்சரிக்கை'யாகவும், முட்டாள்களிடம் பேசும்போது 'அதிக எச்சரிக்கை'யாகவும் பேசுவது நல்லது, நண்பர் திரு தனது பதிவில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். படிக்கும் போது ஏனோதானோ என்று படித்து விட்டேன். அவரிடம் கேட்க வேண்டும் குழந்தைகளிடம் பேசும் போது எப்படிப் பேச வேண்டும் என்பது. தயவு செய்து முட்டாள் போல பேசிவிடுங்கள் அதுதான் நல்லது என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள் சுவி, சுவேதா; பக்கத்து வீட்டு குட்டி தேவதை ( பக்கத்து வீட்டுக்கு மட்டும். பின்னே என்னை மூக்கறுத்தால், குட்டிச்சாத்தான் என்றுதானே சொல்லத்தோணும்).
விஷயம் இதுதான். நான்கைந்து சோட்டாளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சுவி. பள்ளியில் ஆசிரியர்கள் இவளுக்கு நடத்திய பாடத்தை, வீட்டு வாசல் படிகளுக்கும், நாற்காலிகளுக்கும் நடத்திக் கொண்டிருந்தாள். சலிப்புத் தட்டி விட்டதால், "மாமா நீதா நெறைய படிச்சியாமா எங்கம்மா சொல்லிச்சு (அப்படியா சொல்லி வச்சுருக்காங்க.. ம்ஹூம் இது ஆவறதில்ல). எதாவது கதை சொல்லு. தங்க(ம்) கதை இருந்தா சொல்லு". (பொண்ணுக காரியத்துல கண்ணா இருக்காங்க).
நான் கதை சொல்ல பிரயத்னப்படாமல், சமாளிக்க முயன்றேன். ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சங்கத் தமிழரின் பெருமையை பீற்றலாம் என நினைத்து, "அந்தக் காலத்துல நம்ம கிட்ட நெறைய நெறைய
தங்கம் இருந்துச்சாம். நம்ம ஆத்தா இருக்குல்ல அவங்கள மாதிரி இருக்கறவங்க, காதுல பெரிசா தொங்கட்டான் மாதிரி குண்டு குண்டா தங்கம் போட்டிருப்பாங்களாம். கோழி, காக்காய் எல்லாம் நெல்லு தானியத்த கொத்த வந்துச்சுனா, காதுல இருக்கற தங்கத்த கழட்டி வீசிதான் விரட்டுவாங்களாம்".
நிசமாவா... நம்பாமல் பார்த்தாள். (அந்த முகச்சுளிப்புக்கே ஆயிரம் பொன் தரலாம்). அவ்ளோ நெறையாவா... பொய் சொல்லலைல்ல. ஒரு வழியாக நம்பி, கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள்( மறுபடியும் ஆயிரம் பொன்).
திடீரென வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அக்கா, "நகத்தக் கடிக்காம இருக்க மாட்டியா. பொழுதோட நகம்வெட்டறது, கூட்டறதுன்னு ஆகாத வேலையத்தான் செய்வ. சொன்ன கேட்கறதே இல்ல" போகிற போக்கில் சுவியை வசைபாடி விட்டு போக.
காதருகே, எப்பப்பார்த்தாலும் இப்டிதான். ஏ மாம்சு, நைட்ல நகம் வெட்டக்கூடாதா, டைம் கிடக்றப்பதா வெட்ட முடியும். உங்கக்கா கிட்ட சொல்லு' என்றாள் சுவி.
அதுக்கப்பறம்தான் சனி ஏழாம் இடத்தில் நீச்சம் பெற்றான்.
"அம்மாக்கு ஒன்னும் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப மாதிரி பளிச்சுனு எரிய வெளக்கு இல்ல. மின்சாரம் இல்ல. அதனால, கொஞ்சம் வீடு இருட்டா இருக்கும். நகத்தை சரியா வெட்ட முடியாது. சிந்திக்கிடக்கறத முழுசா கூட்ட முடியாது. கூட்டி அள்றதுல சின்னச் சின்ன பொருட்கள் குப்பையோட வெளில கொட்டிருவோம் இல்ல. அதனாலதான் அப்படி சொல்லியிருப்பாங்க".
என் மேதாவித் தனத்தைக் காட்டவும், எனக்குத் தெரிஞ்ச பகுத்தறிவை அவளுக்கும் ஊட்டலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னதற்கு அவளிடம் உடனடி மறுமொழி வந்தது. ஆனால், வேறுவிதமாக.
சினிமாவில் காட்டுவார்களே "ஆப் ரவுண்டு டிராலி ஷாட்' அதே மாதிரி இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னை அரைவட்டம் போட்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 30 நொடிகள் இடை வெளி விட்டு பேசினாள். அதே மாதிரி நீங்களும் படித்துப் பாருங்கள்." நைட்டு..... கூட்டினா.... சின்னப் பொருள்... குப்பையில போயிரும்....."
முகத்துக்கு நேரே கை நீட்டியபடி, "மூஞ்சிய பாரு. அதா தங்கத்தையே வீசி கோழி முடுக்கறாங்களாம். கூட்டுனா சின்ன பொருள் வெளியே போயிரும்னு, விட்டுட்டாங்களாம். தங்கத்த விட, சின்னப் பொருள பெரிசா நினைப்பாங்களாக்கு. தெரிஞ்சா ஒழுக்கமா சொல்லணும். இல்லேன்னா..... டேஷ் மாதிரி ஒளறக்கூடாது.(அவளின் வகுப்புத் தோழி ஒருத்தியின் பெயர்தான் அந்த டேஷ்சில் வர வேண்டிய பெயர். கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை. பெயர் நினைவில் இல்லாததால் டேஷ் போட்டிருக்கேன்)
"டே அழகு வாடா விளையாடப்போலாம். இதுக்கு எங்க அம்மாவே பரவால்ல," சற்றும் மதிக்காமல் அவள்பாட்டுக்கு போய்விட்டாள். நான் கீழே கிடந்த என் மூக்கை அக்காவுக்கு தெரியாமல் எடுத்து மாட்டிக் கொண்டு, அவசரமாக வெளியே போய் விட்டேன்.
அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். இனி குழந்தைகளிடம் முட்டாள் மாதிரி பேசிவிடுவது எல்லாருக்கும் நல்லது என்று.

ரிதுக்குட்டியும் அனு என்றொரு தோழனும்

பெங்களூரு சி.வி., ராமன் நகரில் கோவில் கொண்டுள்ள அனுமந்தராயர், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், இன்னபிறருக்கும் கடவுள். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களில் 90 சதவீதத்தினரின் இஷ்ட தெய்வமாக ஹனுமன் இருப்பார். ஏனெனில் இந்துக்கடவுள்களில் பிரதானமான ராமனின் அடியவர்; சர்வ வல்லமை படைத்த கடவுள்; பெரும்பாலான ஜிம்களில் வலிமைக்கு உதாரணம். தமிழார்வம் மிக்கவர்களுக்கு சொல்லின் செல்வன். சில அரசியல் கட்சியினருக்கு பிரதான லோகோ. சுருக்கமாக சொல்லப்போனால், நோபல் பரிசுக்கு தகுதியுடையவரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கும், அமெரிக்க அதிபரின் இஷ்ட தெய்வமும் கூட.
இவ்வளவு பிரசித்தியும், சர்வ வல்லமையும் பெற்ற ஒருவர் உங்களுக்கு என்னவாக இருக்க முடியும். கடவுள் என்ற உறவைத் தவிர. ஆனால், இதைப்பற்றியெல்லாம் ரிதுவுக்கு தெரியாது; அதைப்பற்றிய கவலையும் இல்லை அவளுக்கு.
ஓ….. இதுவரை ரிதுவை அறிமுகப்படுத்தாமைக்காக மன்னிக்கவும். அவள் இந்த பூமிக்கு புதுவரவு; ஜஸ்ட் 12 லட்சத்து 74 ஆயிரத்து 41 நிமிடங்களே ஆகின்றன. கணக்கிட சிரமமாக இருக்கிறதா; ரிது(ரிதன்யா) 29 மாதங்களான அழகிய குட்டி தேவதை.
ரிதுவை பொருத்தவரை ஹனுமான், ஹனு ஆகி, அனு ஆகி விட்டிருக்கிறார். தன் வயதொத்த சிறு தோழனாகவே பாவிக்கிறாள். தன் வயதொத்த, என்று நாமாகத்தான் எண்ணிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவள் எங்கு சென்றாலும், அனு அவளின் தோளில் அமர்ந்திருப்பான், அல்லது பின்னால் வந்து கொண்டிருப்பான். ( ஆஷ்டான அனுபூதிகள் மன்னிப்பார்களாக). அவ்வளவு சிறிய உருவத்துக்கு இரண்டு ஆண்டுகள் வயது இருக்குமா என்ன?
என்னதான் பிரெண்டாக இருந்தாலும், கிண்டர்ஜாய்(குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்) வாங்கினால், அனுவுக்கு கிடையாது. தான் “புஸ்“(இயற்கை உபாதைக்கு, ரிது வைத்திருக்கும் பெயர்) போனதையும் அனுவிடம் யாரும் சொல்லக்கூடாது.
அம்மா வலிக்குது, அனுக்கிட்ட ச்சொல்லுங்க( எதுவாயினும், அனுவிடம் சொன்னால் சரியாக போய்விடும் என்பது, ரிதுவின் நம்பிக்கை). உறங்கும் போது, அனுவும் உடன் பள்ளிகொள்வான். இன்னும் ரிதுவுக்கு வரைய தெரியாது என்பதால், அனுவை எந்தமாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறாள் என தெரியவில்லை. ஒரு வேளை குஷிவாலி கபீஷ் மாதிரி இருக்க கூடும்.(கபீஷ் குறும்பும், புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குரங்கு- காமிக்ஸ் ஹீரோ)
யார் மீதும் கோபம் வந்தால், ரிது உடனே அனுவிடம் சொல்லிவிடுவாள். சில சமயங்களில் அனுவுக்கும் சேர்த்து திட்டு கிடைக்கும்.
குழந்தைகளுக்கான உலகம் தனி. எல்லாவற்றையும் குழந்தைத்தனமாகவே அணுகுகிறது. அது கடவுளாகவே இருக்கட்டுமே; அதனால் என்ன?
ரிதுவுக்கு மேலும் சில நண்பர்கள் உண்டு. அவர்களும் அனுவோடு தொடர்புடையவர்களே. அத்தனை பேருமே அவளின் பரந்து விரிந்த கற்பனை ராஜ்ஜியத்துக்கு உரியவர்கள்.
ச்சிம்ப்பு(சிம்பன்சி என்பதன் சுருக்கம் தான் அது தமிழ் நடிகர்கள் யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல); சுக்ரீவன்தான் சிம்பன்சி ஆகி, ச்சிம்பு ஆகியிருக்கிறார். அடுத்த கற்பனை கேரக்டர் ராமாயணம். மற்ற இரு நண்பர்களையும் குரங்கு வடிவில் கற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால், ராமாயணத்துக்கு என்ன உருவம் கொடுக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில் ரிதுவால் முடிந்திருக்கிறது.
அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட(வெல்கம் டூ தி கார்பொரேட் வேர்ல்டு) அம்மம்மாவுடன் இருக்கும் ரிது, இந்த மூவருடனும்தான் விளையாடுவாள். உங்களுக்கு தெரியுமா, அப்பாவின் கார் அவளுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால், பிரண்ட்ஸ்களுடன் பைக்கில் போவதுதான் அவளுக்கு பிடிக்கும், ஒரு முறை ரிது, அனு, ச்சிம்பு, ராமாயணம் நான்கு பேரும் பைக்கில் போன போது, போலீஸ் பிடித்து விட்டது. பின்னே, ஒரே பைக்கில் நான்கு பேர் சென்றால் பிடிக்க மாட்டார்களா. அப்புறம் எப்படி தப்பித்தார்கள் என்பதை ரிது எனக்கு சொல்லவில்லை.
அவளின் உலகத்தை விவரிக்க இந்த தளம் போதுமானதாக இருக்காது என்பதால், இத்துடன் நிறுத்தி உத்தேசித்திருக்கிறேன்(அப்பாடா).
என்ன சொல்வதற்காக இதை எழுதினேன் என தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள். எதை கடவுளிடம் சொல்ல வேண்டும்; அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்.
அவர்களும் கடவுளுடன் விளையாடுகிறார்கள்; நாமும் கடவுளை வைத்து(!) விளையாடுகிறோம்.
அடுத்த முறை அவள் வரும்போது, அனுவைப் பற்றி மேலும் விசாரித்து சொல்கிறேன். நீங்கள் பெங்களூரு போனால், சி.வி., ராமன் நகருக்கு விசிட் அடித்து, அனுவை நலம் விசாரியுங்கள்.