பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்


சமீபத்தில் சக நண்பர்களுடன் தொழில் நிமித்த சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது, கொங்குமண்டலத்தில் புதிதாக முளைத்துள்ள நாகரிகம் என்ற பெயரிலான நடைமுறை ஒன்றின் மீது விவாதம் எழுந்தது. மூத்த பத்திரிகையாளரும் வழிகாட்டியுமான செல்வா அண்ணன் விவாதத்தைக் கிளப்பினார்.

கோவை பகுதியில் சமீபகாலமாக திருமணத்தை கோவிலில் நடத்தி விட்டு, ஓட்டலில் சாப்பாடு போடுவது பற்றி விவாதித்த போதுதான், நிதர்சனம் செவிட்டில் அறைந்தது.
திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நிகழ்வது(பெரும்பாலும் அப்படித்தான்). உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய நிகழ்வு அது. உறவினர்கள் சூழ, கேலியும், கிண்டலுமாக வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்கு துணையுடன் செல்லும் உற்சவம்.

திருமணம் என்றால் பட்டு, நகை, மேளதாளம் இவற்றுடன் சாப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்துக்காக உறவினரைக் கூட்டி, பந்திபரிமாறா விட்டால், திருமணம் நடந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், சமீபகால நாகரீகம் இந்த முறைக்கே வேட்டு வைத்துவிட்டது. கோவிலில் சிறிய அளவில் திருமணத்தை முடித்து விடுகின்றனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இன்னும் பெண் வீட்டார் உள்ள கிராமத்தில்தான் திருமணம் நடக்கிறது.

ஆனால், கொங்கு மண்டலத்தில் பெரிய, பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. வசதியைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக, வெரைட்டி வெரைட்டியாக சாப்பாடு போட்டு அசத்தும் திருமணங்களும் அரங்கேறும். ஆனால், வறுமையில் இருந்து திடீரென ஒரு ஐ.டி., கம்பெனியின் தயவால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சில கனவான்களின் செயல்பாடு, மரபுகளை உடைத்து விடும் போலிருக்கிறது.

சிம்பிளாக கல்யாணத்தை முடிக்கிறேன் பேர்வழி என்று, கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு, வந்த விருந்தினர்களுக்கு(விருந்தினர்கள் என்றே சொல்லக்கூடாது. உபசரித்தால்தான் விருந்தினர்கள்) கையில் டோக்கனை திணித்து விடுகின்றனர். அவர்களும் திருமண வீட்டார் கோவித்துக் கொள்ளக் கூடாதே என்ற காரணத்தினாலும், வைத்த மொய்க்கு இதையாவது தின்போம் என்ற அபிலாஷையாலும், ஓட்டல் வாசலில் காத்திருக்கின்றனர்.

ஒரு பிச்சைக்காரனைப் போல், அடுத்தவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரை, அவன் டேஷூக்குப் பின்னால் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது விருந்தையே அவமானப் படுத்துவது போல் இல்லையா? பிரம்மாண்டமாக திருமணம் நடத்தச் சொல்லவில்லை. உன்னால் பத்துப் பேருக்கு மட்டும் சாப்பாடு போட முடியும் என்றால், அதை நீயும், உன் உறவினர்களும் பரிமாறுங்கள்.

திருமணத்துக்காக சாப்பாடு கூட போடமுடியவில்லை என்றால், அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறாய். அதிலும், கிராமத்து உறவினனுக்கும், நகரத்தில் ஏழை நண்பனுக்கும் அழைப்பு விடுப்பதில்லை. சமூகத்தின் இந்த பிறழ்வுகளைத் திருத்த வேண்டிய அவசியம் சக மனிதன் என்ற முறையில் நமக்கும் இருக்கிறது. இந்த அதிபுத்திசாலித்தன கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கான தவறான வழிகாட்டுதல்.
உங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். ஓட்டலில் சாப்பாடு போடுவதை விட, யாருக்கும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது உத்தமம். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையை "மிஸ் கைடு' செய்யாமல் இருக்கும் புண்ணியமாவது உங்களைச் சேரட்டும்.
செல்வா அண்ணனின் இந்த கூற்றை உடனிருந்த யாரும் மறுக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் பதிவு செய்யுங்கள்.

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்ற கடந்த 28 மார்ச்சில் இடப்பட்ட இடுகையின் தொடர்ச்சி...

சிறிய அறிமுகம்...
கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி நளினிஜமீலா பங்கேற்ற ஒரு விவாதத்தில் இருந்து. முன்னதாக அவர் சிறிய கருத்துரை ஒன்றை வழங்கியிருந்தார். அவரின் பேச்சைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது. முதலில் கேள்வி கேட்க பலரும் தயங்கினர்.
விவாதம் துவங்கும் போது கேள்வி கேட்க யாரும் இல்லை. ஒருவர் கேள்வி எழுப்பியதும், தயங்கித் தயங்கி கேள்வி கேட்டவர்கள், ஒரு கட்டத்தில் சூடுபறக்க விவாதத்தில் இறங்கினர்.
இனி விவாதத்தில் இருந்து....

கேள்வி:
* இத்தொழிலில் இருப்பவர்களை மீட்டு, கல்வி போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கலாமே. வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால், திருந்தி ஒழுக்கமாக இருப்பார்களே?
பதில்:
* ""இரண்டு காரணங்கள் உள்ளன. அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் வேலை கொடுக்கும் சூழ்நிலை இங்கு இல்லை. இரண்டாவது விஷயம். இம்மாதிரி ஆட்கள் திரும்பிச் சென்று சமூகத்தில் உரிய மரியாதையுடன் வாழ முடியாது. பாலியல் தொழில் இல்லாமல் போக வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும். ஆனால், இருக்காமல் போகாது. பெண்ணடிமைத்தனமும், பெண்ணை அடிமையாக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு செயல்படும் குடும்ப நிறுவன அமைப்பும் இல்லாமல் போனால், பாலியல் தொழிலும் இல்லாமல் போகும். அதுவரை பாலியல் தொழிலை அங்கீகரிப்பது மன்னிக்கவும் வரைமுறைப்படுத்துவது என்ற நிலைப்பாடு தேவை''
கேள்வி:
* புத்தகம் வெளிவந்த பின், உங்கள் மீதான குழந்தைகளின் மனப்போக்கு; அவர்களின் மீது சமூகத்தின் பார்வை எப்படி இருந்தது?
பதில்:
* ""இரு பெண் குழந்தைகளில் மூத்தவள், ஆரம்பத்திலேயே என்னை விட்டு பிரிந்து விட்டாள். இரண்டாவது பெண்ணை, புத்தகம் எழுதிய பின் பல சமூக விவாத மேடைகளுக்கு அழைத்து வந்திருக்கிறேன். அவளுக்குத் தெரியும். அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்று; அவள் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறாள். சமூகம் அவளை மனரீதியாக துன்புறுத்தவில்லை''
கேள்வி:
* பாலியல் தொழிலை கட்டுப்படுத்த சட்டமே தேவையில்லை; அதை தனிமனித ஒழுக்கமாக மாற்றி விடலாம்; சட்ட மீறலாகவோ, குற்றமாகவோ பார்க்கத் தேவையில்லை என்பது பற்றி கருத்து?
""சட்டம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலுக்கு வந்தவர்களும், விபத்தாக தள்ளப்பட்டவர்களும் உண்டு. விபத்தாக தள்ளப்பட்டவர்கள், சமூக வாழ்க்கைக்கு திரும்ப, சட்டம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். பாலியல் தொழில் என்ற பெயரில், ஒரு பெண்ணை விற்பனை செய்ய சட்டம் தடையாக இருக்கும். எனவே, சட்டம் தேவை. ஆனால், ஒரு திருத்தம். இரண்டு பேர் சேர்ந்து விரும்பி இருக்கும் போது, அவர்களைக் கைது செய்யக்கூடாது. அவர்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது என்பதே என் கண்ணோட்டம்''
கேள்வி:
* ஆண்களுக்கு பாலியல் வடிகால் தேவை காரணமாகவே, வெளியில் பாலியல் சீண்டல்களும், பாலியல் ஒடுக்குமுறைகளும் எழுகின்றன என்பது பொதுவான கருத்து. அப்படியானால், சட்டரீதியாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில், பெண்களின் மீது பாலியல் ஒடுக்குமுறையும் சீண்டல்களும் இல்லையா? அது சாத்தியமாகி இருக்கிறதா?
பதில்:
* டாக்டர் ஒருவர் குறுக்கிட்டு, ""ஆண்களின் வடிகாலுக்காக, பெண்கள் சார்ந்த பாலியல் தொழில் உள்ளது என்றால், பெண்களும் அவர்களின் வடிகாலுக்காக, ஆண் பாலியல் தொழிலாளர்களிடம் போகலாமா என்ற விவாதம் எழும். அப்படி யதார்த்தம் எழுமானால், அதையும் அங்கீகரிக்கலாம். பொருளாதார சுதந்திரம் வளமை பெற்ற மேட்டுக்குடிப் பெண்களில், அப்படிப்பட்ட ஒரு பிரிவும் இல்லாமல் இல்லை. சமூகத்தில் அப்படியும் ஒரு சிறு பிரிவு இல்லாமல் இல்லை,'' என்றார்.

தீர்க்கமான கருத்துகளை முன்வைத்த ஜமீலா, ""தாய்லாந்து, கோல்கட்டா, மைசூர் பகுதிகளை உதாரணமாகக் காட்ட முடியும். மைசூரில் நான் செக்ஸ் ஒர்க்கராக இருந்துள்ளேன். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய உடனே மிக சுதந்திரமாக நடந்திருக்கிறேன்.
கோல்கட்டாவில் சோனாகாச்சி என்ற இடத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எச்.ஐ.வி., விழிப்புணர்வு தொடர்பாக, அங்கே சென்ற போது, இரவு 12.00 மணிக்கு மதுக்கடையில் மது அருந்தி விட்டு, ரோட்டில் மிக சுதந்திரமாக உலவி இருக்கிறேன். கேலி, கிண்டல் இல்லை.
தாய்லாந்தில் சுகப்பேரியா என்ற பகுதி உள்ளது. புதிதாக திருமணமான தம்பதியினர், தன் தோழர்களுடன் சேர்ந்து அங்கு நடக்கும் "செக்ஸ் ஷோரூம்' நிகழ்ச்சிக்கு செல்வர். அங்கு, பாலியல் தொழிலாளி நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகள், செயல் முறைகளை விளக்குவர். அதைப்பார்க்க நிறைய பேர் வருவர். அந்த புதுமண தம்பதியினர் இதில் வெட்கப்படுவதில்லை; அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
"தேவையான பொருள், தேவையான இடத்தில் கிடைக்கும் போது, தேவையில்லாத சீண்டல்கள் இருக்காது,' என்பதே என் கருத்து. அதற்காக ஒரு குடும்பப் பெண்களின் மீதான சீண்டல் முற்றிலும் இருக்காது என்று கூறவில்லை; மிக மிகக் குறைந்து விடும் என்கிறேன்,'' என்றார்.

ஒரு இளம்பெண் குறுக்கிட்டு, "தாய்லாந்து சென்றிருக்கிறேன். அங்கு பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. லாங்சபாங் என்ற பகுதியில் இதுதான் பிரதான தொழில். அடையாள அட்டை, தடுப்பு உபகரணங்கள் என அனைத்து விஷயங்களும் உண்டு. பாலியல் தொழிலாளிகளை அனைவரும் மதிக்கின்றனர். ரோடுகளில் சீண்டல் இல்லை.
ஆனால், எளிதாக இத்தொழிலில் காசு கிடைக்கிறது என்பதற்காக, இளம்பெண்கள் நிறைய பேர் வேலைக்குச் செல்வதில்லை; படிக்க செல்வதில்லை, என்ற புகார் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால், தொழில் துறை ஸ்தம்பிக்கிறது, என்ற குற்றச்சாட்டும் உள்ளது,'' என்றார்.

"கஷ்டமில்லாத' என்ற வார்த்தையை மறுத்தபடி பேசினார் ஜமீலா. ""கோல்கட்டாவில், செக்ஸ் ஒர்க்கராக இருந்து கொண்டு, படித்து டாக்டரானவர்களும் உண்டு. பாலியல் தொழில் சுலபமானது இல்லை. கண்ணுக்கும் மனதுக்கும் பிடிக்காதவர்கள் வருவர். காசு கொடுக்காமல் ரகளை செய்பவர்களும் உண்டு. பாலுறவு, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வாரத்துக்கு ஒரு முறையே தேவைப்படும்.
ஆனால், தொழிலாக செய்யும் போது பலமுறை உறவு கொள்ள நேரிடும். அது கஷ்டம்தான். பணம் சம்பாதிக்க எளிது, ஈசி என்பதால், தொழிலில் இறங்கி விடுகின்றனர் என்று கூறி விட முடியாது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிப்பு உண்டு.
மனைவியை இரண்டாம் முறை நெருங்கினால், <உடல்வலியால் மறுக்கின்றனர். அப்படியானால், பாலியல் தொழிலாளிக்கு ஏன் கஷ்டம் இருக்காது. நாங்களும் சாதாரண பெண் போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் தானே. சிலர் எங்களை அடிக்கும் போது, "ஓ' என கத்தக்கூட முடியாது. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால், அது கவலைப்பட வேண்டிய விஷயம்''
கேள்வி:
* பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் தேவையா?
பதில்:
* ""தேவையற்ற பாலியல் கட்டுப்பாடுகள், அத்துமீறலுக்கு காரணமாக இருக்கின்றன. அதற்காக, எல்லாரும் இத்தொழிலுக்கு வந்து விடுங்கள் என்று அர்த்தமில்லை. பாலியல் கல்வி அனைவருக்கும் தேவை. சில எழுத்தாளர்கள் சொல்வது போல், பாலுறவு என்பது சொர்க்கானுபவம் இல்லை. சின்ன உணர்வு அவ்வளவே. நமக்கு சாதாரணமாக சிறுநீர் கழிக்கும் முன் ஏற்படும் உணர்வும்; கழித்த பின் கிடைக்கும் நிம்மதியையும் போன்றதே. மிக உயர்ந்த அனுபவம் எல்லாம் கிடையாது. ஆண் என்றால் இவ்வளவுதான், பெண் என்றால் இவ்வளவுதான், என இளைய தலைமுறைக்கு தெரியவைத்து விட்டால் போதும். பாலியல் அத்துமீறல்கள் குறைந்து விடும்.
பாலியல் தொழில் இருக்க வேண்டும்; இருந்தே தீர வேண்டும் என்று கூறவில்லை; பாலியல் தொழில் பாதுகாப்பு இயக்கம் எதையும் நடத்தவில்லை. ஆனால், பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படாத போது, வரைமுறைக்குள் கொண்டு வரப்படாத போது, ஏராளமான தவறுகள் ஏற்படுகின்றன.
செய்தித்தாள்களில் குற்றம் தொடர்பான செய்திகள் பெரும்பாலும் செக்ஸ் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. பாலியல் தொழில் என்பதை தவிர்க்கவும், ஒழிக்கவும் முடியாத நிலையில், அதை வரன்முறைப்படுத்துவதில் தவறு இல்லை. உச்சநீதிமன்றமும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது,'' என்றார்.

இப்படியாக விவாதம் நீண்டு கொண்டே இருந்தது. பாலியலைப் பற்றி சமூகத்தின் ஒரு தரப்பு என்ன நினைக்கிறதோ இல்லையோ; பெரும்பான்மை இளைய சமுதாயம் தெளிவாகவே இருக்கிறது.
வேண்டும், வேண்டாம் என்று சொல்லி விட, அது கடைச்சரக்கு இல்லை. தேவையற்ற கட்டுப்பாடு, விதிமீறலுக்கு வழி வகுக்கும். காட்டாற்று வெள்ளமாக கட்டவிழ்த்து விட்டால், கரையை உடைத்து விடும். கவனமாகக் கையாள்வது அவசியம். விவாதத்தில் பங்கேற்றவர்களில் பால்பேதமில்லை. பாலுக்கும், பாலியலுக்கும் அப்பாற்பட்டவர்களாகவே, பேச்சு இருந்தது. யாராகினும் விவாத அரங்கில் பங்கேற்றிருந்தால், இளைய சமுதாயம் தறிகெட்டுத் திரிகிறது என்ற வாக்கியத்தை சந்தேகமில்லாமல் வாபஸ் வாங்கி இருப்பர்!
இனி உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன்