பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

உயிர்ச்சரடு

எனது இடது தோளில் பட்டுத் தெறித்தது
மூன்றாம் தளத்திலிருந்த
சாம்பற் புறாவொன்றின் எச்சம்
அந்த வெண்ணிற நீரிழையுள்
விதைகள் ஏதுமில்லை
இருந்தும் வேர் பரப்பியது.
இடக்கழுத்தின் நரம்பு துளைத்து,
வலச்செவி நுழைந்து,
நாசி வழிந்து,
முதுகெங்கிலும் படர்ந்து,
என்பு ஊடறுத்து,
நாபி துளைத்து,
குறி, குதம் எனப் பரவின வேர்கள்
அக்குளிலும், சிரசிலும்
மெல்லக் கிளைத்தது
மரமொன்று.
யுகம் யுகமாய்த் தொடர்ந்திருந்த
உயிர்ச் சரடு அறுந்ததையெண்ணி
விகசித்தன விருட்சங்கள்.

கதவு
எப்போதிருந்து கதவுகளின் மீது எனக்குப் ப்ரியம் ஏற்பட்டது என்பதை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், பதினொன்றோ, பனிரெண்டாம் வகுப்பிலோ கி.ரா.வின் ''கதவு'' சிறுகதையைப் படிப்பதற்கு முன்பிருந்தே கதவுகள் என்றால் எனக்குக் கொள்ளைப் ப்ரியம். முழுதாக மூடியிராத, ஒருக்களித்தபடி உள்ளே என்ன இருக்கிறது என்ற ஆவலை உந்தித்தள்ளும் விதத்தில் இருக்கும் கதவுகள் மேல் தனி வாத்சல்யமே உண்டு.விசும்பல்கள், சிணுங்கல்கள், மூர்க்கங்கள், மறுதலிப்புகள் என, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு காலத்தின் மௌனசாட்சியாய் நின்று கொண்டிருக்கின்றன கதவுகள்.

ஒருவேளை அப்பச்சியிடம் இருந்து கதவுகளின் மீதான காதல் எனக்குள்ளும் வந்திருக்கலாம். அப்பச்சியைப் பற்றிய பேச்சோ, அப்பச்சியின் பேச்சோ அதில் கதவு பற்றி ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். ''பெரியப்பன் ஒத்தக்கால அண்டக் கொடுத்து நின்னுட்டா, 15 பேர் தள்ளுனாலும் கதவத் திறக்க முடியுமா'' என்பதுதான் அவரையும், கதவையும் இணைத்து நான் கேட்ட முதல் வாக்கியம்.

முழுமையாக நரைத்த தலை. மேலே தூக்கிச் சீவியிருப்பதால், நடுவழுக்கை பெரிதாகத் தெரியாது. இருபுறமும் தூக்கி நிறுத்திய வெண்ணிற மீசையில் எலுமிச்சை நிறுத்தலாம் போலிருக்கும். தீட்சண்யமான கண்கள், சராசரியை விடக் கொஞ்சம் உயரம் குறைவு. ஆயுதம் இல்லாமல் ஐந்து பேரைச் சமாளிப்பாராம். ரெண்டு கையிலும் கம்பெடுத்து சுத்துனா கல்லு வீசினா, தெறிக்கும் என்ற தகவல் அவர் பற்றிய கூடுதல் மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அப்பிச்சி வெளியே கிளம்பும் போது, அம்மத்தா கதவை ஒருக்களித்துப் பிடித்தபடி, அப்பச்சியை நேருக்கு நேர் பார்க்காமல், என்னென்ன வாங்க வேண்டும் என்று சொல்ல, அதைக் கேட்டும் கேட்காத மாதிரி ஒரு சிரிப்புடன் கிளம்பி விடுவார்.ஆனால், வரும்போது அமத்தா சொல்ல மறந்ததையும் சேர்த்தே வாங்கி வந்திருப்பார். அப்பிச்சியுடனான அமத்தாவின் பெரும்பாலான சம்பாஷணைகள், கதவைப் பிடித்துக் கொண்டுதானிருக்கும்.

அப்பிச்சி எந்த வீட்டுக்குப் போனாலும் கதவைத்தான் முதலில் பார்ப்பார். பார்க்கும் போதே என்ன மரம் என்பதையும், எவ்வளவு கனம் என்பதையும் சொல்லி விடுவார். பெரியப்பனுக்கு அப்படி கதவு மேல என்னதான் பிரியமோ தெரியலைப்பா என்பார்கள். இரட்டைக் கதவுகளை விட, அகலமான ஒற்றைக் கதவுகள் அவருக்கு அதிகமாகப்பிடிக்கும். கருகருவென வழவழப்பான மேற்பரப்புடன் கூடிய மர அலமாரி ஒன்று அவர் வசம் இருந்தது. சுவருடன் இல்லாமல் தனித்து இருக்கும்படியான அந்த அலமாரியின் கதவுகளின் அலங்கார வேலைப்பாடு வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகமே.வேறு யாரிடமும் அதன் சாவியை அவர் கொடுத்ததே இல்லை.

தண்ணீர்த் தொட்டி அருகே போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டலின் மீதிருந்தபடி யாரோ ஒருவரின் குடும்ப பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்து கொண்டிருந்தார்.''கட்டில் பாதி, கதவு மீதி அதான்டே கலவி. தா(ழ்)ப்பா சரியில்லனா கதவு திறந்துதான்டா இருக்கும். எல்லாஞ்சரியின்னுஞ் சொல்ல முடியாது! எதுவும் தப்புன்னுஞ் சொல்ல முடியாது. பாத்து நடந்துக்க என்றபடி, அவன் தோளைத் தட்டியபடி சமாதானம் செய்தார். அடுத்த வாரத்திலேயே அவன் கோவித்துக் கொண்டு போன பெண்டாட்டியை திரும்ப அழைத்து வந்து, அப்பச்சியிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனான்.

அது என்னங்க அப்புச்சி, ‘கட்டில் பாதி, கதவு மீதி எனக்குப் புரியலயே என்றேன். புரியும்போது புரியும்டா பேராண்டி என்றவர் சிரித்தபடியே மீசை ஒதுக்கினார்.ஒரு மகாளாய அமாவாசை தினத்தன்று அவர் புகழுடம்பு எய்தினார். அவரை மண்ணுக்குக் கொடுத்து விட்டு திரும்பி ஆசாரி வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது, பொன்னையா ஆசாரி சம்சாரம் தனம்மா விசும்பிக் கொண்டிருந்தது என் காதில் மட்டுமே விழுந்த மாதிரி இருந்தது எனக்கு.

மரித்துப் போன சொற்களைப் பதப்படுத்தியவன்சகி,

ரணத்தில் இருந்து குருதி ஒழுக, நகர்தலுக்கான சாத்தியக்கூறுகள் முடங்கிப் போய்விட்ட, நினைவுகள் தப்பிப் போகும் முன்னரே உறுப்புகள் புசிக்கப்படுவதை உணரும், வேட்டையாடப்பட்ட மிருகத்தின் அவஸ்தை எனக்குள். முனகக்கூட திராணியற்றுப் போய்விட்ட அம்மிருகத்தைப் போலவே என் வார்த்தைகளும் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன அல்லது உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

உனக்கு நினைவிருக்கக்கூடும் பதின்ம வயதில் சக, எதிர்பால் ஈர்ப்புக்காக மற்றவர்கள் மெனக்கெட, எனக்கான ஆயுதமாக சொற்களைக் கூர்தீட்டிக் கொண்டிருந்தேன். நுட்பமும், சிலேடையும், ரஸமும் மிக்க சொற்களால் என்னை நிரப்பிக் கொண்டிருந்தேன் அவற்றில் சிலவற்றை பிரயோகிப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. செறிவு மிக்க சொற்களாலேயே என்னைத் தகவமைத்துக் கொண்டதாக, அப்போது எனக்குப் பட்டது. சதா சொற்களிலேயே களமாடிப் பழகி விட்ட பின், சொப்பனங்கள் கூட சொற்களால் நெய்யப்பட்டிருந்தன. அகங்கைக் குழியில் தேக்கப்பட்ட எண்ணெய், அதீத கவனத்தையும் மீறி விரலிடுக்குகள் வழியே கசிவதைப் போல, எனக்குள் சொற்கள் கசிந்து கொண்டிருந்தன. ஆனால், எனக்குத் தெரியும், என்னை உன்னில் அனுமதிக்க அவை ஒரு காரணமாக இல்லை என்பது. உனக்குச் சொற்கள் பற்றி எவ்வித அக்கறையும் இருந்ததாக என் நினைவில் இல்லை. சூலுற்ற சோளப் பயிர் வாசத்தைப் போல, விவரணத்துக்கு அப்பாலான வாசனையை உன் சொற்கள் கொண்டிருந்தன. அருகிருந்த பொழுதுகளில், உன்னை விட உன் சொற்களை நான் கவனித்ததை, நீ கவனிக்காதது போல் அவதானிப்பாய்.

சொல்லரங்குகளின் முடிவில் என் பெயர் பிரதானப்படுத்தப்படும் போதெல்லாம், உன் இதழ்கள் இடது புறமாய் சற்றே நகர்ந்த பின் இயல்பாகும். பொருள் காண முடியா அப்புன்னகையைச் சந்திக்க நேர்கையில், அந்த குறுகுறுப்பு... ம்ச்சு. நிராயுதபாணி எதிரியை வெல்லவும் முடியாமல், பின் வாங்கவும் தோன்றாமல், கொன்றுவிடமாட்டானா என ஏங்கும் மன நிலையில் இருப்பானே, அப்படித் தோன்றுமெனக்கு. இளவேனிற் காலத்து மதிய நேரமொன்றில் உன் தோட்டலிருந்தோம். தாத்தாப்பூ தலைகளைக் கொய்தபடி, வரப்பில் முழந்தாளின் மீது தாவாய்க்கட்டையை ஊன்றியபடி நீ மவுனித்திருந்தாய். திடீரென என் தலைபற்றி விரல்களால் அளைந்தபடி, உதடு பிரித்தாய்; சொற்கள் பிரவகித்தன. நீ பேசியதின் துவக்கம் நினைவில் இல்லை எனக்கு. ஆனால், மணலோடிய கால்வாயில் பாம்பின் தடம் கூட, அடிவயிற்றை இழுக்குமே அந்த உணர்வு இருந்தது. யாரிடமும் அதிர்ந்தோ, வியாக்கியானமாகவோ பேசியறியாத/அறியப்படாத நீ அன்று பேசியவை, முதிர்ச்சி மிக்க உழவன் ‘விலா பிரிக்கும் லாவகத்துடன் இருந்தன.

பின்னான நாட்களில் அப்படி ஒரு பிரிவு வருமென எதிர்பார்க்கவில்லை இருவரும். ஒருவேளை நீ எதிர்பார்த்திருக்கக்கூடும். அந்த வாக்குவாத நேரங்களில் என்னை மிகவும் தற்காத்துக் கொண்ட போது, உன் சொற்களை என்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது உனக்குத் தெரியுமா? இன்றும் கூட என் ஒவ்வொரு அணுவிலும் அந்தச் சொற்கள் சதா ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கனவில் அம்மாவை நரி இழுத்துச் செல்கையில் அழும் குழந்தை போல, பின்னரவில் என் முகம் கோணுவதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க, என் சொற்சேகரங்கள் உதவுவதில்லை.

சின்னாட்களுக்கு முன், அதை நான் கேள்விப்பட்டேன். ‘கலகலன்னு பேசிட்டே இருப்பா! இப்பல்லாம் யார்கிட்டயும் பேசறதே இல்ல அதுவும் கல்யாணத்துக்கப்புறம் பேசாமடந்தை ஆயிட்டா என்று.

என் சேகரச் சொற்களில் பெரும்பாலானவை மரித்து விட்டன; பதப்படுத்தி வைத்திருக்கிறேன். அவற்றை விற்றுப் பிழைப்பவனாக இருக்கிறேன். உன் இறுதிச் சொற்களை உயிர்ப்புடன் சுமந்தவாறு.